தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 5.1

  • 5.1 அன்பு


        அன்பு என்பது ஊற்றுப்போல் தானாக வெளிப்படும் உணர்வு.
    எல்லா மதங்களும் அன்பையே வலியுறுத்துகின்றன. ‘அன்பே சிவம்’
    என்கிறது சைவ மதம். ‘இறைவன் அன்பாக இருக்கிறார்’ என்று
    கிறித்துவ மதம் கூறுகிறது. அன்பின் அடிப்படையில் அமைந்தது
    பௌத்தம். எல்லோரும் அன்பால் சகோதரத்துவம் பெற
    வற்புறுத்துவது இசுலாம். எனவே தான் வள்ளுவர் - ‘அன்பிற்கும்
    உண்டோ அடைக்குந்தாழ்?’ என்று வினவுகின்றார். இத்தகைய
    சிறப்பு வாய்ந்த அன்பு உடையவர்களே பிற உயிர்கள் மீது அன்பு
    செலுத்துபவர்கள். இவர்களே சான்றாண்மை உடையவர்கள்
    என்கிறார் வள்ளுவர்.

    5.1.1 அன்பும் நட்பும்


        இராமாயணத்தில், காட்டுக்குச் சென்ற இராமன்மீது மிகுந்த அன்பு
    கொண்டவன் குகன் என்னும் வேடன். குகன் வேட்டுவர்களின்
    தலைவன். அந்தப் பகுதியின் ஆட்சியாளன். இருப்பினும் இராமன்
    மீதுள்ள அன்பினால், அடிமை போல் தலை குனிந்து
    வணங்குகிறான். தனது     அன்பை வெளிப்படுத்துவதற்கு
    அடையாளமாகத் தான்
    விரும்பி உண்ணும் மீனையும் தேனையும்
    படைத்து பணிந்து நின்றான். அன்பின் அடையாளமாகக்
    கொடுக்கப்பட்ட அந்தப் பொருள்களை இராமனும் மனம் உவந்து
    ஏற்றுக் கொண்டான்.

        தசரத சக்கரவர்த்தியின் மகன் இராமன், தந்தைக்குப்பின் நாட்டை
    ஆளும் உரிமை உடையவன். சனக மன்னனின் மருமகன். இத்தகைய
    சிறப்பு வாய்ந்த இராமன், காட்டிலே வாழும் வேடனாகிய குகனின்
    அன்புக்கு அடிமையானான். அவனை நண்பனாக மட்டுமல்லாமல்
    சகோதரனாகவும் தம் தம்பியருள் ஒருவனாகவும் ஏற்றுக் கொண்டான்
    இராமன். இராமன் சீதையிடம் குகனை அறிமுகப்படுத்தும்போதும்
    கூட, ‘தீராக் காதலன்’ அதாவது, நீங்காத அன்பு உடையவன் என்று
    குறிப்பிடுகிறான். இது எதைக் காட்டுகிறது? இராமனின்
    நல்இயல்புகளைக் காட்டுகின்றது. இ்தைத்தான் சான்றாண்மை என்று
    குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

        ஒருவரிடம் காணப்படும் ‘அன்பு’ எனும் சக்தி, பிறரிடம் விருப்பத்தை
    ஏற்படுத்தும். அது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும்
    அளவற்ற சிறப்பைத் தரும் என்பது, அன்பைப் பற்றி வள்ளுவர்
    கூறும் கருத்து,


    அன்பு ஈனும் ஆர்வம் உடைமை, அது ஈனும்
    நண்பு என்னும் நாடாச்சிறப்பு



    (குறள்: 74)


        நாம் பிறரிடம் அன்பு உடையவராய் இருந்தால், பிறருக்கு நம்மிடம்
    பழக வேண்டும் என்ற ஓர் ஆர்வத்தை அல்லது விருப்பத்தை அது
    ஏற்படுத்தும், தேடிப்போகாது தானே வரும் ‘நட்பு’ எனும் சிறப்பை
    நமக்குக் கொடுக்கும்.

    5.1.2 அன்பும் பொதுநலமும்


        ‘உன்னைப்போல் பிறரையும் நேசி’ என்பது கிறித்தவர்களின்
    விவிலியம் கூறும் கருத்து. பிறரை நேசிக்க அல்லது விரும்ப
    வேண்டும். அதுவே, இறைவனை அடைவதற்குரிய முதன்மையான
    வழி என்பது இதன் கருத்து. இத்தகைய இயல்பு படைத்தவர்கள்,
    தமக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள். பொது நலமும்
    கொண்டவர்கள். இத்தகைய இயல்பு யாரிடம் அமையும் என்றால்
    சான்றாண்மை உடையாரிடம் அமையும் என்கிறார் வள்ளுவர்.


    அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் ; அன்பு உடையார்,


    என்பும் உரியர், பிறர்க்கு

    (குறள்:72)


    பிறர் மீது அன்பு இல்லாத சுயநலவாதிகள், தாம் பார்க்கும்
    பொருள்களை எல்லாம் ‘தமக்குத் தமக்கு’ எனக் கொள்வர்.
    ஆனால் அன்பு உள்ளத்துள் ஊறி விட்டால், அது எதையும்
    கொடுத்துவிட முந்தும் மனத்தைத் தரும். எனவே பிறர் மீது
    அன்புடையார் தமக்கு உரிய பொருளையும் பிறருக்கு மன
    மகிழ்ச்சியுடன் கொடுத்து மகிழ்வார்கள். இத்தகையோர் தமது
    உடலிற்குப் பாதுகாப்பாக இருக்கும் எலும்பையும் கூடப் பிறருக்குக்
    கொடுப்பார்கள் என்கிறார் வள்ளுவர்.

        நமது உடலில் எலும்பு எவ்வளவு முக்கியமானது என்பதை
    அறிவோம். ஓர் எலும்பு ஒடிந்து விட்டாலோ, இடம் பெயர்ந்து
    விட்டாலோ, நம்மால் சரியாக இயங்க முடியாது. நம் உடலின்
    பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, இயக்கத்திற்கும் தேவையானது எலும்பு,
    அந்த எலும்பையே அன்பின் காரணமாகப் பிறருக்குக்
    கொடுப்பார்கள் சான்றோர்கள்.

        அன்பு உள்ளம் கொண்டவர்கள் சான்றோர்கள், அவர்கள் பொது
    நலம் கருதி எதையும் பிறருக்கு வழங்கும் பண்பு உடையவர்கள்.
    தமது உடலின் பாதுகாப்பைக்கூடப் பொருள்படுத்த மாட்டார்கள்
    என்று சான்றோர்களின் சான்றாண்மை இயல்புகளைக் குறிப்பிடுகிறார்
    வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:56:59(இந்திய நேரம்)