தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 5.2-நாணுடைமை

  • 5.2 நாணுடைமை


        நல்ல பண்புகளை உடைய பெரியோர்கள், நல்லவைகளையே
    செய்வர். தீமை தரும் செயல்களைச் செய்ய மாட்டார்கள். தம்
    மனச்சாட்சிக்கு மாறான செயல்களைச் செய்யத் தயங்குவார்கள்.
    தமக்குப் பொருந்தாத செயல்களில் ஈடுபட அஞ்சுவார்கள். எனவே
    தவறு செய்வதற்கு நாணுவார்கள். தவறு செய்ய மாட்டார்கள். இந்த
    இயல்பு சான்றாண்மை உடையோருக்கு உரிய ஓர் இயல்பாக
    வள்ளுவர் குறிப்பிடுகிறார்.


    5.2.1 நாணமும் அணியும்


        ‘அணி’ என்றால் அழகு அல்லது அணிகலன் என்று பொருள்
    உண்டு. அணிகலனும் அழகு அல்லது சிறப்பு சேர்ப்பதற்கு
    அணியக்கூடிய ஒன்று. ஒரு மனிதனுக்குச் சிறப்பு சேர்க்கின்ற நல்ல
    பண்புகளையும் ‘அணி’ என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

        நல்ல அறிவு ஒழுக்கத்தை உடைய பெரியவர்கள் சான்றோர்கள்,
    அவர்கள் பீடு நடையை உடையவர்கள். தம் மன இயல்பிற்கு
    ஒவ்வாத தவறான செயல்களைச் செய்ய நாணுவார்கள். ஏனென்றால்
    நாணுடைமையை ஒரு சிறந்த அணிகலனாகக் கொண்டு அவர்கள்
    ஒழுகுபவர்கள்.


    அணி அன்றோ, நாண் உடைமை, சான்றோர்க்கு அஃது இன்றேல்


    பிணி அன்றோ பீடுநடை

    (குறள்: 1014)


    சான்றோர்கள் நாணத்தைத் துறந்து வாழ விரும்பமாட்டார்கள்.
    நாணத்தை ஓர் அணியாகக் கருதி வாழ்பவர்கள் நாணத்தைத்
    துறந்து வாழ்வதை ஒரு நோயாகக் கருதுவார்கள். எனவேதான்
    வள்ளுவர், நாணுடைமை என்பது சான்றோர்க்கு ஓர் அணி. அந்த
    அணிகலன் இல்லை என்றால் அவர்கள் பெருமிதமாக நடக்கும் பீடு
    நடை ஒரு பிணியாக மாறும் என்று குறிப்பிடுகிறார்.

        தவறு செய்கின்ற ஒருவன், பிறரைப்போல், தலைநிமிர்ந்து நடந்தால்
    அவனைப்பார்த்து கூச்சம் இல்லாமல் இப்படித் தலைநிமிர்ந்து
    நடக்கிறானே, இவனுக்குக் கொஞ்சம் கூட வெட்கம் நாணம் எதுவும்
    இல்லையா என்று     கேலி செய்வார்கள். எனவேதான்
    நாணுடைமையை அணியாகக் கொண்டு வாழும் சான்றோர், நாணம்
    உடையவர்களாகவே வாழ்வார்கள். நாணம் இல்லாமல் வாழ்வதை
    ஒரு நோயாகக் கருதுவார்கள் என்கிறார் வள்ளுவர்.

    5.2.2 நாணமும் உயிரும்


        நாணத்தை அணிகலனாகக் கொண்டு வாழும் சான்றோர்கள், அதைத்
    தம் உயிரினும் மலோகக் கருதிப் பேணிப் பாதுகாத்து வாழ்வார்கள்.
    தமக்குரிய சிறந்த பண்புகளில் ஒன்றாக நாணத்தைக் கொள்வதால்,
    நாணத்தைக் காப்பாற்றுவதற்காகத் தங்கள் உயிரையும் விட்டு
    விடுவார்கள். ஆனால், தம் உயிரைக் காக்கும் பொருட்டாகத் தங்கள்
    நாணத்தை ஒரு காலத்திலும் விடமாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.


    நாணால் உயிரைத் துறப்பர்; உயிர்ப்பொருட்டால்
    நாண் துறவார் நாண் ஆள்பவர்



    (குறள்:1017)


    மானம் பெரியதா? உயிர் பெரியதா என்று கேட்டால், மானம்தான்
    பெரியது என்பார்கள் சான்றோர்கள். இவ்வாறு மன உணர்வு
    கொண்ட சான்றோர்கள் நாணம் உடையவர்கள். அவர்கள் நாணம்
    இழக்கக்கூடிய செயல்களைச் செய்யமாட்டார்கள். எனவே,
    நாணத்தைக் காப்பாற்ற உயிரை விடுவார்களே தவிர, உயிரைக்
    காப்பாற்ற நாணத்தை இழக்கமாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:57:03(இந்திய நேரம்)