தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 5.4-கண்ணோட்டம்

  • 5.4 கண்ணோட்டம்


        ‘கண்ணோட்டம்’ என்பதற்கு இரக்க உணர்வு என்று பொருள்
    கூறுவர். இந்த இரக்க உணர்வு எப்படிப் பிறக்கும்? யாரிடம்
    பிறக்கும்?

        சிலர், யாரைப் பார்த்தாலும் வெறுப்பார்கள். யாரிடமும் இரக்கம்
    காட்டுவது இல்லை. சிலர், வேறுபாடு இல்லாமல், எல்லோரிடமும்
    இரக்கம் காட்டுவர். வேறு சிலர் அப்படியல்ல. யாரிடம் கடுமையாக
    இருக்க வேண்டுமோ அவர்களிடம் கடுமையாகவும், யாரிடம்
    இரக்கம் காட்ட வேண்டுமோ அவர்களிடம் இரக்கமும் காட்டுவர்.
    இவர்களைத் தடுமாற்றம் இல்லாத நிதானத் தன்மை உடையோர்
    என்போம்.

        மோசிகீரனார் என்னும் தமிழ்ப் புலவர், தகடூர் எறிந்த சேரமான்
    இரும்பொறை என்ற மன்னனைப் பார்ப்பதற்காகச் சென்றார். அவர்
    சென்றபொழுது மன்னன் அங்கு இல்லை. தான் வெகு தூரம் நடந்து
    வந்த களைப்பால் முரசு கட்டில் என்று அறியாது அதில் படுத்துத்
    தூங்கி விட்டார். அங்கு வந்த அரசன், யாரோ ஒருவர் முரசு
    கட்டிலில் தூங்குவதைப் பார்த்தான். மிகுந்த கோபத்துடன் அருகில்
    சென்றான். மோசிகீரனார் என்னும் தமிழ்ப்புலவர் படுத்துத் தூங்கிக்
    கொண்டிருப்பதைப் பார்த்தான். ஓங்கிய தன் வாளைக் கீழே
    போட்டான். நடந்து வந்த களைப்பால் தூங்கும் புலவர் மீது
    இரக்கம் கொண்டான். வெண்சாமரையை எடுத்து அவருக்கு
    வீசினான். இரக்கம் காட்ட வேண்டியவருக்கு இரக்கம் காட்டிய
    மன்னனின் இத்தகைய பண்பையே கண்ணோட்டம் என வள்ளுவர்
    சுட்டுகிறார். இத்தகைய பண்பு உடையவர்களே சான்றோர்கள்.

    5.4.1 பாடலும் இசையும்


        சிலர் பாடும்போது மெய்மறந்து கேட்கிறோம். தலையை அசைத்து
    ரசிக்கிறோம். நம்மை அறியாமலே நம் கை தாளம் போடுகிறது.
    இதற்கு என்ன காரணம்? நாம் கேட்கும் பாடல், தாளம் தப்பாமல்,
    இசையோடு ஒத்துச் செல்கிறது. இத்தகைய பாடலும் இசையும்
    ஒன்றோடு ஒன்று இயைந்து செல்லாவிட்டால் அதைப்பாடல் என்று
    சொல்வதில்லை. அதைக் கேட்க விருப்பமின்றி நம் காதுகளைப்
    பொத்திக் கொள்கிறோம்.

        எனவே பாடல் என்றால் அது இசையோடு பொருந்தி இருக்க
    வேண்டும். இசை இல்லாத பாடல், பாடல் என்று கொள்ள இயலாது.
    இசைக்கும், பாடலுக்கும் உள்ள இந்தத் தொடர்பைக்
    கண்ணோட்டத்திற்கும்     கண்ணுக்கும்     தொடர்புபடுத்திக்
    குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

    பண் என்ஆம், பாடற்கு இயைபு இன்றேல் கண்என்ஆம்

    கண்ணோட்டம் இல்லாத கண்

    (குறள்: 573)


        ஒரு மனிதன் இந்த உலகில் பெற்ற பேறுகள் எல்லாவற்றிலும்
    கண்பார்வை பெறல் சிறப்பு என்பர். பார்வை இழந்த ஒருவன்,
    ஏனைய உறுப்புகளும், பிற உணர்வுகள் எல்லாம் பெற்றும் பார்க்க
    முடியாத ஒரு குறையையே பெருகுறையாகக் கருதுகிறான். எனவே,
    உறுப்புகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கண் கருதப்படுகிறது.
    இல்லையா? எனவேதான் வள்ளுவர், தான் எவற்றையெல்லாம்
    மனிதனுக்கு முக்கியமான ஒன்றாகக் கருதி வற்புறுத்த
    விரும்புகிறாரோ அவற்றையெல்லாம் கண்ணோடு ஒப்பிட்டுக்
    கூறுகிறார். கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்த வள்ளுவர்,
    அதனைக்     கண்ணோடு     ஒப்பிடுகிறார். அதைப்போல்,
    கண்ணோட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்பிய
    வள்ளுவர், கண் இருப்பதின் பயனே கண்ணோட்டம் என்று
    குறிப்பிடுகிறார்.

        பார்க்கும் தன்மை இல்லாவிட்டால் கண் பெயரளவில் இருந்து
    என்ன பயன்? ஒரு பயனும் இல்லை. அதைப்போலத்தான்
    கண்ணோட்டம். ஒருவனுக்கு ஒளி வழங்குவதே, அதாவது பார்வை
    வழங்குவதே கண்ணோட்டம் என்கிறார் வள்ளுவர். எனவே,
    கண்ணோட்டம்தான் கண்ணின் ஒளி என்று குறிப்பிடுகிறார்.

        மேலும் இசையில்லாத பாடல் பாடலாகக் கருதப்படமாட்டாது.
    அதைப்போலத்தான், கண்ணோட்டம் இல்லாத கண், கண் அல்ல
    என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். இத்தகைய கண்ணோட்டம் என்ற
    தன்மை யாரிடம் அமைந்திருக்கும்? சான்றோரிடம் அமைந்திருக்கும்.
    எனவே சான்றோர்க்கு உரிய இயல்பாகக் கண்ணோட்டத்தைக்
    குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

    5.4.2 நஞ்சும் நட்பும்


        இரங்க     வேண்டியவர்களுக்கு     இரங்குதலும், தண்டிக்க
    வேண்டியவரைத் தண்டித்தலும் உடையவர்களே கண்ணோட்டம்
    உடையவர்கள். இவர்கள் பிறர் விரும்பத்தக்க நாகரிகம்
    உடையவர்கள். இத்தகைய இயல்பு படைத்தவர்கள். தம்மோடு மிக
    நெருங்கிப் பழகியவர்கள் தமக்கு முன்னால் இருந்து நஞ்சைக்
    கலந்து அதை உண்ணுமாறு வேண்டினாலும் நட்புக்காக உண்பார்கள்.


    பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
    நாகரிகம் வேண்டுபவர்



    (குறள்:580)


    (நயம் = விருப்பம்)

    இத்தகைய இயல்பு யாரிடம் அமையும்? சான்றோரிடம் என்கிறார்
    வள்ளுவர். இவர்களை நயத்தக்க நாகரிகம் கொண்டவர்கள்
    என்கிறார். ‘நாகரிகம்’ உடையவரை ஆங்கிலத்தில் ‘Civilized
    Person’ என்கிறார்கள். பண்பட்ட இயல்பு படைத்தவன் என்றும்
    குறிப்பிடுகின்றனர். பண்பட்ட இயல்பு படைத்த ஒருவரையே
    வள்ளுவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் என்று குறிப்பிடுகிறார்.

        எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய நற்றிணையில் வள்ளுவரின்
    இத்தகைய கருத்துக்கு ஏற்ப ஒரு கருத்து இடம்பெற்றுள்ளது. நட்பு
    உடைய ஒருவர், கண்ணோட்டம் உடைய ஒருவருக்கு எதிரே
    சென்று நஞ்சைக் கலந்து கொடுத்தாலும் மிகுந்த நட்புடைய
    சான்றோர், அது நஞ்சு எனத் தெரிந்திருந்தும் அதனை உண்டு,
    மேலும் அவரோடு நட்பு கொள்வர்.


        முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
        நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்

    நற்றிணை: பாடல் 355 வரிகள் 6-7


    (முந்தை = முன்னால்; நட்டோர் = நண்பர்)

    எனவே, நண்பர்கள் என்று தம்மிடம் நெருங்கிப் பழகுபவர்கள்
    எதைக் கொடுத்தாலும், அது நஞ்சாக இருந்தாலும்கூட நாகரிகம்
    கருதி உண்ணும் சான்றாண்மை உடைய மக்கள் இருந்திருக்கிறார்கள்.
    அவர்கள் நட்புக்குச் சிறப்பு கொடுத்து வாழ்ந்தார்கள் என்கிறார்
    வள்ளுவர்.

        நமது அன்றாட வாழ்க்கையில் ‘நாகரிகம்’ என்ற சொல் பல
    நிலையில், பல பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர்
    உணவு அருந்திக் கொண்டிருக்கும் பொழுது இன்னொருவர்
    வந்தால், அவரையும் உணவுக்கு அழைக்க வேண்டும் என்பது
    நாகரிகமாகக் கருதப்படுகிறது இது நமது பண்பாட்டுக் கூறாகவும்
    காணப்படுகிறது. எனவே, நமது பண்பாட்டுக் கூறாகிய நாகரிகம்
    கொண்டோர் சான்றோர்கள். அத்தகைய சான்றோர்களையே
    வள்ளுவர், நட்பு என்ற முறையில் நஞ்சைக் கொடுத்தாலும்
    உண்பார்கள் என்று குறிப்பிடுகிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:57:11(இந்திய நேரம்)