தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 5.3-ஒப்புரவு

  • 5.3 ஒப்புரவு


        ‘ஒப்பு’ என்றால் சமம் என்று பொருள். ‘ஒப்புரவு’ என்றால்
    பிறரையும் தமக்குச் சமமாகக் கருதி அவர்களுக்கு இயன்ற அளவு
    உதவுதல். உலக நடையுடன் ஒத்து வாழ்தல், பகிர்ந்து உண்டு
    வாழ்தல் என்று பலபொருள்படும். ஒப்புரவு என்ற தலைப்பில்
    வள்ளுவர் கூறும் கருத்துகள், அவரது சமதர்மக் கோட்பாட்டைக்
    குறிப்பிடுகிறது என்பர். இத்தகைய ஒப்புரவு எனும் இயல்பு
    உடையவர்களையே வள்ளுவர் சான்றோர் என்று குறிப்பிடுகிறார்.
    சான்றாண்மைப் பண்புகளில் ஒன்று ஒப்புரவு.

    5.3.1 கைம்மாறும் உதவியும்


        மழை பெய்யாவிட்டால் ஒரு புல் கூட முளைக்காது. வானுலகத்தில்
    வாழும் தேவர்களுக்குக் கூட நாள்தோறும் நடைபெறும் வழிபாடுகள்
    கூட நடைபெறாது. பசியால் மக்கள் இறந்து விடுவார்கள். தானம்,
    தவம் போன்ற செயல்பாடுகள் கூடத் தடைபடும். ஒழுக்கத்தைக் கூட
    எதிர்பார்க்க இயலாது. எனவே, உலகத்தில் மனிதன் உயிர்
    வாழ்வதற்கு மழை மிகவும் முக்கியமானது என்பது புலப்படும்.

        உணவுகளை விளைவித்துத் தருவதோடு, தானே உணவாகவும்
    இருக்கும் சிறப்பு மழைக்கு உண்டு. மனித வாழ்க்கையில் இத்தகைய
    சிறப்பையும், முக்கியத்துவத்தையும் பெற்றிருக்கும் மழைக்கு நாம்
    என்ன மறு உதவி (கைம்மாறு) செய்கிறோம்? ஒன்றும்
    செய்வதில்லை. இருந்தாலும், எந்த ஒரு மறு உதவியையும்
    எதிர்பார்க்காமல், மழை தன் கடமையைச் செய்கின்றது. மழையைப்
    போன்று மறு உதவி எதையும் எதிர்பார்க்காமல் தம் கடமைகளைச்
    செய்வார்கள் சான்றாண்மை உடையோரும் என்கிறார் வள்ளுவர்.


    கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
    என் ஆற்றும் கொல்லோ உலகு?



    (குறள்: 211)


    (கைம்மாறு = மறு உதவி; மாரி = மழையைத் தரும் மேகம்; மழை)

    ஊரோடு ஒத்து வாழும் சான்றோர்கள், எந்தவித மறு உதவிகளையும்
    எப்பொழுதும் எதிர்பார்க்க மாட்டார்கள். அது அவர்களது இயல்பு.
    அவர்கள் மழையைத் தரும் மேகத்தைப் போன்றவர்கள். மேகம்
    எதையும் எதிர்பார்த்து மழை பொழிவதில்லை. சான்றோர்கள்
    இயல்பும் அவ்வாறே என்கிறார் வள்ளுவர்.

        மழை பெய்வதைப் பற்றிக் கூட வேடிக்கையாக ‘நல்லவர்
    பொருட்டே’ மழை பெய்கிறது. நல்லவர்கள் எங்கிருக்கிறார்களோ
    அங்கு எல்லாம் மழை பெய்யும் என்பார்கள். எனவே நல்ல
    பண்புகளைக் கொண்ட     நல்லவர்களாகிய சான்றோர்களை
    மழையோடு ஒப்பிடுகிறார் வள்ளுவர்.

        எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது தம் கடமையைச் செய்யும்
    சான்றோர்களுக்கு ‘ஒப்புரவு’ என்ற நல்ல இயல்பு உள்ளது.

    5.3.2 தக்காரும் உதவியும்


        ‘பாத்திரம் அறிந்து பிச்சை இடு’ என்பது ஒரு பழமொழி. இங்குப்
    பாத்திரம் என்பது தகுதி அல்லது அளவு. தேவை என்ற
    பொருளையே குறிப்பிடும். ஒருவருக்கு என்ன தேவையோ, அதை
    அறிந்தே உதவி செய்ய வேண்டும். தேவை உள்ளவனுக்கு
    உதவாமல், தேவை இல்லாதவனுக்கு உதவினால் அதனால் எந்தப்
    பயனும் ஏற்படாது.

        வயிறார நன்கு உண்டு, பசியே இல்லாமல் இருப்பவனுக்கு அவன்
    உண்ணுவதற்கு உரிய உணவைக் கொடுத்தால் அவன் அதை
    என்ன செய்வான்? உண்ணுவானா? நிச்சயமாக உண்ணமாட்டான்.
    யாருக்கும் பயன் இல்லாத வகையில் குப்பைத் தொட்டியிலேயோ
    வெளியிலோ வீசி எறிவான். மாறாக, மிகவும் பசியால் வருந்தும்
    ஒருவனுக்கு அவனது பசியை அறிந்து சிறிதளவு உணவு
    கொடுத்தாலும்கூட, பசியால் வருந்திய அவனது துன்பம் தீரும்.
    அவன் உயிர் காப்பாற்றப்படும். எனவேதான் தேவை அறிந்து
    உதவி செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.


    தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
    வளோண்மை செய்தற் பொருட்டு



    (குறள்:212)


    (தாள் = முயற்சி; ஆற்றி = செய்து; தக்கார் = தகுதி உடையவர்;
    வளோண்மை
    = நன்மை)

    தனது சுய முயற்சியினாலும், உழைப்பினாலும் கிடைத்த செல்வம்,
    தகுதி உடையவர்களுக்கு உதவிகள் செய்வதற்காகவே. அச்செல்வம்
    வீணாகாமல் பயன்தரும் வகையில் உதவிகள் செய்ய வேண்டும்.

        தானே முயற்சி செய்து ஈட்டிய செல்வத்தையே தக்காருக்கு
    உதவுமாறு வேண்டுகிறார் வள்ளுவர். மிகவும் பக்குவமாகவும்
    நுணுக்கமாகவும் இந்தக் கருத்தை வள்ளுவர் குறிப்பிடுகிறார். சிலர்,
    பிறர் ஈட்டிய பொருளை எடுத்துத் தானம் செய்வார்கள். தனது
    பொருள் அல்லது சேமிப்பு கொஞ்சம்கூட பாதிக்காமல், பிறர்
    பொருளை எடுத்து மிகவும் தாராளமாகப் பிறருக்கு வழங்குவார்கள்.
    இத்தகைய சுயநலவாதிகளைக் கண்டு அஞ்சியே வள்ளுவர், தான்
    முயற்சி செய்து கிடைத்த செல்வத்தையே பிறருக்கு உதவுமாறு
    வேண்டுகிறார்.

        தனது சுய முயற்சியால் பொருள் ஈட்டி, அந்தப் பொருளைத்
    தக்காருக்குக் கொடுப்பவர் யார்? சான்றாண்மை கொண்ட
    சான்றோர்கள். மேலும். ஒருவன் பொருள் ஈட்டுவதே பிறருக்கு
    உதவி செய்வதற்குத்தான் என்றும் வள்ளுவர் சுட்டுகிறார்.

        உயிரினங்களிலேயே மனிதன் மட்டுமே தனக்கு உரிய உணவை
    உற்பத்தி
    செய்கிறான். தான் உற்பத்தி செய்யும் உணவு தனக்கு
    மட்டும் அல்லாமல் பிறருக்கும் பயன்படும வகையிலும் உற்பத்தி
    செய்கின்றான். அதைப்போலத்தான் தான் ஈட்டும் பொருள்
    தனக்கு மட்டுமல்ல அது பிறருக்கும் பயன்படவேண்டும் என்று
    குறிப்பிடுகிறார் வள்ளுவர். தான் ஈட்டிய பொருளைத் தகுதி
    வாய்ந்த பிறருக்கு உதவுகின்ற சான்றாண்மையைப் பண்பு
    சான்றோர்க்கு உரியது என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.


    தன் மதிப்பீ்டு : வினாக்கள் : I

    1. சான்றாண்மை இயல்புகளாக வள்ளுவர் எவற்றைக்
      குறிப்பிடுகின்றார்?
    1. அன்பின் சிறப்பினை வள்ளுவர் எவ்வாறு
      குறிப்பிடுகின்றார்?
    1. தமக்குப் பாதுகாப்பாக இருக்கும் எலும்பையே
      பிறருக்குக் கொடுப்பவர்கள் யார்?
    1. சான்றோர்க்கு எது பிணி?
    1. சான்றோரையும் மழையையும் ஒப்பிட்டுக் கூறக்
      காரணம் என்ன?
    1. எத்தகையோருக்கு உதவ வேண்டுமென வள்ளுவர்
      கூறுகின்றார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:57:07(இந்திய நேரம்)