தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111l2-6.1 மாறுபடு புகழ்நிலை அணி

  • 6.1 மாறுபடு புகழ்நிலை அணி
        பாடல் கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்குக் கவிஞர்
    கையாண்ட அணிகள் பல. அவற்றுள் மாறுபடு புகழ்நிலை
    அணியும்
    ஒன்றாகும். கவிஞர் பாடலில் ஒன்றைப் பழித்துக்
    கூற நினைக்கிறார். ஆனால் அதை வெளிப்படையாகக் கூற
    முடியாத நிலை. எனவே தாம் மனத்தில் கருதிய அதனை
    மறைத்து, வேறொன்றைப் புகழ்ந்து கூறுவதன் வாயிலாக,
    அதனைக் குறிப்பாகப் புலப்படுத்திக் காட்ட விழைகிறார்.
    இம்முறையில் பாடப்படும் அணியே மாறுபடு புகழ்நிலை அணி
    ஆகும்.
    6.1.1 மாறுபடு புகழ்நிலை அணியின் இலக்கணம்
         கவிஞர், தாம் சொல்லக் கருதிய பொருளை மறைத்து
    அதனைப் பழித்தற்கு வேறு ஒன்றினைப் புகழ்ந்து உரைப்பது
    மாறுபடு புகழ்நிலை என்னும் அணி ஆகும்.
    கருதிய பொருள் தொகுத்து ஆங்குஅது பழித்தற்கு வேறுஒன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை
    (தண்டி-82)

    ( தொகுத்து - மறைத்து )
    எடுத்துக்காட்டு:

    இரவுஅறியா; யாவரையும் பின்செல்லா; நல்ல
    தருநிழலும் தண்ணீரும் புல்லும் - ஒருவர்
    படைத்தனவும் கொள்ளா; இப் புள்ளிமான் பார்மேல் துடைத்தனவே அன்றோ துயர்
    (இரவு- இரத்தல், பிச்சைஎடுத்தல்; தரு - மரம்.)
    இப்பாடலின் பொருள்

        இந்தப் புள்ளிமான்கள் பிறரிடம் சென்று இரத்தலை
    அறியமாட்டா; எவரிடத்தும் தம் குறைகளைச் சொல்லிப் பின்
    தொடர்ந்து செல்லமாட்டா; ஒருவர் படைத்தனவாகிய நல்ல
    மரத்தின் நிழலையும், குளிர்ந்த நீரையும், புல்லையும் கொள்ளா;
    அவற்றைத் தாமே பெறும்; ஆதலின், இம்மான்கள் இந்தப்
    பூமியின்மேல் துன்பத்தில் இருந்து நீங்கியன அன்றோ?


    . அணிப் பொருத்தம்

        இப்பாடலில் கவிஞர் பழித்துக் கூறக் கருதிய பொருள்,
    'செல்வர் பின் சென்று இரந்து, அவரிடம் தம் குறைகளைச்
    சொல்லி, அவர் நிழலில் தங்கி உயிர் வாழும் இரவலரை' ஆகும்.
    ஆனால் கவிஞர் அக்கருத்தை மறைத்துப் புள்ளிமானைப் புகழ்ந்து
    கூறுவதன் வாயிலாக அதனைப் புலப்படுத்தியமையால், இது
    மாறுபடு புகழ்நிலை அணி ஆயிற்று.

        மாறுபடு புகழ்நிலை அணியும், முன்பு இலேச
    அணியின் பிரிவாகக் கூறிய அணிகளில் ஒன்றாகிய புகழ்வது
    போலப் பழித்திறம் புனைதலும் ஒன்று போலத் தோன்றும்.
    ஆனால் இரண்டிறகும் வேறுபாடு உள்ளது.

        மாறுபடு புகழ்நிலை, ஒன்றனைப் புகழ்வது, அதனோடு
    எவ்விதமான தொடர்பும் இல்லாத பிறிது ஒன்றற்குப்
    பழிப்பாய்த்
    தோன்றுவது ஆகும். புகழ்வது போலப் பழித்திறம்
    புனைதலோ, ஒன்றனைப் புகழ்வது, அதற்கே பழிப்பாய்த்
    தோன்றுவது ஆகும்.

        மாறுபடு புகழ்நிலைக்கு ஈண்டுக் காட்டிய 'இரவறியா' என்று
    தொடங்கும் பாடலில் மானை வெளிப்படையாகப் புகழ
    அப்புகழ்ச்சி, இரவலர்க்குப் பழிப்பாய்த் தோன்றக் காணலாம்.

        புகழ்வது போலப் பழித்திறம் புனைதலுக்குச் சான்றாகக்
    காட்டப்பட்ட 'மேய கலவி' என்று தொடங்கும் பாடலில் தலைவி,
    'புணர்ச்சியின்போது, தலைவன் என்னுடைய மென்மைத் தன்மை
    கெடாதவாறு நடந்து கொள்கிறான்' என்று அவனைப் புகழ்ந்து
    கூறுகிறாள். இவ்வாறு புகழ்ந்து கூறுவது, 'கூடும் காலத்தில்
    மென்மைத் தன்மை கெடுமாறு கூடவேண்டியிருக்க, அங்ஙனம்
    கூடும் தன்மையை அவன் சிறிதும் அறியாது இருக்கின்றானே'
    என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்தலின் அவனுக்குப்
    பழிப்பாயிற்று.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 22:01:27(இந்திய நேரம்)