தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111l2-6.7. சங்கீரண அணி

  • 6.7 சங்கீரண அணி
         ஒரு பாடலில் ஓர் அணி மட்டுமே பயின்று
    வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பெரும்பாலும் ஓர்
    அணி அமையுமாறே பாடல் கவிஞர்களால் பாடப்படுகிறது.
    சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் அமையுமாறும்
    கவிஞர்கள் பாடலைப் புனைவது உண்டு. இவ்வாறு ஒரு பாடலில்
    பல அணிகள் கலந்து வரும்போது அப்பாடலின் பொருள், அழகு
    மிக்குத் திகழக் காணலாம். இதனால் பல அணிகள் கலந்து
    வருவதையே தனி ஓர் அணியாகக் கூறினர் அணி இலக்கண
    நூலார்.

    6.7.1 சங்கீரண அணியின் இலக்கணம்
         மேலே கூறப்பட்ட தன்மை முதலான அணிகள் பலவும்
    தம்முள்ளே கலந்து ஓரிடத்திலே வருமாறு சொல்லப்படுவது
    சங்கீரணம் (கலப்பு) அணி ஆகும்.


    மொழியப் பட்ட அணிபல தம்முள்
    தழுவ உரைப்பது சங்கீ ரணமே
    (தண்டி, 89)
    சங்கீரணம் என்பதற்குக் கலப்பு என்று பொருள்.

    (மொழியப்பட்ட அணி - தன்மை அணி முதல் வாழ்த்து
    அணி வரை கூறப்பட்ட முப்பத்து மூன்று அணிகள்.)

    எடுத்துக்காட்டு

    தண்துறைநீர் நின்ற தவத்தால் அளிமருவு
    புண்டரிகம் நின்வதனம் போன்றதால்; - உண்டோ? பயின்றார் உளம்பருகும் பால்மொழியாய்! பார்மேல் முயன்றால் முடியாப் பொருள்
    (அளி - வண்டு, கருணை; புண்டரிகம் - தாமரை;
    வதனம் - முகம்; பார் - உலகம்.)

    இப்பாடலின் பொருள்

         அணைந்தாருடைய உள்ளத்தை வவ்வும் பால் போன்ற
    இனிய சொல்லை உடைய தலைவியே! குளிர்ந்த நீர்த் துறையிலே
    நின்று செய்த தவத்தினால் வண்டுகள் பொருந்திய தாமரை,
    கருணை பொருந்திய நின் முகம் போன்ற தோற்றம்
    உடையதாயிற்று. இவ்வுலகில் முயற்சி செய்தால் அடைய
    முடியாத பொருள் எதுவும் இல்லை.

    . அணிப்பொருத்தம்

         இப்பாடலில் தற்குறிப்பேற்ற அணி, ஏது அணி, சிலேடை
    அணி, உவமை அணி, வேற்றுப்பொருள் வைப்பு அணி,
    சுவை அணி என்னும் ஆறு அணிகள் கலந்து வந்தள்ளன.

         1) 'தண்துறைநீர் நின்ற தவம்' என்பதில் தற்குறிப்பேற்ற
    அணி அமைந்துள்ளது. தாமரை நீரின் மேல் மலர்ந்து நிற்பது
    இயல்பாக நிகழ்கின்ற ஒன்று. ஆனால் கவிஞர் தலைவியின்
    முகத்தைப் போலத் தோற்றம் பெறுவதற்காகத் தாமரை தண்ணீரில்
    நின்று தவம் செய்தது போல உள்ளது எனத் தம்முடைய
    குறிப்பை ஏற்றிக் கூறினமையால் தற்குறிப்பேற்றம் ஆயிற்று.

        2) 'தவத்தால்' என்பதில் ஏது அணி அமைந்துள்ளது.
    ஏதேனும் ஒரு பொருள் திறத்து இதனால் இது நிகழ்ந்தது
    என்று காரணத்தைச் சிறப்பாக எடுத்துச் சொல்வது ஏது என்னும்
    அணி ஆகும். தாமரை மலரானது நீரில் நின்று செய்த
    தவத்தாலேயே தலைவியின் முகத்தைப் போன்ற தோற்றம்
    பெற்றது என்று கூறப்பட்டதால் ஏது அணி ஆயிற்று.

         3) 'அளிமருவு' என்பதில்     சிலேடை அணி
    அமைந்துள்ளது. இத்தொடர் தாமரைக்கும் தலைவிக்கும்
    சிலேடையாக அமைக்கப்பட்டுள்ளது. இத்தொடரானது தாமரையின்
    மேல் செல்லுங்கால் 'வண்டுகள் பொருந்திய' என்றும், முகத்தின்
    மேல் செல்லுங்கால், 'கருணை பொருந்திய' என்றும் இருவகைப்
    பொருள்படும். (அளி - வண்டு, கருணை.)

         4) 'புண்டரிகம் நின்வதனம் போன்றது' என்பதில் உவமை
    அணி அமைந்துள்ளது. இது பண்பு உவமை ஆகும்.

         5) 'பார்மேல் முயன்றால் முடியாப் பொருள் உண்டோ?'
    என்பதில் வேற்றுப்பொருள் வைப்பு அணி அமைந்துள்ளது.
    இப்பாடலில், 'தாமரை நீரிலே நின்று தவம் செய்து தலைவியின்
    முகத்தைப் போன்ற தோற்றத்தைப் பெற்றது' என்று கூறியிருப்பது
    சிறப்புப் பொருள் ஆகும். இச் சிறப்புப் பொருளை, 'உலகத்தில்
    முயற்சி செய்தால் அடைய முடியாத பொருள் எதுவும் இல்லை'
    என்ற பொதுப்பொருள் கொண்டு முடித்துக் கூறியமையால்
    வேற்றுப்பொருள் வைப்பு அணி ஆயிற்று.

         6) 'பயின்றார் உளம்பருகும் பால்மொழியாய்' என்பதில்
    சுவை அணி அமைந்துள்ளது.

         இவ்வாறு இப்பாடலில் ஆறு அணிகள் கலந்து
    வந்திருப்பதால் இது சங்கீரண அல்லது கலப்பு அணி
    ஆயிற்று.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 22:01:52(இந்திய நேரம்)