தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111l5-6.9 தொகுப்புரை

  • 6.9 தொகுப்புரை
        இதுகாறும் இப்பாடத்தில் மாறுபடு புகழ்நிலை அணி,
    புகழாப் புகழ்ச்சி அணி, நிதரிசன அணி, புணர்நிலை அணி,
    பரிவருத்தனை அணி, வாழ்த்து அணி, சங்கீரண அணி, பாவிக
    அணி ஆகிய எட்டு அணிகளைப் பற்றி விளக்கமாகப்
    பார்த்தோம். கவிஞர், ஒன்றைப் பழித்தற்கு வேறு ஒன்றைப்
    புகழ்ந்து உரைப்பது மாறுபடு புகழ்நிலை அணி ஆகும்.
    ஒன்றைப் பழித்துக் கூறுவது, பிறிது ஒன்றற்குப் புகழாய்த்
    தோன்றுவது புகழாப் புகழ்ச்சி அணி ஆகும். ஒரு
    பொருளின்கண் நிகழும் நிகழ்ச்சியின் பயன், பிறிது ஒரு
    பொருளுக்கு நன்மையோ தீமையோ புலப்பட நிகழ்வதாகச்
    சொல்லுவது நிதரிசன அணி ஆகும். பாடலில் கூறப்படும் இரண்டு
    பொருளுக்கும் பொதுவான ஒரு வினை பற்றிய சொல்லையோ
    அல்லது பண்பு பற்றிய சொல்லையோ முடிக்கும் சொல்லாக
    அமைத்துக் கூறுவது புணர்நிலை அணி எனப்படும். ஒரு
    பொருளைக் கொடுத்து, வேறு ஒரு பொருளைக் கைம்மாறாகக்
    கொள்ளும் செய்தியைக் குறிப்பிடுவது பரிவருத்தனை அணி
    ஆகும். வாழ்க, வாழ்க என்று வாழ்த்திப் பாடுதலைப்
    பொருண்மையாகக் கொண்டது வாழ்த்து அணி. பல வகையான
    அணிகளும் கலந்து வருமாறு பாடுவது சங்கீரண அணி ஆகும்.
    தனமை முதல் வாழ்த்து வரை உள்ள முப்பத்து நான்கு
    அணிகளும் தனிநிலைச்     செய்யுளில் அமைத்துப்
    பாடப்படுவன ஆகும். பொருளணியியலின் இறுதி அணியாகக்
    கூறப்படும் பாவிக அணியோ, தொடர்நிலைச் செய்யுள் என்று
    கூறப்படும் ஒரு பெரிய காப்பியம் முழுவதும் ஊடாடி
    நிற்கும் கருத்தைப் பற்றியதாகக் கூறப்படுகிறது. இராமாயணம்,
    பாரதம், அரிச்சந்திர புராணம் மற்றும் சிலப்பதிகாரம் ஆகிய
    கதை தழுவிய காப்பிய நூல்களில் பாவிக அணி
    சிறப்பாக அமைந்துள்ளது. இவை யாவும் இப்பாடத்தின்
    வாயிலாக அறியப்பட்டன.


    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1

    பரிவருத்தனை அணியின் இலக்கணம் யாது?

    2

    பரிவருத்தனை அணி அமைந்த திருக்குறள் யாது?

    3

    வாழ்த்து அணி என்றால் என்ன?

    4

    சங்கீரண அணியின் இலக்கணம் யாது?

    5

    சங்கீரண அணிக்குச் சான்றாகக் காட்டிய பாடலில் அமைந்துள்ள அணிகள் மொத்தம் எத்தனை? அவை யாவை?

    6

    பாவிக அணியின் இலக்கணம் யாது?

    7

    இராமாயணத்தில் ஊடாடி நிற்கும் காப்பியப்
    பண்பு யாது?

    8

    'பொறையில் சிறந்த கவசம் இல்லை' -
    இக்காப்பியப் பண்பு அமைந்திலங்கும் நூல் யாது?

    9

    அரிச்சந்திர புராணத்தில் அமைந்துள்ள காப்பியப் பண்பு யாது?

    10

    சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள காப்பியப்
    பண்புகளாக இளங்கோவடிகள் கூறுவன யாவை?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 22:02:01(இந்திய நேரம்)