Primary tabs
-
6.2 புகழாப் புகழ்ச்சி அணிபாடல் கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்குக்
கவிஞர் கையாண்ட அணிகளில் இதுவும் ஒன்று. ஒன்றைப்
பழிப்பது வேறு ஒன்றற்குப் புகழாய்த் தோன்றும் முறையில்
பாடப்படும் அணி ஆகும்.பழித்துக் கூறுவது போன்ற முறையினால் ஒரு பொருளுக்கு
மேம்பாடு தோன்றச் சொல்லுவது புகழாப் புகழ்ச்சி அணி என்னும்
அணி ஆகும்.
பழிப்பது போலும் பான்மையில் மேன்மை
புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி(தண்டி, 84)(மேன்மை - மேம்பாடு, புகழ்.)
இவ்வணிக்குத் தண்டியலங்கார உரையில் இரண்டு
பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டு - 1 :
போர்வேலின் வென்றதூஉம், பல்புகழால்போர்த்ததூஉம்,தார்மேவு திண்புயத்தால் தாங்குவதூஉம், - நீர்நாடன் தேர்அடிக்கூர் வெம்படையால் காப்பதூஉம்,செங்கண்மால்ஓர்அடிக்கீழ் வைத்த உலகு
இப்பாடலின் பொருள்
நீர் வளம் பொருந்திய நாட்டை உடைய சோழன், போர்
செய்யும் வேலினால் வெற்றி கொண்டதும், தன்னுடைய பல்வேறு
வகைப்பட்ட புகழால் மூடியதும், மாலையை அணிந்த தன்னுடைய
வலிமையான தோளினால் தாங்குவதும், தேர்க்காலின் பெயரை
உடைய கூர்மையும் கொடுமையும் உடைய ஆயுதத்தால் (அதாவது
சக்கர ஆயுதத்தால்) காப்பதும், சிவந்த கண்களை உடைய
திருமால் தனது ஒரு காலடியில் வைத்த இந்நிலவுலகமே
ஆகும்.
. அணிப் பொருத்தம்
இப்பாடலில், 'திருமால் ஓர் அடியின் கீழ் வைத்த உலகு'
என உலகத்தைப் பழிப்பது போலக் கூறும் முறையால்,
அவ்வுலகம் முழுவதையும் மனிதனாகிய சோழன் வேலால்
வென்றும், புகழால் போர்த்தியும், தோள் வலிமையால் தாங்கியும்
பல விதமான துன்பங்கள்பட்டுப் பாதுகாப்பது செயற்கரிய செயல்
என்னும் மேம்பாடு அவனுக்குத் தோன்றுமாறு குறிப்பாகச்
சொல்லப்பட்டிருப்பதால் இது புகழாப் புகழ்ச்சி அணி ஆயிற்று.
எடுத்துக்காட்டு - 2:
நினைவுஅரிய பல்புகழார் நின்குலத்துத் தொல்லோர் அனைவரையும் புல்லினாள் அன்றே - மனுநூல்
புணர்ந்த நெறிஒழுகும் பூழிய! நீ இந்நாள்
மணந்த தடமலர்மேல் மாது(புல்லினாள் - கூடினாள்; பூழியன் - சோழன்;
தடமலர் - பெரிய தாமரைமலர்; மாது - திருமகள்.)
இப்பாடலின் பொருள்
மனுவின் நீதிநெறிப்படி ஆட்சி செலுத்துகின்ற சோழனே! நீ
இந்நாளில் உனக்கு உரிமையாகும்படி மணந்துள்ள, பெரிய
தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் திருமகள், மனத்தாலும்
நினைத்தற்கு அரிய பலவகைப் புகழை உடைய உன் குலத்து
முன்னோர்கள் அனைவரையும் கூடினவள் அன்றோ?
. அணிப் பொருத்தம்
இப்பாடலில், 'சோழன் மணந்த திருமகள், அவனுக்கு
முன்னே வாழ்ந்த அவனுடைய குலத்து முன்னோர்கள்
அனைவரையும் கூடியவள்' என்று அவளைப் பழிப்பது போலக்
கூறும் முறையால், 'சோழன், வழிவழியாக வந்த
பெருஞ்செல்வத்தையும் அரசாட்சியையும் உடையவன்' என்னும்
மேம்பாடு அவனுக்குத் தோன்றுமாறு குறிப்பாகச்
சொல்லப்பட்டிருப்பதால் இது புகழாப் புகழ்ச்சி அணி ஆயிற்று.
புகழாப் புகழ்ச்சி அணியும், முன்பு இலேச அணியின்
பிரிவாகக் கூறிய அணிகளில் ஒன்றாகிய பழிப்பது போலப் புகழ்
புலப்படுத்தலும் ஒன்று போலத் தோன்றும். ஆனால் இரண்டிற்கும்
வேறுபாடு உள்ளது.
புகழாப் புகழ்ச்சி, என்பது ஒன்றனைப் பழித்துக் கூறுவது,
பிறிது ஒன்றற்குப் புகழாய்த் தோன்றுவது ஆகும். பழிப்பது
போலப் புகழ் புலப்படுத்தலோ, ஒன்றனைப் பழித்துக் கூறுவது,
அதற்கே புகழாய்த் தோன்றுவது ஆகும்.
புகழாப் புகழ்ச்சிக்கு ஈண்டுக் காட்டிய பாடல்களில்
ஒன்றாகிய 'போர்வேலின்' என்று தொடங்கும் பாடலில் 'திருமால்
ஓர் அடியின் கீழ் வைத்த உலகு' என்று உலகத்தைப் பழித்துக்
கூறுவது, அவ்வுலகைப் பல விதமான துன்பங்கள்பட்டுக்
காக்கின்ற சோழனுக்குப் புகழாய்த் தோன்றக் காணலாம்.
பழிப்பது போலப் புகழ் புலப்படுத்தலுக்குச் சான்றாகக்
காட்டப்பட்ட 'ஆடல் மயில்இயலி' என்று தொடங்கும் பாடலில்,
தலைவி, 'புணர்ச்சியின்போது, தலைவன் என்னுடைய மென்மைத்
தன்மை கெடுமாறு நடந்து கொள்கிறானே' என்று அவனைப்
பழித்துக் கூறுவது, 'கூடும் காலத்தில் அவன் அவ்வாறு நடந்து
கொள்வதே பேரின்பமாக உள்ளது' எனபதைக் குறிப்பாகப்
புலப்படுத்தலின் அவனுக்குப் புகழாயிற்று.