Primary tabs
-
6.4 புணர்நிலை அணிதண்டியலங்காரத்தில் சொல் பற்றிய அணிகள் சிலவும்
இடம் பெறுகின்றன என்பதைக் கடந்த பாடங்களில் பார்த்தோம்.
தீவக அணி, பின்வருநிலை அணி ஆகிய அணிகளை
நினைவுபடுத்திப் பாருங்கள். சொல் பற்றிய அணிகளில்
புணர்நிலை அணியும் ஒன்று.
வினையாலும், பண்பாலும் இரண்டு பொருளுக்கு ஒரு
சொல்லே முடிக்கும் சொல்லாகப் பொருந்துமாறு சொல்லுவது
புணர்நிலை என்னும் அணி ஆகும்.
வினை, பண்பு எனும்இவை இருபொருட்கு ஒன்றே புணர மொழிவது புணர்நிலை ஆகும்
(தண்டி, 86). புணர்நிலை அணியின் வகைகள்
புணர்நிலை அணி வினைப் புணர்நிலை, பண்புப்
புணர்நிலை என இரண்டு வகைப்படும்.
கூறப்படும் இரண்டு பொருளுக்கும் பொதுவான ஒரு வினை
பற்றிய சொல்லை முடிக்கும் சொ ல்லாக அமைத்துக் கூறுவது
வினைப் புணர்நிலை எனப்படும்.
எடுத்துக்காட்டு:
வேண்டுருவம் கொண்டு, கருகி, வெளிபரந்து,
நீண்ட முகிலுடனே நீர்பொழிந்த, - ஆண்தகையோர் மேவல் விரும்பும் பெருநசையால் மெல்ஆவி
காவல் புரிந்திருந்தோர் கண்
(கருகி - கறுத்து;முகில் - மேகம்; நசை - காதல்; ஆவி - உயிர்.)இப்பாடலின் பொருள்
ஆண்மை மிக்க தலைவரைச் சேர விரும்பிய
பெருங்காதலாலே தம்முடைய மெல்லிய உயிர் போகாதபடி
பாதுகாக்கும் தொழிலை மேற்கொண்டிருந்த தலைவியருடைய
கண்கள், வேண்டிய உருவத்தைக் கொண்டு, கறுத்த நிறத்தை
உடையதாய், வானம் எங்கும் பரந்து நீண்ட முகில்களுடனே
நீரைப் பொழிந்தன.
. அணிப்பொருத்தம்
இப்பாடலில் கூறப்பட்ட பொருள்கள் இரண்டு. ஒன்று, கண்;
மற்றொன்று, முகில். இவ்விரு பொருளுக்கும் பொதுவான 'நீர்
பொழிந்த' என்னும் வினை பற்றிய ஒரு சொல்லையே முடிக்கும்
சொல்லாக அமைத்திருத்தலின் இது, வினைப் புணர்நிலை
ஆயிற்று.
கூறப்படும் இரண்டு பொருளுக்கும் பொதுவான ஒரு குணம்
(பண்பு) பற்றிய சொல்லை முடிக்கும் சொல்லாக அமைத்துக்
கூறுவது பண்புப் புணர்நிலை எனப்படும்.
எடுத்துக்காட்டு:
பூங்காவில் புள்ஒடுங்கும் புன்மாலைப் போழ்துடனே, நீங்காத வெம்மையவாய் நீண்டனவால், - தாம்காதல் வைக்கும் துணைவர் வரும்அவதி பார்த்து ஆவி
உய்க்கும் தமியார் உயிர்
(புள் -பறவைகள்; அவதி - காலம்;)இப்பாடலின் பொருள்
தாம் அன்பு வைத்த துணைவர் வரும் காலத்தை
எதிர்பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் மடவாருடைய
உயிரானது, பூக்கள் நிறைந்த சோலையிலே பறவைகள் எல்லாம்
தங்கள் கூடுகளுக்குச் சென்று ஒடுங்கிய புல்லிய மாலைப்
பொழுதுடனே, நீங்காத துயரம் செய்து நீண்டு கொண்டிருந்தன.
. அணிப்பொருத்தம்
இப்பாடலில் கூறப்பட்ட பொருள்கள் இரண்டு. ஒன்று,
தமியார் உயிர்; மற்றொன்று, மாலைப் பொழுது. இவ்விரு
பொருளுக்கும் பொதுவான 'நீண்டன' என்னும் பண்பு பற்றிய
ஒரு சொல்லையே முடிக்கும் சொல்லாக அமைத்திருத்தலின்
இது, பண்புப் புணர்நிலை ஆயிற்று.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I5புகழாப் புகழ்ச்சிக்கும், பழிப்பது போலப்
புகழ் புலப்படுத்தலுக்கும் இடையே உள்ள
வேறுபாட்டை எழுதுக.