Primary tabs
-
1.0 பாட முன்னுரை
காப்பியங்கள் என்றவுடன் ஐம்பெரும் காப்பியங்களும், ஐஞ்சிறுகாப்பியங்களுமே நம் நினைவுக்கு வருகின்றன. அதற்குக்காரணம் எண் அடிப்படையில் அமைந்த காப்பிய வகைமையே. சங்க காலத் தொகை நூல்களை எட்டுக்குள்ளும்,பாட்டு நூல்களைப்பத்துக்குள்ளும் அடக்கி நம் முன்னோர் செய்த வகைமைப் பணி இன்றும் வியக்கத்தக்கதாகவே அமைகிறது. கவனிப்பாரற்று இருந்தசைவ சமய நூல்களை நம்பியாண்டார் நம்பி அழகாக வகை தொகைப்படுத்தி, முறையான வகைமைக்குள் கொணர்ந்து திருமுறைகளாகத் தொகுத்துத் தந்தபின் அவ்விலக்கியங்களைப் படிப்பதும், ஆராய்வதும் எளிமையான செயலானது. நீதி இலக்கியங்களைத் தொகுத்து வகைமைக்குள்ளாக்கி 18 என்ற எண்ணுக்குள் வரையறை செய்தபின் நினைவில் நிறுத்தும் செயல் எளிமையானது. ஓர் இலக்கிய வகையைப் பகுத்தாராயும் நோக்கில் வகைமைப்படுத்தும் பணி செய்யப்படுகிறது. வகைமைப்படுத்துவதில் பல்வேறு கருத்துமுரண்கள் இருந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்த தமிழுக்கு அது நற்கொடையாகவே அமைகிறது. அவ்வகையில் தமிழிலக்கிய வகைமையில் புகழ்மிக்கதாய்த் திகழும் காப்பிய வகைமை பற்றி இப்பாடம் விளக்குகிறது.