Primary tabs
-
6.1 கூத்த நூல்
சாத்தனார் இயற்றிய இந்நூல் கூத்துக்கலை பற்றி உரைக்கும் இலக்கண நூலாகும். இவர் கூத்தனூரைச் சார்ந்தவர் என்றும், அகத்திய முனிவரின் சீடருள் ஒருவர் என்றும், தொல்காப்பியர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும் உரைப்பர். நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து, தமிழ் நாட்டிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும், அக்காலத்தில் நிலவிய நாட்டிய வழி முறைகளையும், நாட்டியக் கோட்பாடுகளையும் ஒருங்கே தொகுத்துச் சூத்திரங்களாக அமைத்துத் தந்துள்ளார். இவரின் இத்தகு பணியினால் இவரை ‘நாட்டிய பிரம்மா’ என்று போற்றினர். இந்நூல் ஒன்பது பகுதிகளைக் கொண்டுள்ளது.
இந்நூலின் பாயிரப் பகுதியில் கூத்தும் கூத்திலக்கணம் பிறந்த வகையும் குறிப்பிடப்படுகிறது.
மகேந்திர மலை உச்சியில் அந்திப் பொழுதில் கூத்த பிரானாகிய சிவபெருமானும், உமையும் ஆடிய ஆடலை அகத்திய முனிவர் கண்டார். இதனைத் தன் மாணவர்கட்கு உணர்த்தினார். இறைவன் உணர்த்திய கூத்தியலின் இலக்கணத்தைப் பிற்காலத்தவரும் அறிந்திடும் வகையில் சாத்தனார் கூத்தநூல் இயற்றினார். சிகண்டி முனிவர் எழுதிய இசை நுணுக்கம் சார்பு நூலாக விளங்குகிறது. பேரிசை, பெருநாரை, பெருங்குருகு, பெருங்கூத்து, சயந்தம், குணநூல், முறுவல், செயிற்றியம், தண்டுவம், நந்தியம், பண்ணிசை, தக்கம், தாள ஓத்து, தண்ணுமை ஓத்து, ஆடல் ஓத்து ஆகிய நூல்கள் அமைந்துள்ளன என்று பாயிரம் குறிப்பிடுகிறது. இவைகளின் அடிப்படையில் கூத்தின் இலக்கணத்தைக் கூத்தநூல் குறிப்பிடுகிறது.
· நூற்பதிப்பு
கூத்த நூலின் முதலிரு பகுதிகளைச் சுவடிகள் மூலம் பெற்று, அரிய குறிப்புரைகளுடன் ச.து.சு. யோகியார் 162 நூற்பாக்கள் கொண்ட ஒரே நூலாக, தமிழ் நாடு சங்கீத நாடக சங்கம், மத்திய சங்கீத நாடக அகாடமி உதவியுடன் வெளியிட்டுள்ளார்.
கூத்தியலின் முதல் பகுதி சுவை நூலாகும். இப்பகுதியில் எழுத்து, சொல், யாப்பு, இசை, பண், தாளம், இயல், இயக்கம், கூத்து என்பன இடம் பெற்றுள்ளன.
இப்பகுதியில் நாட்டிய நாடகம் பிறந்த நிலை குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவனது உடுக்கையிலிருந்து ஓசையும், ஓசையிலிருந்து கூத்தும், கூத்திலிருந்து நாட்டியமும், நாட்டியத்திலிருந்து நாடகமும் தோன்றின என்கிறது.
மோனத்து இருந்த முன்னோன் கூத்தில் உடுக்கையில் பிறந்தது ஓசையின்சுழலே ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே ஆட்டத்தில் பிறந்தது கூத்தினது அமைப்பே கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே நாட்டியம் பிறந்தது நாடக வகையே
ஆடல் வேத்தியல், பொதுவியல் என இருவகைப்படும். இதனை வடநூலார் யோகதர்மி, நாட்டிய தர்மி என்பர். தமிழ் இலக்கணங்கள் உலகியல் வழக்கு, நாடக வழக்கு எனக் குறிப்பிடும்.
தொழிலைச் செய்து தொழிலின் பயன் பெற வேண்டி உணர்ச்சிகளைச் சுவைப்பது பொதுவியல் (கலை வாழ்க்கைக்காக என்ற கருத்து இது) சுவையைச் சுவைப்பதுவே பயனாகக் கொண்டு சுவை கொள்ளல் வேத்தியலாகும். (கலை கலைக்காகவே என்பது இது.)
கண்ணால் காண்பதைப் படைப்பது பொதுவியல் கண் காணாக் காட்சியைப் படைப்பது வேத்தியலாகும்.
நடைமுறையில் அன்றாடம் அமைவது பொதுவியல், நடைமுறை போன்று, கற்பனையில் நடித்துக் காட்டுவது வேத்தியலாகும். இருப்பது பொதுவியல், இருப்பதை மிகைப்படுத்திக் கற்பனைச் சுவையூட்டிக் கனவு ஆக்குவது வேத்தியலாகும் என்று கூத்த நூல் குறிப்பிடுகின்றது.