Primary tabs
-
6.5 சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதற் காப்பியமாகும். இது காப்பியமாக மட்டுமல்லாமல் இசைத்தமிழ்க் காப்பியமாகவும், நாடகத் தமிழ்க் காப்பியமாகவும் விளங்குகிறது. இதனால் இதனை முத்தமிழ்க் காப்பியம் என்பர். இந்நூல் இசை இலக்கணம் பற்றியும், ஆடல் இலக்கணம் பற்றியும் உரைக்கின்றது. பழங்கால இசைக்கருவிகள், பண்கள் பற்றிய செய்திகள் பற்றியும், இசைப்பாடல் வகைகள் போன்ற இசை பற்றிய செய்திகளையும், ஆடல் ஆசிரியன், அமைதி, ஆடலரங்கேற்ற நிலை ஆடலரங்கில் பங்கு பெறும் இசையாசிரியன், கவிஞன், தண்ணுமையோன், குழலோன் போன்றோர்களின் அமைதிகள், அரங்க அமைதி, அரங்கிற் புகுந்து ஆடுகின்ற இயல்பு போன்றன பற்றியும் சிலப்பதிகாரம் வாயிலாக அறிய முடிகின்றது. இவ்வகையில் இந்நூல் இசை, ஆடல், இலக்கண நூலாகவும், இவ்விலக்கண உருவாக்கத்திற்குரிய இலக்கியமாகவும் அமைந்துள்ளது. சிலப்பதிகாரத்திற்கு எழுந்த உரைகளான அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவை தொல்காப்பிய நூலுக்கு எழுந்த உரை நூல்கள் போல் அமைந்துள்ளன. இவ்வுரைகளின் வாயிலாக ஆடல் இசை பற்றிய அரிய விளக்கங்களைப் பெற முடிந்துள்ளது. அடியார்க்கு நல்லார் உரை வாயிலாக மறைந்துபட்ட இசை ஆடல் இலக்கண இலக்கிய நூற்கள் பற்றியும் அவர் காலத்தில் நிலவிய நூல்கள் பற்றியும் அறிந்துணரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நூல்கள் மூலம் பெறப்பட்ட செய்திகள் பலவற்றையும் அறிந்துணரும் நிலையில் அது அமைந்துள்ளது.
ஆடல், பாடல், அழகு இம்மூன்றிலும் குறைவுபடாத மாதவியின் ஆடல் அரங்கேற்றம் பற்றிச் சிலப்பதிகாரம் உரைத்துள்ளது. வானவ மகள் உருப்பசி அகத்திய முனிவரின் சாபத்தால் பூம்புகாரில் மாதவியாகப் பிறந்தாள். இது ஒரு பழைய கதையாயினும் இதனுள் சில அரிய விளக்கங்களும் உள்ளன. வானுலக நங்கை உருப்பசி இந்திரன் முன் ஆடல் ஆடினாள். இந்திரன் மகன் சயந்தன் காதலுணர்வோடு உருப்பசியை நோக்க உருப்பசியும் சயந்தனை நோக்க, இதனைக் கண்ட நாரதர் வீணையின் பகை நரம்புகளை மீட்ட, இவற்றைக் கண்ட அகத்தியர் சபித்தார். இச்சாபத்தின் விளைவால் உருப்பசி மாதவியாய்ப் பிறந்தாள். சயந்தன் தலைக்கோலாகப் பிறந்தான் என்ற ஒரு கதை உள்ளது. இத்தகு மாதவி ஏழாண்டுகள் பயின்று சோழ மன்னன் முன் தலையரங்கு ஏறினாள். இந்நிலைகளைச் சிலப்பதிகாரத்தின் மூன்றாவது காதையான அரங்கேற்றுகாதை குறிப்பிடுகின்றது.
ஆடலரங்கேற்றம் பற்றி நமக்கு முதன் முதலில் அறிவிக்கும் நூலாகச் சிலப்பதிகாரம் உள்ளது. இக்காதை இசை மற்றும் ஆடல் இலக்கண அமைதி பற்றி உரைக்கும் இலக்கணப் பகுதி போல் விளங்குகின்றது. இதில் ஆடலாசான் அமைதி முதலில் கூறப்பட்டுள்ளது.
ஆடலாசான் அகக்கூத்து, புறக்கூத்து என்ற இருவகைக் கூத்தின் இலக்கணம் நன்கு அறிந்தவன் ஆவான். அவற்றின் பலவகைப் பகுதிகளான கூத்துக்களும், பதினொரு வகையான ஆடல்களும், அவற்றிற்கு இசைந்த பாடல்களும் கொட்டும், இன்னதற்கு இன்ன சிறப்பு என விதிக்கப்பட்ட மரபுகளின் படி விளக்கமாக அறிந்தவனாகவும் அவன் விளங்கினான்.
ஆடலாசான் ஆடல் நிகழ்ச்சியின் இயக்குநர் போல் திகழ்கிறார். வரையறைகளை நன்கு அறிந்தவராக விளங்குகிறார். தான் கண்ட அனைத்தையும் ஆடல் நங்கை மூலம் செயல்படுத்துபவராக உள்ளார்.
இவரை இன்று நட்டுவனார் என்றும், ஆடலாசான் என்றும் அழைக்கின்றனர். இவர் கற்பிக்கும் ஆடற்பயிற்சி முறைபற்றி சிலப்பதிகார நூல் வாயிலாகவும் உரை வாயிலாகவும் அறிய முடிகின்றது.
ஆடற்பயிற்சியை அடவுப்பயிற்சி என்பர். அடவுப்பயிற்சி நிறைவு பெற்றதும் அவிநயப் பயிற்சி முறையைத் தொடங்குவர். பிறகு கீதங்கள், பாடல்களுக்கான அவிநயப் பயிற்சிகளை அளிப்பர். பிறகு கூத்து வகைகள், பதினோரு ஆடல் வகைகள், ஆடல் இலக்கிய இலக்கணப் பயிற்சிகள் முதலியவற்றைக் கற்பிப்பர். இவைகளைப் பழுதறக் கற்க ஏழாண்டுகள் ஆகும். ஆடல் நங்கையின் பன்னிரண்டாம் அகவையில் அரங்கேற்றம் நிகழ்வுறும். இதனை அடியார்க்கு நல்லார் அலங்காரம், கீதம், பண்ணீர்மை, வட்டணையுள் தாளம், மண்டிலத்தில் பண்கள் கற்றுத் தேர்வு நடத்திய பின்பு அரங்கேற்றம் நிகழ்வுறும் என்கிறார்.
மாதவி அரங்கு புகுந்து ஆடும் நிலையினை இளங்கோ அடிகள் குறிப்பிடும்பொழுது அரங்கின் புகுந்து ஆடும் முறையினை விளக்கியுள்ளார். பக்க இசைக் கலைஞர்களைக் குயிலுவக்கருவியாளர்கள் என்கின்றார். இவர்கள் அரங்கினில் நின்று இசைக்கும் முறையைக் கூறுகிறார். குயிலுவக் கருவியாளர்களான குழலோன், யாழோன், தண்ணுமையோன், முழவோன் ஆகியோர் இசைத்தனர் என்பதனை இளங்கோ அடிகள் குறிப்பிட்டுள்ளார்.
பாடலோடு இவ்விசைகளின் இயக்கமும் கூட்டிசையாக முழங்கியது. இதனை ஆமந்திரிகை என்று குறிப்பிட்டுள்ளார்.
அரங்கினில் மாதவி வலக்கால் மிதித்து அரங்கத்தின் வலது தூணைச் சார்ந்து நின்றாள். வலக்கால் மிதிப்பதும், வலது பக்கம் சார்ந்து நிற்பதும் மங்கல வழக்காகக் கருதப்பட்டன. இந்நிலை இன்றும் காணப்படுகிறது. தோரிய மகளிர் இடப்பக்கம் நிற்பர். ஆடி முதிர்ந்த பெண்களைத் தோரிய மடந்தை என்பர். இவர்கள் தாம் கற்றுணர்ந்த அசைவு நிலைகளை ஆடல் நங்கைக்குக் கற்பிப்பர். இவர்களைப் பற்றி அடியார்க்கு நல்லார் பழம் பாடல் ஒன்றின் மூலம் மேற்கோளிடுகிறார்.
தலைக் கோலநிலை குணத்தொடு பொருந்தி நலத்தகு பாடலும் ஆடலு மிக்கோள் இயற்படு கோதைத் தோரிய மகளே (சிலம்பு : 3 : 133-134 உரை)
முதலில் வாரம் பாடலும், வாரம் பாடிய பின்பு இசைக் கருவிகள் எல்லாம் கூடி இசைக்க அரங்கினில் புகும் நங்கை இறைவனையும், ஆசானையும், கலைஞர்களையும், சுவைஞர்களையும், தான் ஆடும் அரங்கினையும் வணங்குவாள். இதனை மலர்வழிபாடு என்பர். பின்பு பல்வகைக் கூத்துகளையும், ஆடல் வகைகளையும் ஆடுவாள்.
சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக்கலை மிகச் சிறப்புடன் கூறப்பட்டுள்ளது. அரங்கினை அமைக்கத் தேர்ந்தெடுக்கப்படும் இடம், அரங்கின் அளவு, அரங்கு வகைகள், திசைகள் பற்றியும் நூல் வாயிலாகவும், உரை வாயிலாகவும் அறிய முடிகின்றது.
அரங்கம் அமைப்பதற்குரிய இடத்தைத் தேர்ந்தெடுக்கும் பொழுது சிற்ப நூலாசிரியர்கள் வகுத்த இயல்புகள் வழுவாத வகையில் குற்றங்கள் நீங்கிய இடத்தைத் தெரிவு செய்ய வேண்டும் என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். (சிலம்பு 3 : 95-113 உரை) கோ. சண்முகவேல் சிலம்பில் அரங்கேற்று காதையில் பகுதிகள் என்ற நூலில் குறிப்பிடும் பொழுது, தெய்வத்திற்குத் தானம் கொடுத்த நிலம், கோயில், சமணப்பள்ளி, அந்தணர் இருக்கை, கிணறு, காவு போன்றவை நீக்கித் தேரோடும் வீதியில் எதிர்முகமாக அரங்கிற்கு இடம் தேர்ந்தெடுத்தல் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வன்பால், மென்பால், இடைப்பால் நிலங்களை நீக்கிட வேண்டும் என்றும், நிலத்தில் குழியைத் தோண்டும் பொழுது அதிக மண் இருக்கும் இடம் வன்பால் இடமென்றும், குறைவாக இருப்பது மென்பால் இடமென்றும், ஒப்பாய் இருத்தல் இடைப்பால் என்றும் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளார். அரங்கின் அளவு எண் கோல் நீளமும் ஒரு கோல் உயரமும் உடையதாக விளங்க வேண்டும் என்று சிலப்பதிகாரம் குறிப்பிட்டுள்ளது. அரங்கில் உட்புகு வாயில், வெளியே செல்லும் வாயில் என இருவகை வாயில்கள் இருக்க வேண்டும். அரங்கில் காட்சித் திரைகளில் வானவர் மறைந்து வரும் திரை, தொழிலாளர் குடிசைப் பகுதி, அரசவை, மற்றைய மக்கள் வாழ் பகுதிகளை வரைந்த திரைகள் இருந்தமையையும், ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என மூன்று வகைத் திரைச் சீலைகள் இருந்தமையையும், விளக்கொளியில் தூண்களின் நிழல் அரங்கினில் விழாதவாறு விளக்குகள் அமைக்கப்பட்ட நிலைகளையும் அடியார்க்கு நல்லார் உரை வாயிலாக அறிய முடிகின்றது.