Primary tabs
-
3.0 பாட முன்னுரை
உலக மக்களுக்கு எக்காலத்தும் இறைவனின்
திருவருளை வழங்குவதற்குரிய சைவத் திருநூல்கள்
திருமுறைகளாகும். திரு என்பது தெய்வத்தின் அருளைக்
குறிக்கின்ற சொல்லாகும். மேலும் தமிழில் பொதுவாகத் திரு
என்பதை மங்கலச் சொல் என்று கூறுவாரும் உண்டு.
இச்சொல்லிற்கு அழகு, செல்வம், மதிப்புப் போன்ற பொருளும்
உண்டு. முறை என்ற சொல் நூல், பழமை, ஊழ், கட்டு, கூட்டு,
முறைமை என்ற பல பொருள்களில் வழங்கும்.
பன்னிருதிருமுறை என்ற சொல்லில் முறை என்பது நூல் என்ற
பொருளைத் தருவதாகும். எனவே பன்னிருதிருமுறை என்பது
திருவருளைப் பெற்ற நூல் பன்னிரண்டு என்ற பொருளைத்
தரும்.இத்திருமுறைகளை முதலில் வகுத்தவர் நம்பியாண்டார்
நம்பி ஆவார். இவர் திருமுறைகளைத் தொகுத்த வரலாற்றை
உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருமுறை கண்ட புராணம்
என்ற நூல் குறிப்பிடுகிறது. இந்நூலின்படி முதல் பதினோரு
திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி தொகுத்தார் எனத்
தெரிகிறது. இவர் வாழ்ந்த 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு
12ஆம் திருமுறையான பெரியபுராணம் பின்னர்ச்
சேர்க்கப்பட்டுப் பன்னிருதிருமுறைகள் எனத் திருமுறைகள்
வகுக்கப் பெற்றன என்பது சைவ வரலாற்றாசிரியர்கள்
கருத்தாகும். திருமுறைகளைத் தேடிக் கண்டுபிடித்தது பற்றித்
திருமுறைகண்ட புராணம் சில தகவல்களைக் குறிப்பிடுகிறது.சோழநாட்டில் அபயகுல சோழன் என்ற பட்டம் உடைய
இராசராச சோழன் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய
அவைக்களத்தில் சிவனடியார்கள் தங்களுக்குத் தெரிந்த
தேவாரப் பாடல்களை அவ்வப் போது ஓதி வந்தார்கள்.
அவற்றைக் கேட்ட சோழன் தேவாரப் பாடல்கள் முழுமையும்
சேகரிக்க நினைத்தான். முழுமையும் அவனுக்குக்
கிடைக்கவில்லை. அவனுடைய காலத்தில்தான் திருநாரையூர்
என்ற ஊரில் நம்பியாண்டார் நம்பி வாழ்ந்துவந்தார். அவருக்கு
அவ்வூரில் எழுந்தருளியிருந்த பொல்லாப்பிள்ளையார்
(விநாயகர்) திருவருள் புரிந்ததை அரசன் கேள்விப்பட்டான்.
அவர் மூலமாகத் தேவாரத் திருப்பதிகங்களைத் தேடிக்
கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணி அவருடைய உதவியை
நாடினான். நம்பியாண்டார் நம்பியும் அவனுடைய
வேண்டுகோளை ஏற்றுத் தான் வணங்கும் பொல்லாப்
பிள்ளையார்பால் வேண்டிக் கொண்டார். பிள்ளையாரும்
சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகில் உள்ள அறையில்
தேவாரத் திருமுறைகள் வைத்துப் பூட்டப் பெற்றுள்ளன என
அருளிச் செய்தார். நம்பியும் மன்னனும் சிதம்பரம்
பொன்னம்பலத்திற்குச் சென்றார்கள். தில்லைவாழ் அந்தணர்கள்
அறைக்கதவு திறக்கப்பட வேண்டுமானால் தேவாரத்தை
அருளிய மூவரும் நேரில் வரவேண்டும் என்றனர். வாழ்ந்து
மறைந்த சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் நேரில்
வரமுடியாத காரணத்தால் அவர்களின் திருவுருவங்களை
அறையின்முன் எழுந்தருளச் செய்தான் மன்னன். சிலை
வடிவாக இருக்கிற நடராசரை இறைவனாகவே எண்ணி
வழிபாடு செய்யும் தில்லைவாழ் அந்தணர்கள், சிலைவடிவில்
வந்திருக்கும் மூவரையும் நேரில் வந்ததாகவே கருதி
அறையைத் திறந்து விட்டனர். அறைக்குள்ளே கரையான்
புற்றால் மூடப்பெற்றிருந்த ஏடுகளில் பழுதுபட்டதை நீக்கி
மற்றவற்றை எடுத்துவந்து நம்பியாண்டார் நம்பியைத் தொகுக்கச்
செய்தான். நம்பியாண்டார் நம்பி கிடைத்த தேவாரத்
தேவாரத் திருப்பதிகங்களை முதல் 7 திருமுறைகளாகத்
தொகுத்தார். இதுவே திருமுறைகண்ட புராணம் கூறும்
செய்தியாகும்.முதல் 7 திருமுறைகளாகத் தேவாரத்தைத் தொகுத்தபின்
அவரால் அறிந்து கொள்ளப் பெற்ற பாடல்களை மேலும்
தொகுக்க ஆரம்பித்தார். அவ்வாறு தொகுக்க முனைந்த
நம்பியாண்டார் நம்பிக்குக் கிடைத்தவையே பதினோராம்
திருமுறை வரை உள்ள பாடல்கள். இவற்றைத் தொகுத்த காலம்
கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது பத்தாம்
நூற்றாண்டின் முற்பகுதியாகும். அதன்பின் பெரியபுராணம்
சேர்க்கப்பட்டுத் திருமுறைகள் பன்னிரண்டு என்ற
எண்ணிக்கையைப் பெற்றன. இத்தகைய 12 திருமுறைகளைப்
பற்றிய செய்திகள் இப்பாடத்தில் சுருக்கமாகத் தரப்
பெற்றுள்ளன.