தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.3- ஒன்பது பதினோராம் திருமுறைகள்

  • 3.3 ஒன்பது, பதினோராம் திருமுறைகள்


        பன்னிரு திருமுறைகளில் பலரால் பாடப்பெற்ற பாடல்களைக்
    கொண்டு தொகுக்கப் பெற்ற திருமுறைகள் இரண்டாகும். அவை 9,
    11ஆம் திருமுறைகள் ஆகும். ஒன்பதாம் திருமுறை திருமாளிகைத்
    தேவர் முதல் சேதிராயர் ஈறாக ஒன்பதுபேர் பாடிய பாடல்களைக்
    கொண்டது. அதுபோல 11ஆம் திருமுறை திருவாலவாயுடையார்
    முதலாக நம்பியாண்டார் நம்பி ஈறாகப் பன்னிருவர் பாடிய
    பாடல்களைக் கொண்டு தொகுக்கப் பெற்றதாகும்.

        ஒன்பதாம் திருமுறையில் உள்ள பாடல்களில் திருமாளிகைத்
    தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி,
    கண்டராதித்தர், வேணாட்டு அடிகள், திருவாலி அமுதனார்,
    புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய ஒன்பதுபேர் பாடிய
    பாடல்கள்     திருவிசைப்பா என்று     வழங்கப்படுகின்றன.
    திருப்பல்லாண்டு என்பது சேந்தனார் பாடிய மற்றொரு நூல். இது
    9ஆம் திருமுறையின் இறுதிப் பகுதியாகும். எனவே 9ஆம்
    திருமுறையில் ஒன்பதுபேர் பாடிய பாடல்கள் தொகுக்கப் பெற்று
    முற்பகுதி திருவிசைப்பா எனவும், பிற்பகுதி திருப்பல்லாண்டு
    எனவும் குறிக்கப்பெறுகின்றன எனலாம்.

        பதினோராம்      திருமுறையில்     முதற்பாடல்
    திருவாலவாயுடையார் பாடிய பாடலாகும். திருவாலவாயுடையார்
    என்பார் சிவபெருமான் ஆவார். அவர்பாடிய முதற்பாட்டு திருமுகப்
    பாசுரம் என்று அழைக்கப் பெறுகிறது. அதன்பின் காரைக்கால்
    அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள்,
    நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள்,
    அதிரா அடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி
    என்ற 11 பேர் பாடிய பாடல்கள் அமைந்துள்ளன. எனவே 11ஆம்
    திருமுறை, இறைவனும் இறை அடியார்களும் பாடிய பாடல்களைத்
    தன்னகத்தே கொண்டது எனலாம்.

    3.3.1 ஒன்பதாம் திருமுறைச் சிறப்புகள்

        பன்னிரு திருமுறைப் பாடல்கள் நாள்தோறும் சைவத்
    திருக்கோயில்களில் ஓதப்பெற்று வருகின்றன. இறைவனின்
    வழிபாட்டில் பன்னிரு திருமுறைப் பாடல்களில் ஐந்து பாடல்கள்
    மட்டும் பஞ்சபுராணம் என்ற அமைப்பில் நாள்தோறும்
    பாடப்படுவதும் உண்டு. அவ்வாறு பாடுகின்ற ஐந்து பாடல்களில்
    ஒன்பதாம் திருமுறையில் உள்ள இரண்டு பாடல்கள் தவறாது பாடப்
    பெறுகின்றன. பிற திருமுறைகளுக்கு மொத்தமாக மூன்று
    பாடல்களும் ஒன்பதாம் திருமுறைக்கு மட்டும் இரண்டு பாடல்களும்
    பாடப் பெறுகின்றன. இது ஒன்பதாம் திருமுறையின் சிறப்பை
    வெளிப்படுத்துவதாகும். ஒன்பதாம் திருமுறைக்கு மற்றொரு சிறப்பு
    இறைவனுக்குப்     பல்லாண்டு     பாடிய     திருப்பல்லாண்டு
    அமைந்திருப்பதாகும். 9ஆம் திருமுறை மொத்தம் 301
    பாடல்களைக் கொண்டதாகும். திருமுறைகளிலேயே குறைந்த அளவு,
    பாடல்களைக் கொண்ட திருமுறை இதுவாகும். இத்திருமுறைப்
    பாடல்களைப் பாடிய ஆசிரியப் பெருமக்கள், முதல் ஆதித்த
    சோழன் முதல் கங்கை கொண்ட சோழன் வரை உள்ள
    சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தார்கள். பன்னிரு
    திருமுறைகளில் பிற திருமுறைகள் நூற்றுக்கணக்கான பாடல்களை
    அதிகமாக பெற்றிருக்க இந்நூல் மட்டும் குறைந்த அளவு
    பாடல்களைப் பெற்றிருக்கிறது. அதற்குக் காரணம் இந்நூலில்
    இசைப்பாடல்கள் மட்டுமே தொகுக்கப் பெற்றதாகும். இசைப்
    பாடல்கள் இதற்குமேல் கிடைக்காத காரணத்தால் குறைந்த
    அளவிலேயே இத்திருமுறை அமைந்துள்ளது. இத்திருமுறையில்
    அரசர் பாடிய பாடல்களும் உண்டு. ஆண்டி பாடிய பாடல்களும்
    உண்டு.

    ●  திருவிசைப்பா

        ஒன்பதாம் திருமுறையின் முதற்பகுதியான திருவிசைப்பாவின்
    முதல் ஆசிரியர் திருமாளிகைத்தேவர் ஆவார். இவர் பாடிய
    திருப்பதிகங்கள் நான்காகும். மொத்தம் 45 பாடல்கள். இவருடைய
    பாடல்களில் தத்துவக் கொள்கைகள் பெரிதும் இடம் பெற்றுள்ளன.
    இவருடைய இரண்டாம் பதிகத்தில் தில்லைச் சிற்றம்பலவனின்
    திருவடி முதல் திருமுடி வரை அற்புதமாக வருணனை செய்யப்
    பெற்றுள்ளது. மேலும் தில்லைவாழ் அந்தணர்களின் வாழ்வியல்
    மரபுகளும் கூறப்பெற்றுள்ளன.     இவருடைய பாடல்களில்
    திருவாசகத்தின் பொருள், தொடர் ஆகியவற்றின் சாயல்கள்
    அமைந்துள்ளன.

        இத்திருமுறையின் இரண்டாவது ஆசிரியர் சேந்தன்
    என்பராவார்.     சேந்தன்     பாடியதாகத்     திருவீழிமிழலை,
    திருவாவடுதுறை, திருவிடைக்கழி என்ற     தலங்களுக்குரிய
    திருவிசைப்பா பதிகங்கள் மூன்று உள்ளன. திருவீழிமிழலைப்
    பதிகத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் படிக்காசு
    பெற்றமை போற்றப் பெற்று, உள்ளம் உருகப் பாடப் பெற்றுள்ளது.
    திருவாவடுதுறைப் பதிகத்தில் அகத்துறை அமைப்பில் காதல்
    கொண்ட தலைவியைப் பற்றித் தாய் ஒருத்தி வருந்திப் பாடுவதாகப்
    பாடல்கள்     அமைந்துள்ளன.     திருவிடைக்கழிப் பதிகம்
    அத்தலத்திலுள்ள முருகனுடைய     சிறப்புகளைத் தருகிறது.
    இத்திருமுறையில் இப்பதிகம் ஒன்றே சிவனைப் பற்றிப் பாடாது
    முருகனைப் பற்றிப் பாடுகிறது.

        மூன்றாவது ஆசிரியர் கருவூர்த் தேவர் ஆவார். இவர்
    பாடியதாக 10 திருப்பதிகங்கள் உள்ளன. இத்திருமுறையில்
    இவ்வாசிரியர் பாடிய பதிகங்களே அதிகம். இவ்வாசிரியர்
    சிவயோகநெறிச் சித்தராக வாழ்ந்தமையால் தத்துவக் கருத்துகள்
    சிறப்பாக இடம் பெற்றுள்ளன. தில்லைச் சிற்றம்பலம்,
    திருக்கீழ்க்கோட்டூர், கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை
    இராசஇராசபுரம்,     திருவிடைமருதூர்     உள்ளிட்ட பத்துத்
    திருத்தலங்களைப் பற்றிய பாடல்கள் அமைந்துள்ளன.

        நான்காவது ஆசிரியர் பூந்துருத்தி நம்பி காடநம்பி ஆவார்.
    இவர் பாடியதாக இரண்டு பதிகங்கள் உள்ளன. அவற்றில்
    திருவாரூர்த் திருத்தலத்தில் பாடிய பதிகத்தில் இரண்டு பாடல்களே
    காணப்பெறுகின்றன. தில்லையில் பாடிய கோயில் திருவிசைப்பாவில்
    கண்ணப்பர், கணம்புல்லர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
    ஆகிய அடியவர்களுக்கு இறைவன் வீடுபேறு அளித்த பெருமை
    போற்றப்படுகின்றன.

        ஐந்தாவது ஆசிரியர் கண்டராதித்தர் ஆவார். இவர் பாடிய
    பதிகம் தில்லைத் திருத்தலத்தில் பாடியதாகும். இத்திருத்தலத்தில்
    திருமாலும் உடன் இருப்பதை இவர் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.

        வேணாட்டு அடிகள் ஆறாவது ஆசிரியர். இவர் பாடியதாக
    ஒரு திருப்பதிகம் உள்ளது. அப்பதிகம் தில்லைச் சிற்றம்பலவனைப்
    போற்றுகிறது. இப்பதிகத்தில் பழமொழிகள் பல உள்ளன.

        ஏழாவது ஆசிரியரான திருவாலி அமுதனார் பாடியதாக
    நான்கு திருப்பதிகங்கள் உள்ளன. நான்கும் தில்லைத் திருத்தலத்தில்
    பாடியதாகும். அகத்துறை அமைப்பில் பதிகங்கள் அமைந்துள்ளன.
    தன்னைக் காதலியாகக் கொண்டு இறைவன்மீது பாடல்களைப்
    பாடியுள்ளார்.

        எட்டாவது ஆசிரியரான புருடோத்தம நம்பி பாடியதாக
    இரண்டு பதிகங்கள் உள்ளன. தில்லைத் திருத்தலத்தில் பாடியவை.
    இவருடைய பாடல்களிலும் அகப்பொருள்நிலை இடம் பெற்றுள்ளது.

        இத்திருமுறையின் இறுதி ஆசிரியரான சேதிராயர் பாடியது
    ஒரே திருப்பதிகம் ஆகும். தில்லைக் கூத்தனைக் காதலித்த தலைவி
    ஒருத்தி தில்லைச் சிற்றம்பலவன் மீது கிளியைத் தூது விடுத்ததாக
    அப்பதிகம் அமைந்துள்ளது.

    ●  திருப்பல்லாண்டு

        ஒன்பதாம் திருமுறையின் இரண்டாவது ஆசிரியான
    சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு 13 பாடல்களைக்
    கொண்டதாகும். தில்லையில் மார்கழி மாதத் திருவிழாவில் ஓடாமல்
    தடைப்பட்டு     நின்ற     திருத்தேர் ஓடும்படி     பாடியது
    இத்திருப்பல்லாண்டுப் பதிகமாகும். இப்பதிகத்திற்குப் பல்லாண்டு
    இசை என்ற பெயரும் உண்டு. தில்லைக் கூத்தனை உளம் உருக
    நினைந்து சிவன் அடியார்களின் நலனுக்காக இறைவனுக்குப்
    பல்லாண்டு கூறி இப்பதிகம் பாடப் பெற்றிருக்கிறது. இன்றைக்கும்
    சயாம் நாட்டில் அரச குடும்பத்து நிகழ்ச்சிகளில் இப்பதிகம்
    பாடப்பெற்று வருவதாகக் கூறப்பெறுகிறது. இத்திருப்பதிகத்தில்
    சிவவரலாறும், அடியார்கள் வரலாறும், திருநீற்றின் சிறப்புகளும்
    இடம் பெற்றுள்ளன.

    3.3.2 பதினோராம் திருமுறைச் சிறப்புகள்

        இத்திருமுறை பிரபந்தத் திருமுறை என்று சொல்லும்
    அளவிற்குச் சிற்றிலக்கிய வகைகளைப் பெற்றுள்ளது. அந்தாதி,
    இரட்டை மணிமாலை, உலா, கலம்பகம், மும்மணிக்கோவை,
    நான்மணிமாலை, ஒருபா ஒருபஃது, ஏகதேசமாலை, ஆற்றுப்படை,
    திருமறம் என்ற இலக்கிய வகைகளை இத்திருமுறையில்
    காணமுடிகிறது. மொத்தம் 40 நூல்கள் அமைந்துள்ளன. 1430
    திருப்பாடல்கள் உள்ளன. இத்திருமுறைக்கு மிகப் பெரிய சிறப்பு
    திருவாலவாயுடையார் என்ற சிவபெருமான் பாடியதாக அமைந்துள்ள
    திருமுகப் பாசுரம் இடம் பெற்றதேயாகும். இத்திருமுறையில் உள்ள
    40 நூல்களில் சிவபெருமானைப் பற்றியவை 25 ஆகும்.
    விநாயகரைப் பற்றி 3 நூல்களும், முருகனைப் பற்றி ஒரு நூலும்
    அமைந்துள்ளன. மற்ற பதினோரு நூல்கள் சிவனடியார்களைப்
    பற்றியவை. பத்துப்பாட்டில் ஒன்றான திருமுருகாற்றுப்படை
    இத்திருமுறையில் சேர்க்கப் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

    ●  இறைவன் பாடியது

        திருவாலவாய் என்பது மதுரையில் அமைந்துள்ள
    சிவபெருமான் திருக்கோவிலைக் குறிக்கும் பெயராகும். இத்திருக்
    கோவிலில் எழுந்தருளியுள்ள திருவாலவாயுடையார் அருளிச்
    செய்தது திருமுகப் பாசுரம் ஆகும். அறிவாற்றல் உடைய
    பெரியோர்கள் எழுதி அனுப்பும் கடிதத்தைப் பண்டைக்காலத்தில்
    திருமுகம் என வழங்குவர். தனக்குவமை இல்லாத சிவபெருமான்
    தன்பால் அன்புடைய வேந்தனாகிய சேரமான் பெருமாளுக்கு,
    பாணபத்திரனுக்குப் பொருள் வழங்கும்படியாக எழுதப் பெற்ற
    திருமுகமே இப்பதிகம் ஆகும். பாணபத்திரர் என்பவர் மதுரையில்
    வாழ்ந்த இசைப்பாணர் ஆவார். திருக்கோயிலில் இசைத்தொண்டு
    புரிந்து வந்தவர். அவருடைய வறுமையைத் தீர்ப்பதற்காக இறைவன்,
    சேரமான் பெருமாளுக்கு இத்திருமுகம் எழுதியுள்ளார். 12 அடிகளில்
    இப்பாசுரம் அமைந்துள்ளது. முதல் 4 அடிகளில் திருமுகத்தை
    அனுப்பும் சிவபெருமானின் சிறப்புக் கூறப்பெற்றுள்ளது. அதாவது
    திருமுகப் பாசுரம் எழுதுபவர் யார் என்பதைத் தெரிவிக்கும்
    அடிப்படையில் அவ்வரிகள் அமைந்துள்ளன. அடுத்த 4 வரிகளில்
    சேரமான் பெருமாளின் சிறப்புக் கூறப் பெற்றுள்ளது. இறுதி 4
    அடிகளில் பாணபத்திரரின் நிலையும் அவருக்குப் பரிசளிக்க
    வேண்டும் என்பதும் குறிக்கப்பெற்றுள்ளது.

    ●  காலத்தால் முற்பட்டவர்கள்

        இத்திருமுறையில் காரைக்கால் அம்மையார், சங்ககால
    நக்கீரர் இருவரின் பாடல்களும் அமைந்துள்ளன. காரைக்கால்
    அம்மையாரின் காலத்தை கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குள் குறிப்பர்.
    நக்கீரர்     சங்க     காலத்தைச்     சார்ந்தவர். இவருடைய
    திருமுருகாற்றுப்படை இத்திருமுறையில் தொகுக்கப் பெற்றுள்ளது.
    காரைக்கால் அம்மையார் பாடியதாக 4 நூல்கள் இடம் பெற்றுள்ளன.

        காரைக்கால் அம்மையாரின் திருவாலங்காட்டு மூத்த
    திருப்பதிகங்கள்
    இரண்டும்தாம், பின்னாளில் அருளாளர்கள்
    பாடிய பதிக அமைப்பிற்கு முன்னோடியாகும். இவருடைய
    வரலாற்றைச் சேக்கிழார் மிகச் சிறப்பாகத் தன் நூலில் பாடியுள்ளார்.
    அவ்வரலாற்றில் இந்நான்கு நூல்கள் பாடப்பெற்ற சூழலையும்
    விளக்கியுள்ளார். இவர் பாடிய மற்ற இலக்கியங்கள் திருஇரட்டை
    மணிமாலை, அற்புதத் திருவந்தாதி
    யாகும். திருவாலங்காட்டு
    மூத்த திருப்பதிகங்கள் ஒவ்வொன்றிலும் 11 பாடல்கள்
    அமைந்துள்ளன. பதினோராம் பாடல்கள் இரண்டும் திருக்கடைக்
    காப்புச் செய்யுள் என்ற பெயரைத் தாங்கி நூலைப்
    பாடியவருடைய பெயர், நூலைப் படிப்பதால் உள்ள பயன்
    ஆகியவற்றைப் பொருளாகப் பெற்றுள்ளன. திருஇரட்டை
    மணிமாலை என்பது கட்டளைக் கலித்துறை, வெண்பா என்ற
    இரண்டு செய்யுளினால் அமைந்ததாகும். அந்தாதி அமைப்பில்
    இருபது பாடல்களைப் பெற்றது. கட்டளைக் கலித்துறை என்ற
    பாவகை முதன்முதலாகக் கிடைத்தது இந்நூலில்தான்.

        இறைவனிடத்தில் அருள்பெற்ற அம்மையார் பாடிய பதிகம்
    அற்புதத் திருவந்தாதியாகும். அந்தாதி அமைப்பில் 101
    வெண்பாக்களால் ஆகியது. திருவருள் ஞானத்தின் பயனாகப்
    பாடப்பெற்ற நூல் ஆதலால் சிவஞானத்தின் இயல்பினையும், அன்பு
    உள்ளங்களையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது.

        திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் சங்ககாலப்
    புலவர்களில் ஒருவர் என்பது வெளிப்படை. நக்கீரர் பாடியதாகத்
    திருமுருகாற்றுப்படையோடு மேலும் 9 நூல்கள் நக்கீரதேவர்
    பெயரில் இத்திருமுறையில் இடம் பெற்றுள்ளன. சைவ வரலாற்று
    ஆசிரியர்கள்     திருமுருகாற்றுப்படை     தந்த     நக்கீரரும்
    இத்திருமுறையில் இடம் பெற்றுள்ள பிற நூல்களைத் தந்த நக்கீரரும்
    வெவ்வேறானவர்கள் என்பதைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளனர்.
    சங்க இலக்கியப் புலவர்களின் பெயர்களில் ஆர்வம் கொண்ட
    தமிழ்மக்கள் காலத்திற்குக் காலம் தங்களின் பெயர்களாக
    அப்பெயர்களை வைத்துக்கொள்ளும் மரபினை இத்திருமுறையில்
    இடம் பெற்ற நக்கீரதேவ நாயனார் பெயர் வலியுறுத்துகிறது. சங்க
    இலக்கியத் தொகை நூலான பத்துப்பாட்டில் முதலாவதாக
    இடம்பெற்ற பாடல் திருமுருகாற்றுப்படையாகும். திருமுருகன் அருள்
    பெற்ற ஒருவர் தனக்கு எதிர்ப்பட்ட ஒருவரைத் திருமுருகனின்
    அருள்பெற ஆற்றுப்படுத்துவது திருமுருகாற்றுப்படையாகும். 317
    வரிகள் கொண்ட இத்திருமுருகாற்றுப் படையில் முருகன்
    எழுந்தருளியுள்ள படைவீடுகள், முருகனின் ஆறு திருமுடிகள்,
    பன்னிரண்டு திருக்கரங்கள் ஆகியவை பற்றிய செய்திகள் இடம்
    பெற்றுள்ளன.

    ●  காலத்தால் பிற்பட்டவர்கள்

        காரைக்கால் அம்மையாருக்குப் பிற்பட்ட அதாவது 5ஆம்
    நூற்றாண்டிற்குப் பிற்பட்ட சிவனருட் செல்வர்கள் பதின்மர் பாடிய
    இலக்கிய வகைகளும் இத்திருமுறையில் இடம் பெற்றுள்ளன.
    இவர்கள் பாடிய நூல்கள் பற்றிய குறிப்புகள் இப்பகுதியில்
    தரப்பெறுகின்றன.

    1. ஐயடிகள் காடவர்கோன் பாடிய சேத்திர வெண்பா 24
      வெண்பாக்களைக் கொண்டது. சிவபெருமான் திருக்கோயில்
      கொண்டு     வீற்றிருந்து அருளும் திருத்தலங்களின்
      பெருமைகளை இந்நூல் குறிப்பிடுகிறது. மேலும் யாக்கை,
      இளமை, செல்வம் என்ற மூன்றின் நிலையாமையை
      இந்நூல் பாடல்கள் வலியுறுத்துகின்றன. ஐயடிகள் பெற்ற உலக
      அனுபவங்களும்     மெய்யுணர்வும்     அப்பாடல்களில்
      தரப்பெற்றுள்ளன.
    2. சேரமான் பெருமாள் பாடியவைகளாகப் பொன்வண்ணத்து
      அந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கயிலாய
      ஞானஉலா
      என்ற மூன்று நூல்கள் இடம் பெற்றுள்ளன.
      தில்லைச் சிற்றம்பலத்தில் இறைவனைக் கண்டு பாடியது
      பொன்வண்ணத்து அந்தாதியாகும். கட்டளைக் கலித்துறை
      யாப்பில் 100 பாடல்களைப் பெற்றது. இந்நூல் பொன்வண்ணம்
      என்று தொடங்கி பொன்வண்ணம் என்று முடிந்து அந்தாதி
      அமைப்பைப் பெற்றுள்ளது. அகத்துறை அமைப்பில் பாடப்
      பெற்றுள்ளது.

        மும்மணிக்கோவை என்பது ஆசிரியம், வெண்பா, கட்டளைக்
    கலித்துறை என்ற மூவகைப்பா அமைப்பில் அந்தாதியாகப் பாடப்
    பெற்றது.     30 பாடல்களைக் கொண்டது. திருவாரூரில்
    எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றியதால் இந்நூல்
    திருவாரூர் மும்மணிக்கோவை என்ற பெயரைப் பெற்றது.
    அகப்பொருள் அடிப்படையில் பாடப் பெற்றது.

        திருக்கயிலாய     ஞானஉலா,     உலா இலக்கியத்தில்
    முதன்மையானதாகும். பேதை முதல் பேரிளம் பெண் ஈறாக உள்ள
    7 பருவங்களைக் கொண்ட மகளிர், நகரில் உலா வந்த தலைவனைக்
    கண்டு காதல் கொண்டு பாடுவதாக அமைவது உலா இலக்கியம்
    ஆகும். இந்த அடிப்படையில் திருக்கயிலாய ஞான உலா
    அமைந்துள்ளது. இது முதன்மைநூல் என்பதால் ஆதி உலா
    என்றும் வழங்கப்பெறும். ;கலிவெண்பாவில் அமைந்துள்ள இந்நூலில்
    இறைவனின் பழமை வரலாறும், பெருமைகளும் மிகச் சிறப்பாகக்
    கூறப்பெற்றுள்ளன. ஒவ்வொரு பருவத்து மகளிரது தோற்றத்தின்
    வருணனையும் மிகச் சிறப்பாகக் கூறப்பெற்றுள்ளது.

    1. பிற்காலத்து நக்கீரதேவ நாயனார் பாடிய நூல்களாகக்
      கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி என்ற நூல் முதலாக ஒன்பது நூல்கள் அமைந்துள்ளன. திருக்காளத்தி மலையில்
      எழுந்தருளியுள்ள இறைவனின் புகழைப் பாடுவது கயிலைபாதி
      காளத்திபாதி அந்தாதி நூலாகும். இது 100 வெண்பாக்களைக்
      கொண்டது. 1, 3, 5, என்று வருகின்ற ஒற்றைப்படை எண்கள்
      அமைந்த வெண்பாக்கள் ஐம்பதும், திருக்கயிலை இறைவனைப்
      போற்றுகின்றன. 2, 4, 6, என்று வருகின்ற இரட்டைப்படை
      எண்களைக் கொண்ட வெண்பாக்கள் ஐம்பதும் திருக்காளத்தி
      மலை இறைவனைப் போற்றுகின்றன. எனவேதான் இந்நூலுக்குக்
      கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி என்ற பெயர் ஏற்பட்டது.
      இறைவனின் பெருமைகள் இந்நூலில் நாவாரப் போற்றிப்
      பாடப் பெறுகிறது.

        திருஈங்கோய்மலையில்     கோயில்     கொண்டருளிய
    சிவபெருமானைப் போற்றிய 70 வெண்பாக்களைக் கொண்டது
    திருஈங்கோய்மலை எழுபது என்ற இலக்கியமாகும். வெண்பாவில்
    இரண்டடிகள் ஈங்கோய் மலையின் அழகையும் இரண்டடிகள்
    இறைவனின் பெருமையையும் தருகின்றன. மலை குறிஞ்சித்திணை
    என்பதால் குறவர்களின் வாழ்வியல் முறைகளும் இப்பாடல்களில்
    இடம் பெற்றுள்ளன.

        திருவலஞ்சுழி மும்மணிக்கோவை என்பது திருவலஞ்சுழி
    இறைவனைப் போற்றுவதாகும். ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக்
    கலித்துறை ஆகிய பா அமைப்பில் 30 பாடல்களைக் கொண்டது
    இந்நூல். இறைவனது பேரழகில் ஈடுபட்டுக் காதல் கொண்ட தலைவி
    வருந்துவது போன்ற பொருட்சிறப்பைப் பெற்றது இவ்விலக்கியம்.
    அகப்பொருட் துறைகள் பலவற்றை இதில் காணலாம்.

        திருவெழு கூற்றிருக்கை என்பது சித்திரக் கவி வகைகளில்
    ஒன்று. ஒன்று என்னும் எண்ணினை முதலாகக் கொண்டு தொடங்கி
    படிப்படியாக ஒவ்வொரு எண்ணாகக் கூட்டியும் பிறகு
    ஒன்றொன்றாகக் குறைத்தும் இங்ஙனம் ஒன்று முதல் ஏழு ஈறாக
    எண்ணும்     நிலையில் அமைந்த     இலக்கியவகை இது.
    இவ்விலக்கியத்திற்கு முன்னோடியாகத் திகழ்வது திருஞானசம்பந்தர்
    பாடிய திருவெழு கூற்றிருக்கையாகும். மாதொரு பாகனாக விளங்கும்
    சிவபெருமானின் அருட்செயல்கள் இவ்விலக்கியத்தில் சிறப்புறப்
    பாடப் பெற்றுள்ளன.

        நக்கீரதேவர், திருவாலவாய் இறைவனை முன்னிலைப்
    படுத்திப் போற்றிப் பாடிய இசைப்பாட்டு பெருந்தேவபாணி ஆகும்.
    இது 67 அடிகளால் இயன்ற ஆசிரியப்பா ஆகும். ஒரே பாடல்.
    தெய்வத்தை முன்னிலையாக வைத்துப் போற்றுகின்ற பாடல்
    என்பதால்     பெருந்தேவபாணி ஆயிற்று. இறைவனுடைய
    திருப்பெயர்கள், இறைவனின் அருட்செயல்கள், இறைவன் நீக்கமற
    நிறைந்திருப்பது ஆகியவை இவ்விலக்கியத்தில் போற்றப்
    பெற்றுள்ளன.

        இறைவனின் வழியில் நில்லாத தீயவரைக் கோபிப்பதும்,
    அருள்வழி நிற்போரைக் காப்பதும் ஆகிய இருவழிச்
    செய்திகளையும் அடுத்தடுத்துக் கூறுவது கோபப் பிரசாதம் என்ற
    இலக்கியமாகும். இது 99 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவில்
    அமைந்தது. அடைக்கலம் வந்தவரைக் காப்பதும் ஆணைவழி
    நடக்காதவரை     இறைவன்     தண்டிப்பதுமாகிய செயல்கள்
    இவ்விலக்கியத்தில் அமைந்துள்ளன.

        தலைவன் பிரிவால் வருந்தும் தலைவியை நோக்கித் தோழி
    கார்ப்பருவம் வந்தது, தலைவன் வருவார் என்று ஆற்றுப்படுத்துவது
    போலப் பாடப்படுவது காரெட்டு என்ற இலக்கியமாகும்.
    கார்காலத்தின் சிறப்பை எட்டுப்பாடல்களால் கூறுவதால் காரெட்டு
    என்ற பெயரைப் பெற்றது. கார்காலத்தின் வரவை உரைக்கும்
    பொழுதே கார்கால மழைபெய்வதற்குரிய திருவருளைத் தருகின்ற
    இறைவனின் பெருமையும் இந்நூலில் கூறப்பெறுகிறது.

        போற்றித் திருக்கலிவெண்பா என்பது சிவபெருமானின்
    பெருமைகளைக் கூறி அவரைப் போற்றுவதாக அமைந்ததாகும்.
    கலிவெண்பா யாப்பில் 45 கண்ணிகளைக் கொண்டது இந்நூல்.
    இதன்கண் சிவபெருமான் செய்தருளிய அருட்செயல்கள்
    விரித்துரைக்கப் பெறுகின்றன.

        நக்கீரதேவர் பாடியதாக இறுதியில் அமைந்துள்ள இலக்கியம்
    திருக்கண்ணப்பதேவர் திருமறம் ஆகும். மறம் என்ற சொல்
    வீரம் என்ற பொருளைத் தரும். புறத்திணையைப் பொருளாகக்
    கொண்டு இவ்விலக்கியம் பாடப்பெற்றுள்ளது. மறவரில் ஒருவரான
    கண்ணப்பரின் வீரச்செயல்களைப் போற்றிப் பாடப் பெற்றது.
    கண்ணப்பரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் பெரியபுராணத்தின்
    அடிப்படையில் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. 157 வரிகளைக்
    கொண்ட ஆசிரியப்பாவால் அமைந்தது இவ்விலக்கியம்.

    1. அடுத்த ஆசிரியர் கல்லாடதேவர் ஆவார். இவர் பாடியதாக
      ஒரு நூல் இடம் பெற்றுள்ளது. திருக்கண்ணப்பதேவர்
      திருமறம்
      என்பது அது. கல்லாடம் என்ற நூலைத் தந்த
      கல்லாடர் வேறு இவர் வேறு. இவருடைய இலக்கியம் 38
      அடிகளால் பாடப்பெற்ற ஆசிரியப்பாவினைக் கொண்டுள்ளது.
      நக்கீர தேவர் பாடியதைப் போலவே இந்நூலும் கண்ணப்பரின்
      பெருமையை எடுத்துக் கூறுகிறது.
    2. கபிலதேவ நாயனார்     பாடியதாக மூத்தநாயனார்
      திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான் திருஇரட்டை
      மணிமாலை, சிவபெருமான் அந்தாதி
      என்ற நூல்கள்
      இத்திருமுறையில் இடம் பெற்றுள்ளன. விநாயகப் பெருமானைப்
      போற்றிப் பரவும் நூலாக வெண்பா, கட்டளைக் கலித்துறைப்
      பாவகையில் 20 பாடல்களைக் கொண்டது மூத்த நாயனார்
      திருஇரட்டை மணிமாலையாகும். விநாயகப் பெருமானின்
      பெருமையும், அவருடைய அருளிச் செயல்பாடுகளும்
      இவ்விலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. சிவபெருமான் இரட்டை
      மணிமாலையில் 37 பாடல்கள் அமைந்துள்ளன. இரட்டை மணி
      மாலைகளில் 20 பாடல்கள்தான் அமையவேண்டும் என்பது
      மரபு. ஆனால் இதில் அதிகமான பாடல்கள் உள்ளன. 19
      வெண்பாக்களும், 18 கலித்துறைகளும் இந்நூலில் உள்ளன.
      சிவபெருமானின் பெருமைகளை இந்நூல் கேள்வி - பதில்
      முகத்தான் கூறுகிறது. இவர் பாடிய சிவபெருமான் திருவந்தாதி
      100 வெண்பாக்களால் அந்தாதி அமைப்பில் காணப்பெறுகிறது.
      பல திருத்தலங்களின் பெருமைகளும் அங்கு எழுந்தருளியுள்ள
      சிவபெருமானின் பெருமைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
    3. பரணதேவ நாயனார் பாடியதாகச் சிவபெருமான் அந்தாதி
      என்ற ஒரு நூல் இத்திருமுறையில் இடம் பெற்றுள்ளது. 100
      பாடல்களைக் கொண்டது. அக இலக்கிய மரபும்
      காணப்பெறுகிறது.
    4. 11ஆம்     திருமுறை     ஆசிரியர்களில்     ஒருவர்
      இளம்பெருமானடிகள் ஆவார். இவர் பாடிய இலக்கியம்
      சிவபெருமான் திருமும்மணிக்கோவை என்பதாகும்.
      அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய பா
      வகைகளைக் கொண்டு 30 பாடல்களால் இயற்றப் பெற்றது
      இந்நூல். சிறிது கடினநடையில் பாடல்கள் அமைந்துள்ளன.
      அகப்பொருட் துறையில் பாடல்கள் அமைந்துள்ளன.
      இறைவனை முன்னிலைப் படுத்தி அவனுடைய முத்தொழிலை, அருள்நிலையைப் பாடுவதாகும்.
    5. அதிரா அடிகள் பாடிய மூத்த பிள்ளையார்
      திருமும்மணிக்கோவை
      இலக்கியம் இத்திருமுறையில் இடம்
      பெற்றுள்ளது. இதுவும் அகவல், வெண்பா, கட்டளைக்
      கலித்துறையில் அமைந்த 30 பாடல்களைக் கொண்டது.
      ஆனால் இறுதி 7 பாடல்கள் கிடைக்கப் பெறவில்லை.
      கிடைத்த பாடல்களின் சில தொடர்கள் பொருள் விளங்கா
      நிலையில் உள்ளன. விநாயகப் பெருமானின் பெருமைகளைத்
      தருவது இந்நூல்.
    6. திருவெண்காட்டு அடிகள் என்று     அழைக்கப்படும்
      பட்டினத்தார் பாடியதாக 5 இலக்கியங்கள் இத்திருமுறையில்
      இடம் பெற்றுள்ளன. பிற்காலத்திய பட்டினத்தாரும் 11ஆம்
      திருமுறைப் பட்டினத்தாரும் வேறு வேறு என்ற கருத்தும்
      உண்டு. கோயில் நான்மணிமாலை என்ற நூல் தில்லைச்
      சிற்றம்பலத்தின் பெருமையைக் கூறுவதாகும். வெண்பா,
      கலித்துறை, விருத்தம், அகவல் என்ற நால்வகைப் பாக்களில்
      40 செய்யுட்கள் கொண்ட நூல் இது. இவ்வகை
      இலக்கியத்திற்கு     இதுவே     முதன்மையான     நூல்.
      சீர்காழிப்பதியின் ஒரு பெயர் திருக்கழுமலம் ஆகும்.
      சீர்காழிப்பதியை அகவல், வெண்பா, கலித்துறை என்ற
      மூவகைப் பாக்களால் பாடப்பெற்ற திருக்கழுமல மும்மணிக்
      கோவை
      யில் தற்பொழுது 12 பாடல்களே கிடைத்துள்ளன.
      தோணிபுரத்து இறைவனுடைய பெருமைகள் இப்பாடல்களில்
      இடம் பெற்றுள்ளன. திருவிடைமருதூர் மும்மணிகோவை
      என்பது அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்ற 3
      பாவகையில் திருவிடை மருதூரில் எழுந்தருளியுள்ள
      இறைவனை 30 பாடல்களால் பாடியது. திருஏகம்பமுடையார்
      திருவந்தாதி
      என்ற நூல் அந்தாதி அமைப்பில் 100
      பாடல்களைக் கொண்டது. காஞ்சி நகரத்தில் உள்ள
      திருவேகம்பம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள
      சிவபெருமானைப் போற்றிப் பாடுவதாகும். திருவொற்றியூர்
      ஒருபா ஒருபஃது
      என்ற இலக்கியம் ஆசிரியப்பா வகையில் 10
      பாடல்களால் திருவொற்றியூர் இறைவனின் பெருமையை
      உணர்த்துவதாகும். இப்பாடல்களில் சைவசித்தாந்த உண்மைகள்
      பெரிதும் இடம் பெற்றுள்ளன.

        11ஆம் திருமுறையில் இறுதியாக இடம்பெறுபவர் ஆசிரியர்
    நம்பியாண்டார் நம்பி. இவர் பாடியதாக 10 இலக்கியங்கள்
    இத்திருமுறையில் இடம் பெற்றுள்ளன. முதல் நூல் திருநாரையூர்
    என்ற திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பொல்லாப் பிள்ளையாரைப்
    பற்றிப் பாடியது. திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை
    என்ற இந்நூல் வெண்பா, கட்டளைக் கலித்துறை யாப்பில்
    அமைந்தது. 20 பாடல்களைக் கொண்டது. கோயில்
    திருப்பண்ணியர் விருத்தம்
    என்பது கட்டளைக் கலித்துறை
    அமைப்பில் தில்லைச் சிற்றம்பல இறைவனைப் போற்றிப் பாடியது.
    70 கட்டளைக் கலித்துறைகளைக் கொண்டது. திருத்தொண்டர்
    திருவந்தாதி
    என்பது சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை
    அடியொற்றிப்     பின்னால்     சேக்கிழாரால் பாடப்பெற்ற
    பெரியபுராணத்திற்கு அடிப்படையாக, 63 இறையடியார்களைப்
    பற்றிப் பாடப்பெற்ற நூல். 89 கட்டளைக் கலித்துறைகள் இந்நூலில்
    உள்ளன. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி என்பது
    ஞானசம்பந்தரின் பெருமைகளை 100 கட்டளைக் கலித்துறைகளால்
    பாடிப் போற்றியதாகும். அகத்துறை அமைப்பு இவ்விலக்கியத்தில்
    உள்ளது. ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
    என்பது 100 விருத்தப் பாடல்களைக் கொண்டது. ஞானசம்பந்தரின்
    வரலாற்று நிகழ்ச்சிகளைக் கொண்டது. ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை என்பது அகவல், வெண்பா, கட்டளைக்
    கலித்துறை ஆகிய 3 பாவினங்களால் 30 பாடல்களைக் கொண்டது.

        ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை என்ற
    இலக்கியம் கலிவெண்பாவினால் உலா இலக்கியத்திற்கு ஏற்பப்
    பாடப்பெற்றுள்ளது. 143 கண்ணிகளைக் கொண்டது. ஆளுடைய
    பிள்ளையார் திருக்கலம்பகம்
    பல பா வகைகளையும், பல
    பொருள் வகைகளையும் கலந்து பாடப்படுகின்ற கலம்பக இலக்கிய
    வகைநூல். இதில் 49 பாடல்கள் கிடைத்துள்ளன. ஆளுடைய
    பிள்ளையார் திருத்தொகை
    என்ற நூல் திருஞானசம்பந்தரின்
    வரலாற்றைத் தொகுத்துக் கூறுவதால் இப்பெயர் பெற்றது. 65
    அடிகளைக் கொண்ட கலிவெண்பாவால் ஆகியது. மேலே
    குறிப்பிட்ட நூல்களுள் முதல் 3 நூல்களைத் தவிரப் பின்னர்
    உள்ள 6 நூல்களும் திருஞானசம்பந்தரின் பெருமைகளைக்
    கூறுகின்ற நூல்களாகும். நம்பியாண்டார் நம்பி திருஞானசம்பந்தர்
    மீது கொண்ட பக்தியினை இவ்விலக்கியங்கள் புலப்படுத்துகின்றன.
    திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை என்ற நூல்
    திருநாவுக்கரசரின் பெருமைகளைக் கூறுவதாகும். ஏகாதசம்
    என்பதற்கு 11 என்பது பொருள். 11 பாடல்களால் திருநாவுக்கரசரின்
    பெருமைகளையும், வரலாற்றுச் செய்திகளையும் நம்பியாண்டார்
    நம்பி போற்றிப் புகழ்கின்றார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:23:31(இந்திய நேரம்)