தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

5.3-சிவஞான போதமும் வழிநூல்களும்

  • 5.3 சிவஞான போதமும் வழிநூல்களும்


        திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்ற இரண்டு
    நூல்களும் சைவ சித்தாந்தக் கருத்துகளைப் பொதுநிலையில்
    அருளிய நூல்களாகும். தத்துவக் கருத்துகளை வரையறையாக
    இந்நூல்கள் கூறவில்லை. இந்நிலையில் பல்வேறு சமயங்கள் நிலவி
    வந்த தமிழகத்தில் சைவ சமயக் கருத்துகளை வரையறுக்க
    வேண்டிய சூழல் ஏற்பட்டது. அத்தகைய சூழலாகிய 13ஆம்
    நூற்றாண்டின் தொடக்கத்தில் இறையருளால் தோன்றியவர்தான்
    மெய்கண்டார். அவர் அருளிய சிவஞான போதம்தான் சைவ
    சித்தாந்தக் கருத்துகளை வகைப்படுத்தித் தந்தது. எனவேதான் சைவ
    சித்தாந்த சாத்திரங்களில் சிவஞான போதம் முதன்மை பெற்றது.
    மேலும் இந்நூலின் அமைப்பு முறையின் சிறப்பால், கூறுகின்ற
    பொருள் விளக்கத்தால் முன்னர்த் தோன்றிய நூல்களையும்,
    பின்னர்த் தோன்றிய நூல்களையும் சேர்த்து மெய்கண்ட சாத்திரம்
    என்று குறிப்பிட்டனர். சிவஞானபோதத்தை அடியொற்றியே சைவ
    சித்தாந்தத் தத்துவக் கருத்துகள் இன்றைக்கும் வகைப்படுத்தப்
    பெறுகின்றன.

        சிவஞான போதத்தில் உள்ள கருத்துகளை விளக்குவதற்கு
    உரைநூல்களாகப் பின்னர்த் தோன்றிய சாத்திர நூல்கள் விளங்கின.
    மேலும் சிவஞான போதத்திற்கு உரையாகத் (உரைநடையில்)
    தோன்றிய சிவஞான முனிவர் எழுதிய மாபாடியம் என்ற
    பேருரையும், சிற்றுரையும் சிறப்புடன் திகழ்கின்றன. அத்துடன்
    இக்காலம் வரை சிவஞான முனிவரின் உரையின் அடிப்படையில்
    சிவஞான போதத்திற்குப் பல உரைகள் எழுதப் பெற்றுள்ளன.

        இந்நூலுக்கு வழிநூல்களாகப் பின்னர்த் தோன்றிய நூல்களைக்
    குறிப்பிடுவர். அருணந்தி சிவாச்சாரியார் எழுதிய இருபா இருபஃதும்,
    சிவஞான சித்தியாரும் மெய்கண்டார் காலத்திலேயே தோன்றிய
    வழிநூல்கள் ஆகும். பின்னர் உண்மை விளக்கம் என்ற நூலும்,
    உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப் பெற்ற சிவப்பிரகாசம் உள்ளிட்ட
    8 நூல்களும், மெய்கண்டார் காலத்திற்குப் பின்னால் தோன்றிய
    சார்பு நூல்கள் ஆகும்.

    5.3.1 சிவஞான போதம்

        சிவஞானபோதத்தை அருளிய மெய்கண்டாரின் தந்தை
    அச்சுதக்களப்பாளர். ஊர் திருப்பெண்ணாடம். இவருடைய
    இயற்பெயர் சுவேதவனப் பெருமாள் என்பதாகும். திருவெண்ணெய்
    நல்லூரில் மாமாவின் வீட்டில் குழந்தையாக வளர்ந்த போது
    முற்பிறப்பின் பயனால் சிவனருள் பெற்றார். பரஞ்சோதி
    மாமுனிவர்
    என்ற ஞானியின் திருவருளால் மெய்கண்டார் என்று
    திருப்பெயர் சூட்டப் பெற்றார். இறையருளால் ஞானாசிரியராகிய
    பரஞ்சோதி முனிவரின் மூலமாகச் சிவஞானம் பெற்று மெய்கண்டார்
    இளமையிலேயே     தத்துவ     வித்தகராய்     விளங்கினார்.
    திருவெண்ணெய்நல்லூரில் இருந்து கொண்டு தன்னிடம் பாடம்
    கேட்ட மாணவர்களுக்குச் சாத்திர விளக்கங்களை அருளினார்.
    அச்சாத்திர விளக்கங்களே சிவஞானபோதம் என்ற நூலாயிற்று.
    மெய்கண்டாரின் தத்துவ விளக்கங்களைப் பெற்ற மாணவர்களில்
    குறிப்பிடத் தக்கவர்கள் அருணந்தி சிவாச்சாரியார், மனவாசகம்
    கடந்தார், சிற்றம்பல நாடிகள்
    என்போர் ஆவர். இவருடைய
    வரலாற்றில் வேறு செய்திகள் கிடைக்கப் பெறவில்லை. இறுதிவரை
    ஞானியாகவே வாழ்ந்து ஐப்பசித் திங்கள் சுவாதி நட்சத்திரத்தில்
    இறைவனோடு இரண்டறக் கலந்தார்.

        இவர் அருளிய நூலாகக் கிடைத்திருப்பது சிவஞானபோதம்
    மட்டுமே. இந்நூல் 12 சூத்திரங்களைக் கொண்டது. சைவ
    சித்தாந்தத்தின் அடிப்படையான பதி, பசு, பாசத்தைத் தெளிவாகச்
    சிவஞானபோதம் விளக்குகிறது.     நூலின்     முதற்பகுதியான
    பொதுப்பகுதியானது முப்பொருள்களின் உண்மைநிலையையும்,
    இலக்கணத்தையும் கூறுகிறது. இரண்டாவது பகுதியான சிறப்புப்
    பகுதியானது முக்திப்பேறு என்ற வீடு பெறுவதற்குரிய ஞான
    நெறியினையும் அந்நெறி நின்றார் பெறும் பயனையும் கூறுகிறது.
    ஒவ்வொரு சூத்திரத்திற்கும் கருத்துரையும் விளக்கமும் அமைந்த
    அதிகரணங்கள் உள்ளன.

        மொத்தம் 39 அதிகரணங்கள் அமைந்துள்ளன. சூத்திரம்
    தரும் பொருள்களை விளக்க ஒவ்வொரு அதிகரணத்திலும்
    உதாரணப் பாடல்கள் கருத்திற்கு ஏற்ப அமைந்துள்ளன. அத்தகைய
    உதாரண வெண்பாக்கள் 82 ஆகும். அவையடக்கம் வெண்பாவிலும்,
    காப்புச் செய்யுள் வஞ்சித்துறையிலும் அமைந்துள்ளன. 12
    சூத்திரங்களையும் பொது, சிறப்பு என்று இரு பெரும் பிரிவுகளில்
    பிரித்ததோடு நான்கு இயல்களாகவும் ஆசிரியர் பிரித்துள்ளார்.
    முதல் மூன்று சூத்திரம் பிரமாண இயல் ஆகும். அடுத்த மூன்று
    சூத்திரம் இலக்கண இயல் ஆகும். அடுத்த மூன்று சூத்திரம் சாதன
    இயல்
    ஆகும். இறுதி மூன்று சூத்திரம் பயனியல் ஆகும்.

    5.3.2 சிவஞான சித்தியார்

        மெய்கண்டாரின்     மாணவர்களில்     முதன்மையானவர்
    அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். இவரின் இயற்பெயர்
    சகலஆகம     பண்டிதர் ஆகும். ஊர் திருத்துறையூர்.
    மெய்கண்டாரின் தந்தையாருக்குக் குலகுருவாக இருந்து பின்னர்
    மெய்கண்டாரின் ஞானத்தினை அறிந்து அவரிடம் தன்னை
    மாணவராக மாற்றிக் கொண்டார். மெய்கண்டாரிடம் அருள்ஞானம்
    பெறுவதற்கு முன்னால் தான் குருவாக இருந்து தன்னிடத்தில்
    வருபவர்களுக்கு உபதேசம் செய்து வந்தவர். வடமொழியும்
    தமிழ்மொழியும் அறிந்தவர். சிவ ஆகமங்களை நன்கு கற்றவர்.
    என்றாலும் குழந்தைப் பருவத்தினரான மெய்கண்டாரின் சைவ
    சித்தாந்த ஞானத்தை உணர்ந்து அவரிடம் உபதேசம் பெற்றவர்.
    அவரிடம் சிவஞான போதத்தை முழுமையாக அறிந்து சிவஞான
    சித்தியார்
    என்ற நூலினை அருளிச் செய்தார். மேலும் இருபா
    இருபஃது
    என்ற நூலையும் அருளினார்.

        சிவஞான சித்தியார் பரபக்கம், சுபக்கம் என்ற இரண்டு
    பகுதிகளைக் கொண்டது. பரபக்கம் 301 செய்யுள்களை உடையது.
    உலகாயதம், பௌத்தம், சமணம், மீமாம்சை, ஏகான்மவாதம்,
    சாங்கியம், பாஞ்சராத்திரம்
    ஆகிய மதங்களின் கருத்துகளையும்,
    அவை தத்துவ உலகத்திற்குப்     பொருந்தாதவை என்ற
    மறுப்புக்களையும் கூறுவதாக இப்பகுதி அமைந்துள்ளது. சுபக்கம்
    328 செய்யுள்களைக் கொண்டது. மெய்கண்டாரின் சிவஞான
    போதத்தின் 12 சூத்திரங்களின் கருத்துகளையும், அவை தருகின்ற
    விளக்கங்களையும் விளக்கும் உரைநூலாகச் செய்யுள் வடிவில்
    இப்பகுதி அமைந்துள்ளது. இந்நூலில் அளவை இயல் என்பது
    மட்டும் சிவஞானபோதத்தின் குறிப்பை விரிவாக விளக்கும்
    பகுதியாக அமைந்துள்ளது. இந்த அளவைஇயல், பாயிரப் பகுதியை
    அடுத்து அமைந்துள்ளது. பின்னர் சிவஞானபோதத்தின் 12
    சூத்திரங்களில் கூறப்பெற்ற சித்தாந்தக் கருத்துகள் விரிவாகப்
    பாடல்கள் மூலம் தரப்பெற்றுள்ளன.

        மெய்கண்டார் குறிப்பாகக் கூறிய பிற மத மறுப்புகள்
    சிவஞான சித்தியாரின் பரபக்கத்தில் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன.
    அப்பிற மதங்கள் அனைத்தும் சிவஆகமப் பிரமாணத்தை ஒப்புக்
    கொள்ளாதவை. மேலும் அவற்றுள் சில சிவ வைதீகச் சார்பு
    இல்லாதவையும் ஆகும். வைதீகச் சார்பு உடைய சமயங்களும்
    சைவ     சித்தாந்தக்     கருத்துகளுக்குப்     புறம்பானவையாக
    அமைந்துள்ளன. இத்தகைய மதங்களின் கருத்துகளை முதற்கண்
    கூறி அவை எவ்வாறு சைவ சமயத் தத்துவங்களுக்குப்
    புறம்பானவை என்று பரபக்கம் கூறுகிறது. சிவஞான சித்தியாரின்
    பரபக்கப் பகுதி மூலம் ஆசிரியரின் பரந்துபட்ட சமய உணர்வு
    வெளிப்படுகிறது.

    5.3.3 இருபா இருபஃது

        அருணந்தி சிவாசாரியாரால் எழுதப் பெற்ற நூல். இருபது
    பாடல்களைக் கொண்டது. வெண்பா, ஆசிரியப்பா என்ற
    இருவகைப் பாவகையால் அமைந்த நூல் என்பதால் இருபா
    இருபஃது
    என்று நூலிற்குப் பெயர் ஏற்பட்டது. சாத்திரங்கள்
    பதினான்கிலும் இந்நூலே பாவகை, தொகையால் பெயர் பெற்றதாகும்.
    இப்பாடல்கள் இருபதும் அந்தாதி அமைப்பில் அமைந்துள்ளன.
    இந்நூலில் மெய்கண்டாரின் பெருமை ஆசிரியரால் சிறப்பாகக்
    கூறப்பெற்றுள்ளது. மேலும் பாடலின் கருத்துகள் வினாவிடை
    அமைப்பாக அமைந்துள்ளன. தத்துவ விளக்கங்களை அறியத் தன்
    ஞானாசிரியரிடம் நூலாசிரியர் சந்தேகங்களைக் கேட்பது போலவும்,
    அவற்றிற்கு ஞானாசிரியர் விடையளிப்பது போலவும் பாடற்
    கருத்துகள் அமைந்துள்ளன. இப்பாடல்கள் சைவ சித்தாந்த
    முப்பொருளின் கருத்துகளை நடைமுறைக்கு ஏற்ப விளக்குகின்றன
    எனலாம்.

    5.3.4 உண்மை விளக்கம்

        உண்மை விளக்கம் என்ற சாத்திர நூல் மனவாசகம்
    கடந்தார்
    என்பவரால் இயற்றப் பெற்றது. இவரும் மெய்கண்டாரின்
    மாணவரே ஆவார். இந்நூலில் 53 வெண்பாக்கள் அமைந்துள்ளன.
    இந்நூல், சைவ சித்தாந்த சாத்திர நூல்களைக் கற்க
    விரும்புகிறவர்கள் முதன் முதலில் கற்க வேண்டிய நூலாகும்.
    எளிமையாகக் கற்க வினா விடை அமைப்பில் இந்நூல்
    அமைந்துள்ளது. 36 தத்துவங்கள், மும்மலங்கள் ஆகியவற்றின்
    இயல்பு யாது எனக் கேட்கப் பெற்று அவற்றிற்குரிய விடைகளும்
    தரப் பெற்றுள்ளன. மேலும் இறைவனைப் பற்றிய தத்துவங்களும்
    வினா விடையாகவே அமைந்துள்ளன. இந்நூலில் மிகவும்
    குறிப்பிடத்தக்கது     ஐந்தெழுத்து     பற்றிய     பகுதியாகும்.
    இவையனைத்தும் மெய்கண்டாரிடம் வினவுவது போலவும் அவர்
    விடையளிப்பது போலவும் அமைந்துள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:26:00(இந்திய நேரம்)