தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

5.2-சிவஞான போதத்திற்கு முந்திய நூல்கள்

  • 5.2 சிவஞான போதத்திற்கு முந்திய நூல்கள்


        சிவஞான போதத்திற்கு முந்திய நூல்கள் திருவுந்தியாரும்,
    திருக்களிற்றுப்படியாரும் ஆகும். இவ்விரண்டு நூல்களும்
    பதினோராம் நூற்றாண்டில் தோன்றியவை ஆகும். இவ்விரண்டு
    நூல்களும்     இறைவனுடைய     திருவடியை அடைவதற்கான
    வழிமுறைகளைச் சிறந்த முறையில் கூறுகின்றன. இவ்விரண்டு
    நூல்களும், தத்துவங்களைச் சிவன் அடியார்களின் வரலாறுகளைக்
    கொண்டு விளக்கிக் கூறுவதால் சாத்திர நூல்களில் சேர்க்கப்
    பட்டுள்ளன. திருவுந்தியார் கூறும் கருத்துகளை அடியொற்றி அதன்
    உரைநூலாகத் திருக்களிற்றுப்படியார் விளங்குகிறது. எனவே
    இவ்விரண்டு நூல்களையும் இணைத்துச் சொல்லுகின்ற வழக்கமும்
    உண்டு. பின்னால் வந்த 12 நூல்களுக்கும் இவ்விரண்டு நூல்களுக்கும்
    தத்துவ அடிப்படையில் எவ்விதக் கருத்து முரண்பாடும் இல்லை
    என்றாலும் பின்னவற்றைப் போல இவ்விரு நூல்களும் தத்துவக்
    கருத்துகளை வகைப்படுத்தித் தரவில்லை என்பதையும் நினைவில்
    கொள்ளவேண்டும்.

    5.2.1 திருவுந்தியார்

        இந்தச் சாத்திர நூலை அருளிச் செய்தவர் திருவியலூர்
    உய்ய வந்த தேவர்
    ஆவார். இந்நூல் கலித்தாழிசை என்னும்
    செய்யுள் வடிவில் 45 பாடல்களால் இயற்றப் பெற்றதாகும். இந்நூலில்
    45வது பாடலில் இந்நூல் ஆசிரியர் பெயர் உய்யவந்த தேவர் என்று
    குறிக்கப்பெறுவதால் இந்நூலை இவர்தான் இயற்றினார் என்பது
    தெளிவாகப் புலனாகின்றது.

        பாடல்தோறும் இரண்டாவது வரியிலும் மூன்றாவது வரியிலும்
    உந்தீபற என்ற சொல் இடம் பெறுவதால் திருவுந்தியார் என்று
    இந்நூலிற்குப் பெயர் வந்தது. உந்தீபற என்ற சொல் பெண்கள்
    விளையாடும் ஒருவகை விளையாட்டைக் குறிப்பதாகும். உந்துதல்
    என்பது தள்ளுதல் என்று பொருள்படும். இரு கால்களையும்
    பூமியில் உதைத்துக் கொண்டு உந்தி எழுந்து ஆடும் விளையாட்டு
    என்பதால் உந்தி விளையாட்டு எனப்பெற்றது.     இந்த
    விளையாட்டின் அடிப்படையில் இப்பாடல்களைப் பாடுவது இலக்கிய
    மரபாகத் தெரிகிறது. திருவாசகத்தில் திருவுந்தியார் என்ற பதிகம்
    இருத்தலை அறியலாம்.

        முதல் 6 பாடல்களில் உயிர்களால் அறிவதற்கு அரிதான
    இறைவன் ஞானாசிரியனாகக் காட்சி தந்து நூலாசிரியர்க்கு அருளிச்
    செய்தமை கூறப்படுகின்றது. 7 முதல் 18 பாடல்கள் வரை இறைவனை
    வழிபடுவதற்குரிய சாதனங்கள் கூறப்பெறுகின்றன. 19 முதல் 22 வரை
    உள்ள பாடல்கள் இறைவனின் இன்ப அருள்நிலையை விளக்கி
    அதனைப் பெறுவதற்குரிய வழிமுறைகளையும் உணர்த்துகின்றன. 23
    முதல் 28 வரை உள்ள பாடல்கள் சிவப்பேறு அடையும் தன்மையை
    விளக்குகின்றன. 29 முதல் 39 வரை உள்ள பாடல்கள் இறைவனால்
    அருள்பெற்ற அணைந்தோர் தன்மை பற்றிக் கூறுகின்றன. அதன்பின்
    7 பாடல்கள் பிறப்பின் காரணத்தையும் அதைத் தீர்க்கும் முறையையும்
    கூறுகின்றன. 44ஆம் பாடல் நூலாசிரியரின் ஞானாசிரியரை
    வாழ்த்துகிறது. 45ஆம் பாடல் நூற்பயனைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

    5.2.2 திருக்களிற்றுப்படியார்

        இந்நூலை இயற்றியவர் திருக்கடவூர் உய்யவந்த தேவர்
    ஆவார். இந்த நூலைத் தில்லையில் நடராசருக்கு முன்பு உள்ள
    திருக்களிற்றுப்படியில் (இருகல் யானைகள் தாங்குவது போல
    அமைக்கப்பட்ட படிகள்) வைத்து நடராசரை ஆசிரியர்
    வணங்கினார். படியில் இருந்த கல்வடிவான யானையானது உயிர்
    பெற்று இந்நூலை எடுத்து நடராசரின் திருவடியில் வைத்தது.
    எனவேதான் இந்நூலுக்குத் திருக்களிற்றுப்படியார் என்ற பெயர்
    வந்தது. இந்நூல் 100 வெண்பாக்களைக் கொண்டது. திருவுந்தியாரின்
    பொருளை வகுத்து விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூல்
    இல்லையென்றால் திருவுந்தியாரின் பொருளை எளிதாக அறிய
    முடியாது. எனவே திருவுந்தியாரின் வழிநூல் என்று இதனைக்
    குறிக்கலாம்.

        இந்நூலில் திருவுருவ வழிபாட்டின் இன்றியமையாமை
    கூறப்பெறுகிறது. ஞானாசிரியர் தேவை என்பது கூறப்பட்டுள்ளது.
    உயிர்களின் இயல்புகள், அவற்றின் மெல்வினை, வல்வினை
    ஆகியவற்றின் இயல்புகள் கூறப் பெற்றுள்ளன. மெல்வினை,
    வல்வினை விளக்கத்திற்குப் பெரியபுராண அடியார்களின் வரலாறுகள்
    எடுத்துக்காட்டாகக் காட்டப் பெற்றுள்ளன. திருக்குறளை எடுத்துக்
    காட்டி இறைவனின் பெருமைகள், உயிர், பாசம் (ஆணவமலம்)
    ஆகியவற்றின்     தத்துவங்கள்     விளக்கப் பெற்றுள்ளன.
    அருளாசிரியர்களாகிய திருஞானசம்பந்தர் உள்ளிட்ட நால்வரின்
    சிறப்புக்களும் அவர்கள் அருளிய அருட்செயல்களும் எடுத்துக்
    காட்டப் பெற்றுள்ளன. இத்தகு முறையில் தத்துவ விளக்கங்களும்
    இறைவனின் பெருமைகளும், சிவனடியார்களின் பெருமைகளும்
    இந்நூலில் கூறப்பெற்றுள்ளன எனலாம்.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    சைவ சித்தாந்த சாத்திரங்களில் மூன்றின் பெயர்களைக்
    குறிப்பிடுக.
    2.
    திருவுந்தியார் நூலின் பெயர்க்காரணத்தை இரண்டு
    தொடர்களால் கூறுக.
    3.
    திருவுந்தியார் எத்தனை பாடல்களைக் கொண்டது?
    அதன் ஆசிரியர் யார்?
    4.
    திருக்களிற்றுப்படியாரின் நூற்பெயர்க் காரணத்தைக்
    குறிப்பிடுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:25:58(இந்திய நேரம்)