தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.4- சங்க காலப் புலவர்கள்

  • 2.4 சங்க காலப் புலவர்கள்


        சங்க காலப் புலவர்களுள் ஒருவர் நிகண்டன்
    கலைக்கோட்டுத் தண்டனார்.
    இவர் நற்றிணையில் 382 ஆம்
    செய்யுளை இயற்றி உள்ளார். இவரது இயற்பெயர் தெரியவில்லை.
    இவர் நிகண்டு நூல் ஒன்றை எழுதினார் என்றும் மானின்
    கொம்பை நிமிர்த்திக் கைக்கோலாகக் (ஊன்றுகோல்) கொண்டார்
    என்றும் கூறுவர். இக்காரணங்களினால் இப்புலவர் நிகண்டன்
    கலைக்கோட்டுத் தண்டனார் என்று அழைக்கப்பட்டார் என்று
    பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் குறிப்பிடுகிறார்.

        ஆனால், மயிலை. சீனி.வேங்கடசாமி என்ற அறிஞர்
    இக்கருத்தைப் பின்வருமாறு மறுத்துரைக்கிறார். நிகண்டு நூல்
    எழுதியமையால்     இப்புலவர்     நிகண்டனார்     என்று
    அழைக்கப்படவில்லை. நிகண்டன் என்றால் சமண சமயத்தவர்
    என்பது பொருள். அதுபோல் இப்புலவருக்குக் கலைக்கோட்டுத்
    தண்டம் என்ற பெயரும் மான் கொம்பை நிமிர்த்திக்
    கைக்கோலாகக் கொண்டமையால் ஏற்பட்ட பெயர் அன்று.
    கலைக்கோட்டுத் தண்டம் என்பது ஓர் ஊரின் பெயர். எனவே,
    இவ் அறிஞர் கருத்தின்படி இப்புலவர் கலைக்கோட்டுத் தண்டம்
    என்ற ஊரைச் சார்ந்த சமண சமய நிகண்டவாதி என்பது
    புலனாகிறது.

    2.4.1 உலோச்சனார்

        உலோச்சனார் என்பவரும் சங்க காலப் புலவர் ஆவார்.
    சங்க நூல்களில் இவர் பாடிய பாடல்கள் 35 இடம் பெற்றுள்ளன.
    அவை நற்றிணையில் 20 பாடல்கள், குறுந்தொகையில் 4
    பாடல்கள், அகநானூற்றில் 8 பாடல்கள், புறநானூற்றில் 3
    பாடல்கள்.

        சமணர்கள் துறவு மேற்கொள்வதற்கு முன் தீட்சை
    பெறுவது வழக்கம். அப்பொழுது உண்ணா நோன்பிருந்து
    தலைமுடியைக் கையினால் பிடுங்கி நீக்குவர். இச்சடங்கை,
    லோச்சு என்று சமணர்கள் குறிப்பிடுவர். இப்பெயர் உலோச்சு
    என்று தமிழில் வழங்கியது. இச்சடங்கை இப்புலவர்
    மேற்கொண்டார். எனவே, இவர் உலோச்சன் என்று
    அழைக்கப்பட்டார். மரியாதைப் பன்மை விகுதியான ‘ஆர்’
    சேர்த்து உலோச்சனார் என்று இப்புலவர் அழைக்கப்பட்டார்.
    எனவே, இவரும் சமண சமயத்தவர் என்று துணியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:36:50(இந்திய நேரம்)