தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Diploma Course - P20314- கணினி வகைகள்

  • 4.3 கணினி வகைகள்

    நுண்செயலியில் இயங்கும் எந்தவொரு மின்னணு சாதனத்தையும் ‘கணினி’ எனக் கூறுவது வழக்கம். உள்ளங்கைக்குள் அடங்கும் மிகச் சிறிய கணினியும் உள்ளது. ஒரு அறை முழுக்க அடைத்துக் கொள்ளும் மிகப்பெரிய கணினியும் உள்ளது. உருவ அளவு, செயல்திறன், செயல்வேகம், பயன்பாடு இவற்றின் அடிப்படையில் கணினிகளை வகைப்படுத்தி உள்ளனர்.

    4.3.1 பெருமுகக் கணினிகள் (Mainframes)

    பெருமுகக் கணினியை ஒரு கணினி எனக் கூறுவதைவிட ஒரு ‘கணினி முறைமை’ (Computer System) எனக் கூறுவதே பொருந்தும். ஒரு மையக் கணினி அமைப்புடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேய்மை முனையங்கள் (Remote Terminals) இணைக்கப் பட்டிருக்கும். அனைத்து முனையங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் தரவுகளை உள்ளீடு செய்ய முடியும். வேண்டிய தகவலை வெளியீடாகப் பெற முடியும்.

    பெருமுகக் கணினியின் பல்வேறு பாகங்களை நிறுவிட ஒரு பெரிய அறை தேவை. மிகப் பெருமளவு தகவலைச் சேமித்து வைக்க முடியும். அதிவேகத் தரவுச் செயலாக்கத் (Data processing) திறன் கொண்டது. ஒரு வினாடியில் பல இலட்சம் ஆணைகளை நிறைவேற்றும் ஆற்றல் உடையது.

    கணினியின் வளர்ச்சிக் கட்டத்தில், பெருமுகக் கணினிகள் மிகப் பழமையானவை. தொடக்க காலங்களில், அறிவியல் ஆய்வுக் கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும், அரசுத் துறைகளிலும் ஒரு சில தொழில் நிறுவனங்களிலுமே கணினிகள் பயன்படுத்தப்பட்டன. அவை அனைத்தும் பெருமுகக் கணினிகளே. கணினியின் வளர்ச்சி பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்த போதிலும், பெருமுகக் கணினிகள் இன்னும் பயன் பாட்டில் உள்ளன. செல்வாக்குக் குறைந்துவிட்டது என்றாலும் சிறப்பு குன்றவில்லை. விமானம், ரயில்வே முன்பதிவுப் பணிகள் உட்படப் பல்வேறு அறிவியல், வணிகப் பயன்பாடுகளுக்குப் பெருமுகக் கணினிகள் இன்றைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஐபிஎம் நிறுவனத்தின் பெருமுகக் கணினிகள் பெருமளவு பயன்பாட்டில் உள்ளன.

    4.3.2 குறுமுகக் கணினிகள் (Mini Computers)

    நடுத்தர நிறுவனங்களின் தேவைகளுக்கு பெருமுகக் கணினிகள் தேவையில்லை. மேலும் அந்த அளவுக்கு முதல¦டு செய்வது நடுத்தர நிறுவனங்களால் இயலாது. எனவே அவற்றின் தேவையைக் கருத்தில் கொண்டு குறுமுகக் கணினிகள் உருவாக்கப்பட்டன. செயல்பாட்டு முறையிலும் பயன்பாட்டு முறையிலும் பெருமுகக் கணினியை ஒத்தது. ஆனால் அளவிலும், திறனிலும் சற்றே குறைந்தவை. நூற்றுக்கு மேற்பட்ட முனையங்களைக் கொண்டது. தொடக்க காலங்களில் தொழிலகங்களில் செயலாக்கக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கென குறுமுகக் கணினிகள் பயன்படுத்தப்பட்டன. இன்றைக்குப் பெருமுகக் கணினிகளைப் போன்றே அனைத்து வகைத் தரவுச் செயலாக்கம் மற்றும் பிற கணிப்பணிச் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஐபிஎம் ஏஎஸ்/400 கணினிகள் இவ்வகையைச் சேர்ந்தவை.

    4.3.3 நுண்கணினிகள் (Micro Computers)

    1917-ஆம் ஆண்டில் இன்டெல் நிறுவனம் உலகின் முதல் நுண் செயலியை உருவாக்கியது எனப் பார்த்தோம். 1972-இல் 8008 நுண் செயலியையும், 1974-இல் 8080 நுண் செயலியையும், 1978-இல் 8086 நுண்செயலியையும் இன்டெல் வெளியிட்டது. மிகச் சிறிய நுண்செயலியில் அதிகத் திறன்வாய்ந்த மின்னணு உறுப்புகளைப் பொருத்த முடிந்தது. ஒரு சிறிய சிலிக்கான் சில்லுவில் கணினியின் முக்கிய மின்னணு உறுப்புகள் அனைத்தும் அடங்கியிருந்தன. இதனால், கணினியின் உருவ அளவும் விலையும் பெருமளவு குறைந்தன. குறுமுகக் கணினிகளைவிட மிகச் சிறியதாய் இருந்தால் ‘நுண்கணினி’ எனப் பெயர் பெற்றது.

    சொந்தக் கணினி

    பெருமுக, குறுமுகக் கணினிகளைப் பெரும் தொழில் நிறுவனங்களும் அரசுத்துறையினருமே வாங்கிப் பயன்படுத்த முடியும். ஆனால் நுண்கணினியை ஒரு தனிநபர் வாங்கிப் பயன்படுத்தலாம். எனவே இவை சொந்தக் கணினிகள் (Personal Computers) என்று அழைக்கப்பட்டன. சுருக்கமாக பீசி (PC) எனப்படுகிறது.

    1978-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதல் பீசியை வெளியிட்டது. வணிக ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. 1979-இல் இன்டெல் 8088 நுண்செயலி பொருத்தப்பட்ட ஐபிஎம் பீசி உருவானது. அவை, 1981-ஆம் ஆண்டில் டாஸ் (Dos) இயக்க முறைமையுடன் பெருமளவில் விற்பனைக்கு வந்தன.

    திருப்பு மையம்

    ஐபிஎம் பீசிகள் கணினி வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தின எனக் கூறவேண்டும். ஐபிஎம்முடன் கூட்டு வைத்திருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மென்பொருள்களும் பீசியின் பரவலுக்கு அடிகோலின.

    4.3.4 மீத்திறன் கணினிகள் (Super Computers)

    நுண்கணினியில் ஒரேயொரு நுண்செயலியே பொருத்தப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான நுண்செயலிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் கணினி அமைப்பே ‘மீத்திறன் கணினி’ என்றழைக்கப்படுகின்றது. உலகிலேயே அதிவேகமாகச் செயல்பட வல்லவை. ஒரு வினாடியில் நூறுகோடி ஆணைகளை நிறைவேற்றும். ஒரு வினாடியில் ஒரு லட்சம் கோடி ஆணைகளை நிறைவேற்றும் மீத்திறன் கணினிகள் பயன்பாட்டில் உள்ளன. ஒரே நேரத்தில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட முனையங்களை இணைத்துச் செயல்பட முடியும். ஒரு பணியை விரைந்து முடிக்க ஒரே நேரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நுண்செயலிகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இத்தகு செயல்முறையை இணைநிலைச் செயலாக்கம் (Parallel Processing) எனப்படுகிறது. இதுவே மீத்திறன் கணினியை பிற கணினிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது.

    நாட்டின் பாதுகாப்பு, விமான வடிவமைப்பு, வானிலை ஆய்வு, விண்வெளிப் பயணம், செயற்கைக் கோள் கட்டுப்பாடு, ஏவுகணை வடிவமைப்பு, வரைகலை அடிப்படையிலான திரைப்படத் தயாரிப்பு போன்ற பணிகளுக்கு மீத்திறன் கணினிகள் பயன் படுத்தப்படுகின்றன. செயற்கைக் கோள்களிலிருந்து அனுப்பப்படும் ஏராளமான தகவல்களைப் படுத்தாய்ந்து, வானிலையைத் துல்லியமாகக் கணிக்கப் பயன்படுகிறது. ஒரு விமானம் பறக்கும் போது அதனைக் சுற்றிப் பாயும் காற்றின் தன்மையைப் வடிவமைக்க உதவுகின்றது. உலகின் முதல் மீத்திறன் கணினிகளை ‘கிரே’ நிறுவனம் உருவாக்கியது. இந்தியா, தன் சொந்த முயற்சியில் பரம் 9000, பரம் 10000 போன்ற மீத்திறன் கணினிகளை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    4.3.5 சொந்தக் கணினி வகைகள்

    ஒரு தனிநபர் தனது சொந்தப் பயன்பாட்டுக்காக வாங்கிப் பயன்படுத்தக் கூடிய கணினி, ‘சொந்தக் கணினி’ (Personal Computer) அல்லது ‘பீசி’ (PC) என அழைக்கப்படுகிறது. நுண்கணினி வகையைச் சேர்ந்த பீசி, இன்றைக்குப் பல்வேறு பரிமானங்களை எடுத்துள்ளது. உள்ளங்கையில் வைத்துப் பயன்படுத்தக் கூறிய மிகச் சிறிய கணினிகளும் பயன்பாட்டில் உள்ளன. தனிநபர் பயன்படுத்தும் சிறிய கணினிகளின் பல்வேறு வகைகளைக் காண்போம்.

    மேசைக் கணினி (Desktop)

    மேசை மீது வைத்துப் பணிபுரியக் கூடியது. செல்லுமிடங்களுக் கெல்லாம் கையில் எடுத்துச் செல்ல முடியாது. தொலைக்காட்சி பெட்டி போன்ற நிரையகம், ஒரு சிறிய பெட்டி, விசைப்பலகை மற்றும் சுட்டியைக் கொண்டது. வீட்டில், அலுவலகத்தில், வணிக நிறுவனங்களில், வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிரந்தரமாக வைத்துச் செயல்படுவதற்கு ஏற்றது. கையில் எடுத்துச் செல்லும் கணினிகளைவிட விலை குறைவானது. ஆனால் அவற்றைவிடச் செயல்திறனும், செயல்வேகமும், சேமிப்பிடமும் அதிகம் கொண்டது.

    கையேட்டுக் கணினி (Notebook)

    சிறிய கைப்பெட்டி அளவுடையது. கைப்பெட்டி அல்லது பேரேட்டைப் போன்று திறந்து மூடக் கூடியது. திரையகம், விசைப்பலகை, சுட்டி மற்றும் கணினிப் பாகங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டது. தோள் பையிலிட்டுச் செல்லுமிடங்களுக்கு எடுத்துச் செல்லலாம். நிரந்தர மின் இணைப்பு தேவை இல்லை. இக்கணினி செயல்படுவதற்குரிய மின்சாரத்தை வழங்கும் மின்கலம் உள்ளிணைக்கப்பட்டுள்ளது.

    மடிக் கணினி (Laptop)

    கையேட்டுக் கணினியைவிடச் சற்றே சிறியது. மற்ற அனைத்திலும் கையேட்டுக் கணினியை ஒத்தது. நாற்காலியில், பேருந்தில், சிற்றுந்தில், ரயிலில், விமானத்தில் அமர்ந்து கொண்டிருக்கும்போது மடியில் வைத்துக்கொண்டு பணியாற்ற முடியும். வடிவம் சிறிதாயினும், மேசைக் கணினியில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதிலும் உள்ளன.

    வரைபட்டிகைக் கணினி (Tablet PC)

    இதுவும் மடிக் கணினியில் ஒரு வகைதான். ஆனாலும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. இக்கணினியின் திரையகத்தில் பேனா போன்ற கருவியைக் கொண்டு கட்டளைகளைக் கையால் எழுதலாம். கணினி புரிந்து கொள்ளும். கையால் எழுதப்படும் விவரங்களைக் கணினி - ஆவணமாக மாற்றிக் கொள்ளும் கையெழுத்தினால் இயக்க முடிகிற இந்த வசதி ஒன்றே வரைபட்டிகையை மடிக்கணினியிலிருந்து பிரித்துக் காட்டுகிறது.

    உள்ளங்கைக் கணினி (Palmtop)

    கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் கணிப்பியை (Calculator) போன்றது. உள்ளீடு செய்யப் பெரும்பாலும் விசைப்பலகை இருக்காது. பேனா வடிவிலான கருவி மூலம் திரையில் தொட்டு நிரல்களை இயக்க முடியும். ஒரு புதினப் புத்தகத்தை விடச் சிறியது. எடை குறைவானது. சிறிய மின்கலத்தில் சக்தியில் செயல்படுகிறது. இவற்றை ‘சொந்தப் துடியத் துணைவர்’ (Personal Digital Assistant - PDA) என்றும் அழைப்பர். உள்ளங்கைக் கணினிகளில் சற்றே பெரியது. ‘கையகக் கணினி’ (Handheld Computer) என்று அழைக்கப்படுகிறது.

    இன்றைக்குச் செல்பேசிகளில் (Call Phones) கணினி உட்பொதிக்கப் பட்டுள்ளது. மின்னஞ்சல் போன்ற மிகப் பொதுவான கணினிப் பயன்பாடுகளை செல்பேசிகளில் பயன்படுத்த முடியும். கைக்காரம்போல மணிக் கட்டில் அணிந்து கொள்ளும் கணினிகளையும் உருவாக்கிக் காட்டியுள்ளது இன்றைய நவீனத் தகவல் தொழில் நுட்பத்தின் சாதனையாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:48:07(இந்திய நேரம்)