Primary tabs
6.0 பாட முன்னுரை
கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியில் உச்ச கட்டமாய் இன்றைக்கு ‘இணையம்’ உருவாகியுள்ளது. இணையம் சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சாதாரணக் கடிதப் போக்குவரத்து, புத்தகம், பத்திரிகை வெளியீடு, நூலகப் பயன்பாடு, வணிக நடவடிக்கைகள், வங்கிப் பணப் பரிமாற்றங்கள், இரயில், விமானப் பயண முன்பதிவுகள், அரசு நிர்வாக நடைமுறைகள் - இவ்வாறாக மனித வாழ்வின் அன்றாடச் செயல்பாடுகள் அனைத்திலும் இன்றைக்கு மாற்றத்தைக் காண முடிகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவற்றை ஒழுங்குபடுத்த ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் வகுத்துள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள், வழிகாட்டல்கள் போதுமா? புதிய சட்டங்கள் தேவையா? என்பதே நம்முன் இருக்கும் கேள்வி.
இணையம்வழி மேற்கொள்ளப்படும் மின்வணிக நடவடிக்கைகளில் பல்வேறு சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதுபோலவே கணிப்பொறி மற்றும் இணையம் வழியிலான குற்றங்கள் பெருகிவிட்டன. கணிப்பொறி முறைமைகளில் அத்துமீறி நுழைந்து கேடு விளைவிக்கின்றனர். தீங்குநிரல்களைப் பரப்பி அதன்மூலம் உலகம் முழுவதிலுமுள்ள கணிப்பொறி முறைமைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர். கணிப்பொறி முறைமை களிலிருந்து முக்கிய தகவல்கள் களவாடப்பட்டு இழப்பு ஏற்படுத்தப்படுகிறது.
இத்தகைய நவீனக் குற்றங்களைத் தண்டிக்க, கட்டுப்படுத்தப் பல்வேறு நாடுகளில் சட்ட ரீதியாகப் பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க நாடு நிறைவேற்றிய கணிப்பொறி மோசடிச் சட்டம் மின்வெளிச் சட்டங்களுக்கான முன்னோடியாக விளங்குகிறது எனலாம். சட்ட முன்முயற்சியில் ஐநா மன்றத்தின் மின்வணிக நடைமுறைகள் தொடர்பான தீர்மானம் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. அதனடிப்படையில் மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல நாடுகள் மின்வணிகம், மின்னணு ஆவணங்கள், மின்னணுக் கையொப்பம், கணிப்பொறிக் குற்றங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றின. இந்தியா 2000-ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை நிறைவேற்றியது. அதில் மின்னணு ஆவணங்கள், கணிப்பொறி மூலமான குற்றங்கள் அவற்றுக்கான தண்டனைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
மின்வணிகத்திலுள்ள சட்டச் சிக்கல்கள், கணிப்பொறிக் குற்றங்கள் உட்பட மின்வெளிச் சட்டத்தின் தேவைக்கான சூழல், மின்வெளிச் சட்டத்தின் முன்னோடியான அமெரிக்கச் சட்டம், ஐநா மன்ற மின்வணிக முன்மாதிரிச் சட்டம், சில நாடுகளின் மின்வெளிச் சட்டங்கள், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவை பற்றி இப்பாடத்தில் விரிவாக ஆய்வோம்.