தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டம்

  • 6.4 இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டம்

        இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (Information Technology Act) 2000-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தியா சற்றுக் காலந்தாழ்ந்து இந்த முயற்சியை மேற்கொண்ட போதிலும், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மின்வெளிச் சட்டம் இயற்றியுள்ள மிகச்சில நாடுகளுள் இந்தியாவும் ஒன்று (12-வது நாடு) என்பது குறிப்பிடத் தக்கது. ஐநா மன்றத்தின் மின்வணிக மாதிரிச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என முகவுரையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மின்னணுப் பரிமாற்றச் சட்டமும் அவ்வாறே உருவாக்கப்பட்டதால் இரண்டு சட்டங்களுக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. மாற்றுமுறை ஆவணங்கள் (Negotiable Instruments), ஒப்பாணை (Power of Atterney), அறக்கட்டளை (Trust), உயில் (Will), அசையாச் சொத்துகளின் விற்பனை ஒப்பந்தம், அசையாச் சொத்துகள் அவற்றின் உரிமைகள் தொடர்பான ஆவணங்கள், மைய அரசு குறிப்பிடும் இதுபோன்ற ஆவணங்களுக்கு இச்சட்டத்தின் விதிமுறைகள் பொருந்தாது என முதல் பாகத்திலேயே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தியத் தொழில்நுட்பச் சட்டத்தின் பிற சிறப்புக்கூறுகளை இப்பாடப் பிரிவில் விரிவாகக் காண்போம்.

    6.4.1 மின்னணு ஆவணமும் துடிமக் கையொப்பமும்

        தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் இரண்டாம் பாகத்தில் மின்னணு ஆவணங்களும் துடிமக் கையொப்பமும் செல்லுபடியாகும் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. சிங்கப்பூர் சட்டத்தில் மின்னணுக் கையொப்பமும், துடிமக் கையொப்பமும் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளதுபோல் இல்லாமல், இந்தியச் சட்டத்தில் இரண்டும் ஒன்றாகவே விளக்கப்பட்டுள்ளது. ஓர் ஆவணம் எழுதப்பட்டு அல்லது தட்டச்சிடப்பட்டு அல்லது அச்சிடப்பட்டுத்தான் இருக்க வேண்டும் என்று ஏதேனுமொரு சட்டம் வலியுறுத்துகின்ற போதிலும் அந்த ஆவணம் மின்னணு வடிவில் உருவாக்கப்பட்டுப் பின்னாளில் பயன்படுத்திக் கொள்ள இயலும் வகையில் வைக்கப்பட்டுள்ளது எனில் அந்த ஆவணம் அச்சட்டத்தின்படி செல்லுபடியாகத் தக்கவதாகவே கொள்ளப்படும். அதாவது எழுத்து வடிவ ஆவணங்களைப் போலவே மின்னணு ஆவணங்களும் சட்டப்படியானதாகவே கருதப்படும்.

        ஒரு தகவல் அல்லது ஏதேனும் விவரம் கையொப்பம் இட்டுச் சான்றளிக்கப்பட வேண்டும் அல்லது ஓர் ஆவணத்தில் ஒரு நபரின் கையொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும் என ஏதேனும் ஒரு சட்டத்தில் வரையறுத்துள்ள போதிலும், மைய அரசு குறித்துக் காட்டியுள்ள முறையில் அத்தகவலோ, விவரமோ துடிமக் கையொப்பம் மூலம் சான்றளிப்புச் செய்யப்பட்டிருப்பின், அச்சட்டத்தில் என்ன கூறியிருப்பினும், அச்சட்டத்தின்படி உள்ளதாகவே கொள்ளப்படும். அதாவது, எழுத்து வடிவிலான கையொப்பம் போலவே துடிமக் கையொப்பமும் சட்டப்படியானதாகவே கருதப்படும்.

        அரசு ஆவணங்கள் துடிமக் கையொப்பமிட்ட ஆவணங்களாகவோ, மின்னணு ஆவணங்களாகவோ இருக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகத்தில் பதிவுசெய்து வைக்கப்படுகின்ற எந்தவொரு படிவமும், விண்ணப்பமும் அல்லது ஆவணமும் மின்னணு வடிவில் இருக்கலாம். அரசு வழங்குகின்ற உரிமம், அனுமதி, அங்கீகாரம், ஒப்புதல் அல்லது வேறெந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அது மின்னணு வடிவில் இருக்கலாம். பெறுகை (Receipt), செலுத்துகை (Payment), இரண்டுக்குமான ஒப்புகைக்கும் இது பொருந்தும். மேற்கண்ட ஆவணங்களை உருவாக்குதல், இருத்திவைத்தல், பாதுகாத்தல் அனைத்தையும் அரசு வரையறுத்துள்ள மின்னணு வடிவிலேயே செய்யலாம். மின்னணு ஆவணங்களை எந்த முறையில், எந்த வடிவில் உருவாக்க, கோப்பிட, இருத்திவைக்க, வினியோகிக்க வேண்டும் என்பதையும், செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை மின்னணு வடிவில் எவ்வாறு செலுத்த வேண்டும் என்கிற வழிமுறைகளையும் அரசு வரையறை செய்யும்.

        அரசு அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட ஆவணம் அல்லது தகவல் குறிப்பிட்ட காலம்வரை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சட்டவிதி இருக்குமெனில் இத்தகைய ஆவணம் அல்லது தகவல், மின்னணு வடிவில் சேமித்து வைக்கப்பட்டாலும் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் கீழ்க்காணும் நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்:

    • ஆவணத்திலுள்ள தகவல் அணுக முடிவதாய், பின்னாளில் படித்தறிய முடிவதாய் இருக்க வேண்டும்.
    • மின்னணு ஆவணம் மூலத்தில் உருவாக்கப்பட்டு அனுப்பிய அல்லது பெறப்பட்ட அதே வடிவில் இருத்தி வைக்கப்படிருக்க வேண்டும். அல்லது அத்தகவலை உள்ளது உள்ளபடித் திரும்பப் பெறுகின்ற வடிவில் இருத்திவைக்க வேண்டும்.
    • மின்னணு ஆவணத்தில் அந்த ஆவணம் உருவான இடம், சென்று சேர்ந்த இடம், அனுப்பிய நாள், பெற்ற நாள் மற்றும் நேரத்தை அறிந்து கொள்ள வசதி இருக்க வேண்டும்.

        மேற்கண்ட சட்டவிதிகளைக் காட்டி ஓர் ஆவணத்தை மின்னணு வடிவில்தான் உருவாக்க, ஏற்க, வெளியிட, இருத்திவைக்க, பாதுகாக்க வேண்டும் என்று எந்தவொரு நபரும், மைய அரசின் எந்தவோர் அமைச்சகத்தையோ, துறையையோ, மாநில அரசையோ அல்லது அரசு நிறுவனங்களையோ கட்டாயப்படுத்த முடியாது.

        முறையாக அதிகாரப்பூர்வ அரசிதழில் (Official Gezette) வெளியிடப்பட வேண்டிய அரசாங்கத்தின் எந்தவொரு சட்டதிட்ட ஆணை, அறிவிப்பு அல்லது அதுபோன்ற எந்தத் தகவலும் மின்னணு வடிவிலும் வெளியிடப்படலாம். அரசிதழ், அச்சிலும் மின்னணு வடிவிலும் வெளியிடப்படுமாயினும் இரண்டில் முதலில் எது வெளியானதோ அது வெளியான நாளே அரசிதழில் அத்தகவல் வெளியிடப்பட்ட நாளாகக் கருதப்படும்.

    6.4.2 துடிமக் கையொப்பச் சான்றிதழ்

        துடிமக் கையொப்பம் என்பது தனித்திறவி, பொதுத்திறவி அடிப்படையில் உருவாக்கப்படும் மறைக்குறியீட்டு முறைமை ஆகும். இத்திறவிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கென அரசிடம் உரிமம் பெற்ற தனி நிறுவனங்கள் இருக்கும். துடிமக் கையொப்பம் தேவைப்படும் ஒருவர் உரிமம் பெற்ற நிறுவனத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அக்கட்டணம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாமல் இருக்கும். கட்டணத் தொகை அவ்வப்போது அரசினால் நிர்ணயிக்கப்படும். தேவையான விசாரணைகள் மேற்கொண்டபின் சட்ட விதிகளின்படி வாடிக்கை யாளருக்குத் தகுதி இருப்பின் அவருக்குத் துடிமக் கையொப்பச் சான்றிதழ் (Digital Signature Certificate) வழங்கப்படும். அல்லது போதிய காரணங்கள் கூறி சான்றிதழ் தர மறுக்கலாம். துடிமக் கையொப்பச் சான்றிதழில் தனித்திறவி, பொதுத்திறவி பற்றிய விவரங்கள் இருக்கும்.

        வாடிக்கையாளரின் விண்ணப்பத்தின் பேரிலோ அல்லது பொதுநலன் கருதியோ துடிமக் கையொப்பச் சான்றிதழின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். 15 நாட்களுக்கு மேல் நிறுத்தி வைக்க வேண்டுமெனில் அவருடைய கருத்தினைக் கேட்டு அறிய வேண்டும். கீழ்க்காணும் காரணங்களுக்காக ஒருவருக்கு வழங்கப்பட்ட துடிமக் கையொப்பச் சான்றிதழ் நிரந்தரமாகத் திரும்பப் பெறப்படலாம்:

    (1) வாடிக்கையாளரின் விண்ணப்பத்தின் பேரில்

    (2) வாடிக்கையாளர் திவாலானால் அல்லது இறந்து போனால்

    (3) சான்றிதழ் பெற்றது ஒரு குழுமம் எனில் அக்குழுமம் கலைக்கப்பட்டால்

    (4) சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களில் பிழை இருப்பின்

    (5) சான்றிதழ் வழங்கத் திருப்திகரமான காரணங்கள் இல்லையெனில்

    (6) தனித்திறவி, பொதுத்திறவிகளின் இரகசியத் தன்மைக்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டுவிட்டது எனில்,

        5-வது, 6-வது காரணத்துக்காகத் திரும்பப் பெறப்பட்டால், உரியவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

        சான்றிதழ் வழங்க உரிமம் பெற்ற நிறுவனங்கள் உரிமத்தைத் தங்கள் அலுவலகத்தில் அனைவரின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். துடிமக் கையொப்பங்களின் இகசியத் தன்மை கெடாதவாறு நிறுவனத்தின் வன்பொருள், மென்பொருள் மற்றும் செயல்முறைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். எவரும் தீங்கெண்ணத்துடன் அத்துமீறித் தலையிடவோ, பாது காப்பான விவரங்களைத் தவறான முறையில் பயன்படுத்தவோ அனுமதிக்கக் கூடாது. உரிமம் முடக்கப்பட்ட, இரத்து செய்யப்பட்ட நிறுவனம் உடனடியாக உரிமத்தைக் கட்டுப்பாட்டு ஆணையரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

    6.4.3 குற்றங்களும் தண்டனைகளும்

        இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் பல்வேறு வகையான கணிப்பொறிக் குற்றங்களும் அவற்றுக்கான தண்டனைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கே சுருக்கமாகக் காண்போம்:

    (1) கணிப்பொறியில் சட்டப்படி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மூல ஆவணத்தை (source document) தெரிந்தே அல்லது வேண்டுமென்றே மறைப்பது, அழிப்பது, திருத்துவது குற்றமாகும். பிறர் மேற்கண்ட குற்றத்தை இழைக்கக் காரணமாக இருப்பதும் குற்றம் ஆகும். இக்குற்றத்துக்கு இரண்டு இலட்சம் ரூபாய்வரை தண்டம் (Fine) அல்லது மூன்று ஆண்டுவரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்

    (2) ஒரு கணிப்பொறி, கணிப்பொறி அமைப்பு அல்லது கணிப்பொறிப் பிணையத்தில் அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்து, தகவலைச் சிதைத்து, அழித்து அல்லது திருத்தி, இழப்பு அல்லது ஊறு விளைவிக்கும் ’தாக்குதல்’ (Hacking) என்னும் குற்றத்துக்கு 2 இலட்சம்வரை தண்டம் அல்லது 3 ஆண்டுவரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

    (3) பார்க்க, படிக்க, கேட்க ஆபாசமாக இருக்கும் தகவல்களை மின்னணு ஊடகத்தில் வெளியிடுவதும், வெளியிடக் காரணமாக இருப்பதும் குற்றமாகும். முதல்முறை ஒரு இலட்சம் ரூபாய்வரை தண்டம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் இழைத்தால் தண்டம் 2 இலட்சம்வரை இருக்கும். சிறைத்தண்டனை 10 ஆண்டுகள் வரை இருக்கும்.

    (4) கட்டுப்பாட்டு ஆணையரிடம் உரிமம் வேண்டி விண்ணப்பிக்கும்போதோ துடிமக் கையொப்பச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும்போதோ தவறான தகவல் தருவதும், தகவலை மறைப்பதும் குற்றமாகும். இக்குற்றத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை தண்டம் அல்லது 2 ஆண்டுகள்வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

    (5) இரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களைப் பிறரறிய வெளிப்படுத்துவது குற்றமாகும். இக்குற்றத்துக்கு ஒரு இலட்சம் ரூபாய்வரை தண்டம் அல்லது 3 ஆண்டுவரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

    (6) துடிமக் கையொப்பம் வழங்கும் நிறுவனம் வழங்காத, வாடிக்கையாளர் ஏற்றுக் கொள்ளாத, முடக்கி வைக்கப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட சான்றிதழைத் தெரிந்தே வெளியிடுவது அல்லது பிறர் அறியச் செய்வது குற்றமாகும். இக்குற்றத்துக்கு ஒரு இலட்சம் ரூபாய்வரை தண்டம் அல்லது 2 ஆண்டுவரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

    (7) சட்டத்துக்குப் புறம்பாக அல்லது மோசடி நோக்கத்துடன், தெரிந்தே துடிமக் கையொப்பச் சான்றிதழ்களை உருவாக்குவது மற்றும் வெளியிடுவது, கிடைக்கச் செய்வது குற்றம். இக்குற்றத்துக்கு ஒரு இலட்சம் ரூபாய்வரை தண்டம் அல்லது 2 ஆண்டுவரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

    (8) இதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை எந்த நாட்டவர் செய்தாலும் தண்டனைக்கு உரியவரே. குற்றம் வேற்று நாட்டில் இழைக்கப்பட்டாலும் அதனால் இந்தியாவிலுள்ள கணிப்பொறி, கணிப்பொறி முறைமை அல்லது கணிப்பொறிப் பிணையம் பாதிக்கப்படுமாயின் அதற்கும் தண்டனை உண்டு.

    (9) மைய, மாநில அரசுகள் ஒரு குறிப்பிட்ட கணிப்பொறியை, கணிப்பொறி முறைமையை அல்லது கணிப்பொறிப் பிணையத்தைப் பாதுகாப்பானது என அரசிதழில் அறிவிக்கலாம். இன்னார்தாம் அவற்றை அணுகலாம் என எழுத்து மூலம் அனுமதி அளிக்கலாம். இவ்வாறு பாதுகாக்கப்பட்ட கணிப்பொறி அமைப்பில் அத்துமீறி நுழைபவர்களுக்கு 10 ஆண்டுவரை சிறைத்தண்டனை வழங்கப்படும். தண்டமும் விதிக்கப்படும்.

    6.4.4 சட்டத் திருத்தங்கள்

        தகவல் தொழில்நுட்பச் சட்டம் நிறைவேற்றப்பட்டபின் அதன் அடிப்படையில் இந்தியாவில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் சில சட்டங்களில் சில சட்டப் பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றுள் சில:

    (1) இந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal Code):

    இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 29, 167, 172, 173, 175, 192, 204, 463, 464, 466, 468-471, 474, 476, 477ஏ ஆகியவற்றில் ‘ஆவணம்’ என்னும் சொல்லுக்குப் பதிலாக ‘ஆவணம் அல்லது மின்னணு ஆவணம்’ என்னும் சொற்கள் சேர்க்கப்படுகின்றன.

    (2) இந்தியத் தடயச் சட்டம் (Indian Evidence Act):

    பிரிவு 3-இல் ‘அனைத்து ஆவணங்களும்’ என்பதற்கு முன்பாக, ‘மின்னணு ஆவணங்கள் உட்பட’ என்னும் சொல்தொடர் சேர்க்கப்படுகிறது. பிரிவு 22-க்குப் பிறகு 22-ஏ சேர்க்கப்படுகிறது. பிரிவு 34-இல் ‘மின்னணு வடிவில்’ என்றும், 35-இல் ‘மின்னணு ஆவணம்’ என்றும் சேர்க்கப்படுகிறது. 47-க்குப் பிறகு பிரிவு 47-ஏ சேர்க்கப்படுகிறது. இதுபோலப் பல்வேறு பிரிவுகளில் மின்னணு ஆவணங்களையும் தடயமாக ஏற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    (3) வங்கியாளர் புத்தகத் தடயச் சட்டம் (Bankers Book Evidence Act):

    பிரிவு 2-க்குப் பிறகு பிரிவு 2-ஏ புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

    (4) இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் (Indian Reserve Bank Act):

    பிரிவு 58-இல் உட்பிரிவு (2) பகுதி (p)-க்கு அடுத்தபடியாக (pp) என்னும் புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மின்னணுப் பணப் பரிமாற்ற முறைகளை இப்புதிய விதி வரையறுக்கிறது.

        தகவல் தொழில்நுட்பப் புரட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே முற்ற முடிந்த சட்டங்கள் என எதுவும் இருக்க முடியாது. இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டமும் அப்படியே. இதிலும் அவ்வப்போது திருத்தங்கள் செய்ய நேர்ந்துள்ளது. 2008-ஆண்டில் இந்தியத் தகவல் தொழில்நுட்பத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எத்தனையோ நாடுகளில் இன்னும் மின்வெளிச் சட்டங்கள் இயற்றப்படவே இல்லை எனும்போது இந்தியச் சட்டம் ஒரு முன்னோடி என்பதில் ஐயமில்லை.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.

    அமெரிக்கக் கணிப்பொறி மோசடிச் சட்டத்தின் கூறுகளை விளக்குக.

    2.

    மலேசியச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் யாவை?

    3.

    சிங்கப்பூர் சட்டத்தில் மின்னணு ஆவணம், துடிமக் கையொப்பம் பற்றிக் கூறப்படும் கருத்துகள் யாவை?

    4.

    இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் மின்னணு ஆவணம், துடிமக் கையொப்பம் பற்றிய சட்டக் கூறுகளை சுருங்கக் கூறுக.

    5.

    இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் துடிமக் கையொப்பச் சான்றிதழ் பற்றி என்ன கூறுகிறது?

    6.

    இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கணிப்பொறிக் குற்றங்களை விளக்குக.

    7.

    இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி எந்தெந்தச் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன?

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 16:43:08(இந்திய நேரம்)