Primary tabs
6.5 தொகுப்புரை
-
கணிப்பொறி, இணையம் ஆகியவற்றின் வளர்ச்சியோடு கூடவே கணிப்பொறிக் குற்றங்களும், இணையம் வழியான மின்வெளிக் குற்றங்களும் பெருகி வருகின்றன. அவற்றை எதிர்கொள்ளத் தற்போதுள்ள சட்டங்கள் போதுமானவையாக இல்லை. புதிய சட்டங்களுக்கான தேவை எழுந்துள்ளது.
-
மரபுவழி வணிகத்தில் இல்லாத, எதிர்பாராத சிக்கல்கள் மின்வணிகத்தில் ஏற்படுகின்றன. மரபுவழி வணிக ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பற்றிய விவரங்கள் வெளிப்படையானவை. ஆனால் மின்வணிகத்தில் இன்னார் என்று அறிவித்துக் கொள்ளாமலே ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். இது செல்லுபடி ஆகிற ஒப்பந்தமாகக் (valid contract) கருதப்படுமா? மேலும் துடிமக் கையொப்பமிட்ட ஒப்பந்தங்களை அங்கீகரிக்க ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தச் சட்டங்களில் வழிமுறைகள் இல்லை.
-
வலையகத்தின் பெயரை வணிகப்பெயர் அல்லது வணிகச் சின்னமாகக் கருத முடியுமா? வலையகப் பெயரும் வணிகச் சின்னமே எனப் பல வழக்குகளில் விவாதிக்கப்பட்ட போதிலும் இருக்கின்ற சட்டங்களை வைத்து இதுபோன்ற வழக்குகளில் வெற்றிபெற முடியவில்லை.
-
மின்வணிக நடவடிக்கையில் அதற்கான வலையகம், விற்பவர், வாங்குபவர், பணம் செலுத்தும் வங்கி, பெறும் வங்கி ஆகியவை வெவ்வேறு நாடுகளில் இருக்க வாய்ப்புள்ளது. இதில் எந்த நாட்டின் அந்நியச் செலவாணிச் சட்டம் தலையிடும்? இந்த வணிகப் பரிமாற்றத்தில் தகராறு ஏற்பட்டால் எந்த நாட்டு நீதி மன்றத்தில் வழக்குத் தொடுப்பது? இந்த விற்பனைக்கு எந்த நாட்டின் விற்பனைவரிச் சட்டத்தின்படி வரி விதிப்பது?
-
பதிப்புரிமை பெற்ற ஓர் ஒலிநாடாவிலுள்ள பாடலை ஒருவர் எம்பீ-3 வடிவில் மாற்றித் தனது வலையகம் மூலம் இலவசமாக வழங்குகிறார். எம்பீ-3 வடிவிலுள்ள பாடல் ஒலிநாடாவிலுள்ள பாடலின் அப்பட்டமான நகல் என்று கூற முடியுமா? இது பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் வருமா?
-
கணிப்பொறிக் குற்றம் அல்லது மின்வெளிக் குற்றம் என்பது கணிப்பொறி, கணிப்பொறிப் பிணையம் அல்லது இணையத்தை மூலமாக, கருவியாக, இலக்காக அல்லது இடமாகக் கொண்ட குற்றத்தைக் குறிக்கின்றது.
-
வேறு ஊடகங்களில் தடை செய்யப்பட்டுள்ள ஆபாசத் தகவல்கள் வலையகங்களில் வெளியிடப்படுகின்றன. சாதி, மத, இன வெறியைத் தூண்டும் தகவல்களையும் காண முடிகிறது. இவை சமூகக் குழுக்களிடையே கசப்புணர்வை வளர்க்கும். இவற்றைத் தடுக்கப் புதிய சட்டங்கள் தேவை.
-
‘ஐலவ்யூ’ நச்சுநிரலைப் பரப்பிய ஃபிலிப்பைன்ஸ் நாட்டு இளைஞரை உடனே கைது செய்ய முடிந்தது. ஆனால் அவர் இழைத்த குற்றத்துக்கு ஏற்ற தண்டனை வழங்க அந்த நாட்டுச் சட்டத்தில் இடமில்லாமல் போய்விட்டது.
-
கணிப்பொறி முறைமையில் அத்துமீறிய தாக்குதல் காரணமாய் ஒரு நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுகிறது எனில் அத்தாக்குதல் குற்றமாகக் கருதப்பட்டுக் காரணமானவர் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கான சட்டங்களைப் புதியதாக இயற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
-
ஒரு மென்பொருளைக் காசு கொடுத்து வாங்காமல் அதனைச் சட்டத்துக்குப் புறம்பான முறையில் நகலெடுத்துக் கணிப்பொறியில் பயன்படுத்திக் கொள்வதே மென்பொருள் களவு (Piracy) எனப்படும். கணிப்பொறி முறைமைக்குள் அத்துமீறி நுழைந்து முக்கிய தகவல்களைக் கவர்ந்து கொள்வதும் களவாகவே கருதப்பட வேண்டும். ஆனால் இதற்கு முறையான விதிமுறைகள் தற்போதைய சட்டங்களில் இல்லை.
-
கடன் அட்டை, பற்று அட்டையின் விவரங்கள், பயனர் பெயர், கடவுச்சொல் போன்ற இரகசிய விவரங்களைத் தந்திரமான முறையில் கவர்ந்து மோசடியில் ஈடுபடும் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் புதிய சட்டங்கள் தேவை.
-
மின்னஞ்சல், அஞ்சல் குழுக்கள், வலைப்பதிவு, உடனடிச் செய்திப் பரிமாற்றம் போன்ற சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வோர் தருகின்ற தனிப்பட்ட சொந்த விவரங்களை அவருடைய அனுமதி இல்லாமல் அறிந்து கொள்வதும், அறிந்த விவரங்களை முறைகேடான வகையில் பயன்படுத்திக் கொள்வதும் குற்றமாகக் கருதப்பட்டுத் தண்டனை வழங்கப் புதிய சட்டவிதிகளை உருவாக்க வேண்டும்.
-
இங்கிலாந்தில் கணிப்பொறி முறைமையில் அத்துமீறி நுழைந்து இரகசிய விவரங்களை அறிந்து கொண்ட வழக்கில், ’குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேர்மையற்ற முறையில் கணிப்பொறி முறைமையை அணுகியது குற்றச் செயல் அன்று. இச்செயலைக் குற்றம் என்று ஆக்க விரும்பினால் அவ்வேலையைச் செய்ய வேண்டியது நாடாளுமன்றமே அல்லாது நீதிமன்றம் அன்று’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
-
1996-இல் மின்வணிக மாதிரிச் சட்டம் ஐநாவின் பொதுக்குழுவில் 15/162-வது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் அடிப்படையில் உறுப்பு நாடுகள் ஒரே மாதிரியான சட்டங்களை இயற்ற வேண்டும் அல்லது ஏற்கெனவே உள்ள சட்டங்களைத் திருத்த வேண்டும் எனப் பரிந்துரைத்¢தது. மின்னணு வடிவிலான துடிம ஆவணங்களையும், துடிமக் கையொப்பத்தையும் சட்ட பூர்வமானதாக ஏற்க வேண்டும் என்பது முக்கிய பரிந்துரையாகும்.
-
ஐரோப்பியக் கூட்டமைப்பின் ஆட்சிமன்றம் (Council of Europe) 2001-ஆம் ஆண்டு நவம்பர் 23-இல் மின்வெளிக் குற்றங்கள் தொடர்பாகப் புடாபெஸ்டில் ஒரு மாநாட்டைக் (Convention on Cyber Crimes) கூட்டி மின்வெளிக் குற்றங்கள் பற்றிச் சட்டம் இயற்றுவதற்கான ஆலோசனைகளை வெளியிட்டது. அவற்றை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்தது.
-
அத்துமீறிக் கணிப்பொறி முறைமையை அணுகுதல், கணிப்பொறித் தகவல் பரிமாற்றத்தில் குறிக்கிடல், கணிப்பொறித் தரவினைச் சேதப்படுத்தல், அழித்தல், சிதைத்தல், திருத்துதல் அல்லது மறைத்தல் குற்றமாகும். இக்குற்றங்களைப் புரிய ஒரு வன்பொருள் அல்லது மென்பொருளை உருவாக்குவது, விற்பது, வாங்குவது, வினியோகிப்பதும் குற்றமே. குழந்தைப் பாலியல் தொடர்பான தகவல்களை உருவாக்குவது, ஒரு கணிப்பொறி முறைமையில் பிறர் காண ஏற்பாடு செய்வது, ஒரு கணிப்பொறி முறைமை வழியாக வினியோகிப்பது, அனுப்புவது, பெறுவது, ஒரு கணிப்பொறி முறைமை அல்லது தரவுச் சேமிப்பு ஊடகத்தில் வைத்திருப்பது. மேற்கண்ட குற்றங்களைச் செய்ய முயல்வது, உதவுவது, தூண்டுவது குற்றமாகும். குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு ஊறு விளைவிக்காத வகையில் மேற்கண்ட குற்றங்களைத் தண்டிக்கச் சட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும் என மாநாட்டுத் தீர்மானம் வலியுறுத்திக் கூறியுள்ளது.
-
மின்வெளிக் குற்றங்களைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் பல்வேறு நாடுகளில் பல்வேறு சட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் சில தோல்வி கண்டன. இணையத்திலுள்ள ஆபாசத் தகவல்களைச் சிறுவர்கள் காண்பதற்குத் தடைவிதித்து 1996-இல் அமெரிக்கா இயற்றிய நாகரிகத் தகவல்தொடர்புச் சட்டம் செல்லாதென ஒரு வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
-
1996-ஆம் ஆண்டு உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (World Intellectual Property Organisation - WIPO) ஜெனீவாவில் கூடி உருவாக்கிய இரண்டு உடன்படிக்கைகளை மின்வெளிச் சொத்துரிமை, அதற்கான பதிப்புரிமை, காப்புரிமை தொடர்பான முன்னோடிச் சட்ட வடிவாகும்.
-
ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள் மின்வணிகத்திலுள்ள சட்டச் சிக்கல்கள் தொடர்பாக ‘எக்லிப்’ (ECLIP - Electronics Commerce Legal Issues Platform) என்ற குழுவை அமைத்தது. மின்வெளிச் சட்டங்கள் பற்றிய பல வழிகாட்டு நெறிமுறைகளை இக்குழு பரிந்துரைத்தது.
-
அமெரிக்க ஐக்கிய நாடுகள் காங்கிரஸில் 1984-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கணிப்பொறி மோசடி மற்றும் முறைகேடான பயன்பாட்டுச் சட்டம் (Computer Fraud and Misuse Act) பல நாடுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள மின்வெளிச் சட்டங்களின் முன்னோடிச் சட்டமாகும்.
-
அமெரிக்க அரசு, நிதி நிறுவனக் கணிப்பொறிகள், மாநிலங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் அல்லது அயல்நாட்டு வணிகத்தில் ஈடுபடும் கணிப்பொறிகளை அனுமதியின்றி அணுகுவது, ஒரு நிரல், குறிமுறை அல்லது கட்டளையைச் செயல்படுத்தி ஒருவருக்கு 5000 டாலருக்குக் குறையாது இழப்பு ஏற்படுத்தல், மருத்துவப் பரிசோதனை, நோயாய்வு, சிகிச்சை ஆகிய விவரங்களில் திருத்தம் செய்தல், அதன் மூலம் ஒருவருக்குக் காயம் ஏற்படுத்தல், அரசுக் கணிப்பொறிக்குச் சேதம் விளவித்தல் குற்றமாகும் என அமெரிக்கச் சட்டம் வரையறுத்துள்ளது.
-
மலேசிய நாட்டில் 1997-ஆம் ஆண்டு நிறவேற்றப்பட்ட ‘கணிப்பொறிக் குற்றங்கள் சட்டத்தில்’ (Computer Crimes Act) கணிப்பொறிக் குற்றங்கள், அவற்றுக்குரிய தண்டனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரு கணிப்பொறி முறைமையை அனுமதியின்றி அணுகுவது, அதன் காரணமாய் ஒருவருக்குக் காயம் ஏற்படச் செய்வது, ஒரு கணிப்பொறித் தரவினை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக மாற்றி அமைப்பது, கடவுச்சொல்லை உரியவர் அல்லாத வேறு நபருக்குத் தெரிவிப்பது, இக்குற்றங்களைத் தானே செய்தாலும், பிறரைக் கொண்டு செய்தாலும், செய்யத் தூண்டினாலும், செய்ய முயன்றாலும் குற்றமே. தண்டம் அல்லது சிறை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
-
ஐநா மன்றத்தின் மாதிரிச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூர் அரசு 1998-ஆம் ஆண்டு இயற்றிய மின்னணுப் பரிமாற்றச் சட்டம் (Electronic Transactions Act) முழுக்க முழுக்க மின்வணிகத்தை ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகளைக் கொண்டுள்ளது. மின்னணு ஆவணம், துடிமக் கையொப்பம், மின்னணுக் கையொப்பம் ஆகியவை சட்டப்படி செல்லும். மின்னணு ஆவணம் மூலம் செய்யப்படும் ஒப்பந்தம் செல்லும். சேமித்து வைக்கப்படும் ஆவணங்கள், வழங்கப்படும் அனுமதி, அங்கீகாரம், உரிமம் - இவை அனைத்தும் மின்னணு வடிவில் இருக்கலாம். துடிம ஆவணம் மற்றும் அது தொடர்பான நடைமுறைகளில் இழைக்கப்படும் குற்றங்கள், அவற்றுக்கான தண்டம், தண்டனைகள் மற்றும் நீதிமன்றங்களின் செயல்பாட்டெல்லை ஆகியவையும் விளக்கப்பட்டுள்ளன.
-
ஐநா மன்றத்தின் மின்வணிக மாதிரிச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (Information Technology Act) 2000-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. மின்வெளிச் சட்டம் இயற்றியுள்ள மிகச்சில நாடுகளுள் இந்தியாவும் ஒன்று (12-வது நாடு).
-
தாள்வடிவ ஆவணங்களைப் போலவே மின்னணு ஆவணங்களும், எழுத்து வடிவிலான கையொப்பம் போலவே துடிமக் கையொப்பமும் சட்டப்படியானதாகவே கருதப்படும். அரசு வழங்குகின்ற உரிமம், அனுமதி, அங்கீகாரம், ஒப்புதல், பெறுகை, செலுத்துகைக்கான ஒப்புகைகள், அரசிதழ் (Gezette) உட்பட அரசு ஆவணங்கள் மின்னணு வடிவில் இருக்கலாம்.
-
துடிமக் கையொப்பம் தொடர்பான தனித்திறவி, பொதுத்திறவிகளை அரசிடம் உரிமம் பெற்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். வாடிக்கையாளர் அதற்கான விண்ணப்பமும் கட்டணமும் அளிக்க வேண்டும். போதிய காரணங்கள் கூறி சான்றிதழ் தர மறுக்கலாம், சான்றிதழின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் அல்லது குறிப்பிட்ட காரணங்களுக்காக உரியவருக்குத் தகவல் தெரிவித்தபின் நிரந்தரமாகத் திரும்பப் பெறலாம்.
- இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் பல்வேறு வகையான கணிப்பொறிக் குற்றங்களும் அவற்றுக்கான தண்டனைகளும் விவரிக்கப் பட்டுள்ளன. கணிப்பொறியில் சட்டப்படி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஓர் ஆவணத்தைத் தெரிந்தே மறைப்பது, அழிப்பது, திருத்துவது, ஒரு கணிப்பொறி முறைமையில் அனுமதியின்றி நுழைந்து ஊறு விளைவிப்பது, பார்க்க, படிக்க, கேட்க ஆபாசமாக இருக்கும் தகவல்களை மின்னணு ஊடகத்தில் வெளியிடுவது, வெளியிடக் காரணமாக இருப்பது, இகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களைப் பிறரறிய வெளிப்படுத்துவது குற்றமாகும். குற்றம் வேற்று நாட்டில் இழைக்கப் பட்டாலும் அதனால் இந்தியாவிலுள்ள கணிப்பொறி முறைமை பாதிக்கப்படுமாயின் குற்றமே. வேற்று நாட்டவர் செய்தாலும் தண்டிக்கப்படுவர்.
- இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் தண்டனைச் சட்டம், தடயச் சட்டம், வங்கியாளர் புத்தகத் தடயச் சட்டம், ரிசர்வ் வங்கிச் சட்டம் ஆகியவற்றின் சில சட்டப் பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
-