இளையவன் இவனா?
பாட அறிமுகம்
Introduction to Lesson
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட வேந்தர்கள் மூவர் ஆவர். சேர, சோழ பாண்டியர் என அவர்கள் அழைக்கப் பெறுகிறார்கள். ஏனைய மன்னர்கள் குறுநில மன்னர்கள் என்று பெயர் பெறுகின்றனர். மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னர் பாண்டியர் ஆவர். அவர்களுள் ஒருவன் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவான். இவன் மிகச் சிறுவயதிலேயே பாண்டிய நாட்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவன். அதனால் அவனைச் சிறுவன் என்று ஏளனம் செய்து சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய எழுவரும் படைதிரட்டி வந்தனர். அப்போது அவர்களுக்கு எதிராக வஞ்சினம் கூறிய இப்பாண்டியனின் பாடல் புறநானூற்றில் 72ஆவது பாடலாக இடம்பெறுகின்றது.

அவன் அப்பாடலில் கூறிய வண்ணமே தம்பகைவர்களை வென்றுவிட்டான். தலையாலங்கானம் என்ற இடத்தில் நடைபெற்ற அப்போரில் வெற்றி பெற்றதால் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று போற்றப் பெற்றான். இவனது ஆட்சியில் பாண்டியநாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தவர் மாங்குடி மருதனார் ஆவார். இவனது வீரத்தையும், இளம்பருவத் தோற்றத்தையும் வியந்து பாடியவர் இடைக்குன்றூர்கிழார் என்னும் புலவர் ஆவார். கல்லாடனார், குடபுலவியனார், மாங்குடி மருதனார் ஆகியோரும் பாடியுள்ளனர். தன்னம்பிக்கை தரும் வரலாறாக விளங்கும் இவனது வரலாற்றை மூலமாகக் கொண்டு இக்குறு நாடகம் இயற்றப் பெற்றுள்ளது. பிறப்பால் குள்ளமான உருவம் உடைய மணி தன் தமிழாசிரியரிடம் நடத்தும் உரையாடல் மூலமாக எழுவரை வென்ற இணையிலாச் சிறுவன் பாண்டியன் நெடுஞ்செழியனின் வீர வரலாறு நாடகமாக்கப் பெற்றிருக்கிறது. இதுவே, நமது பாடப் பகுதியாகும்.