இளையவன் இவனா?
பாடம்	
 Lesson 
            | இடம் | : அரண்மனை. அரசவை | 
| பங்கேற்போர் | : மன்னன் நெடுஞ்செழியன், ஒற்றன், அமைச்சர் மற்றும் பலர். | 
		| காவலன் | : மன்னவ, நமது ஒற்றன் ஒருவன் அவசரச் செய்தி கொண்டு வந்திருக்கின்றான். | 
| பாண்டியன் | :உடன் வரச்சொல். | 
| காவலன் | : உத்தரவு மன்னவ! (வணங்கிப் பின்செல்கிறான்) | 
| ஒற்றன் | : (வந்து கொண்டே) வணங்குகிறேன் மன்னவ! அவசரச் செய்தி. | 
| பாண்டியன் | : சொல்லுக. | 
| ஒற்றன் | : கொற்றவ, நமது பாண்டிய நாட்டைப் போர் மேகம் சூழ்ந்துள்ளது. | 
| பாண்டியன் | : (வெகுண்டு) என்ன? | 
| ஒற்றன் | : ஆம் மன்னவா, சேரரும், சோழரும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் ஐவரும் ஆக எழுவரும் இணைந்து படையெடுத்து வருகின்றனர். | 
| பாண்டியன் | : (ஆவேசத்தோடு, உடைவாளை இறுகப்பற்றி எழுந்தபடி) அப்படியா? | 
| ஒற்றன் | : ஆம் மன்னவா, உடனே எதிர்கொள்ள வேண்டிய பகை மன்னவா. இன்னும்... | 
| பாண்டியன் | : இன்னும்..? | 
| ஒற்றன் | : சொல்ல என் நெஞ்சம் பதறுகின்றது. | 
| பாண்டியன் | : சொல்லுக ஒற்றனே. | 
| ஒற்றன் | : எப்படிச் சொல்லுவேன் மன்னவா? அந்தப் பாதகர்கள்.. | 
| பாண்டியன் | : (சினத்தால் கண்கள் சிவக்க) பாதகர்கள்.. | 
| ஒற்றன் | : இளையவன் என்று தங்களை இகழ்ந்து.. (சினத்தால் சொல் வரமறுத்து நிற்கிறான்) | 
| பாண்டியன் | : இளையவன். இளையவன்.. தென்னகர் மதுரையின் மன்னன் இளையவன்... (படீரென்று உடைவாள் கழற்றி, வான்நோக்கி உயர்த்திப் பிடித்தபடி) இந்த நாட்டின் பெருமையைச் சிறப்பித்துப் பேசுபவர்கள் என்னைப் பார்த்து நகைக்கட்டும்... | 
| அமைச்சர் | : (சற்றே பயத்துடன்) மன்னவா? | 
| பாண்டியன் | : அமைச்சரே.. அவையோரே நன்குக் கேளுங்கள்... இளையவன் இவன் என்று என்மனம் புண்பட மொழிந்து யானை, குதிரை, தேர்ப்படை, ஆட்படை எனப் பெரும்படை உடையவர்கள் நாம் என்று செருக்குடன் கிளம்பிய அப்பகைவர் எழுவரையும் எதிர்கொண்டு பொருதுவேன். போரிட்டு அவர்களை வெல்வேன்.. இல்லையென்றால்... | 
| அமைச்சர் | : உறுதியாய் வெல்வோம் மன்னவா. | 
| பாண்டியன் | : இல்லையென்றால்.. கொடியவன் என் மன்னன் என்று என் குடிமக்கள் யாவரும் பழிக்கும் இழிசொல்லுக்கு நான் ஆளாவேன். செங்கோல் தவறிய கொடுங்கோலன் ஆவேன். | 
| மாங்குடி மருதனார் | : (குறுக்கிட்டு) உறுதியாய் வெல்வீர். வெற்றி மங்கை உம்பக்கம். இதில் என்ன ஐயம்? | 
| பாண்டியன் | : தண்பாண்டிநாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் ஒப்பற்றத் தலைவரே. தமிழாய்ந்த சான்றீரே. மாங்குடி மருதனாரே... | 
| மாங்குடி மரு | : தென்னவா ! | 
| பாண்டியன் | : முன்னர்ச் சொன்ன சூளுரை நான் பொய்ப்பேன் ஆயின், தங்களது தலைமையிலான தமிழ்ச் சங்கப் புலவர் குழு என்னைப் பாடாது ஒழியட்டும். | 
| மாங்குடி மரு | : வெற்றி உமக்கே உறுதி. மன்னவா ! வாழ்த்துகிறோம் நாங்கள் ! | 
| பாண்டியன் | : அமைச்சரே | 
| அமைச்சர் | : (பணிவுடன்) ஆணை மன்னவா. | 
| பாண்டியன் | : தளபதியாரே. .. | 
| தளபதி | : நாற்படைகளும் தங்களது ஆணைக்குக் காத்திருக்கின்றன.. | 
![]()  | 
	  |
| பாண்டியன் | : போர் முரசு ஒலிக்கட்டும்.. ஊர்க்களங்களில் வீரம் பயின்ற நம் பாண்டிய மக்கள் போர்க்களம் காணட்டும். பகைவர்கள் நம் தீரம் உணரட்டும். வெற்றி நமக்கே. முழங்குக முரசு.. அவை கலையட்டும்... | 
| (போர் முரசு ஒலிக்கிறது.. யானைப்படை கிளம்பும் ஓசையும், காட்சியும். குதிரைப்படை, தேர்ப்படை மற்றும் ஆட்படை அணிவகுப்பும் அவற்றுக்கான ஒலியும் (இசையும்) ஒலிக்கின்றன.). | 
