12. இளையவன் இவனா?

இளையவன் இவனா?

பாடம்
Lesson


காட்சி - 5

இடம் : பள்ளி ஆசிரியர் ஓய்வறை
பங்கேற்போர் : தமிழாசிரியர் வள்ளியின் செல்வன், மாணவன் மணி.

 
மணி : தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வாழ்க! வாழ்க.. !
வள்ளியின்.. : என்ன மணி.. நீயும் புலவர் ஆகி விட்டாயா?
மணி :ஆ... தாங்கள் கூறிய கதையில் ஒன்றிப்போய்விட்டேன் ஐயா.
வள்ளியின்.. : கதையா? இது என்ன கற்பனை என்றா நினைத்தாய்? வரலாறு. நடந்த நிகழ்வு..
மணி : வியப்பான வரலாறு ஐயா.
வள்ளியின்.. : வியப்பது மட்டும் நமது வேலை அல்ல. நாமும் இதுபோல் உறுதி கொண்டு செயல்பட வேண்டும், மணி.
மணி : உறுதியாக ஐயா.. ஆனால்
வள்ளியின்.. : என்ன ஆனால்...
மணி : அவரோ மன்னன். நான்...
வள்ளியின்.. : “எல்லாரும் இந்நாட்டு மன்னர் !” என்று பாரதியார் பாடியிருக்கிறாரே.. அப்படியானால் நீயும் இந்நாட்டு மன்னன் தானே.. !
மணி : ஆமாம் ஐயா.
வள்ளியின்.. : அதனால்தான் சொல்கிறேன் மணி. ஒருவனுக்கு வயதோ தோற்றமோ பெருமை, சிறுமை தந்துவிடுவதில்லை. திறமையும் தகுதியும் இருந்தால்தான் சிறப்பு. அதைவிட இன்றியமையாதது மன உறுதி.. அது வந்துவிட்டால் எதனையும் வெல்லலாம் இல்லையா மணி..?
மணி : உண்மைதான் ஐயா. மனத்தில் உறுதி கொள்கிறேன் ஐயா.
வள்ளியின்.. : மனத்தில் உறுதிவந்தால் வாக்கில் இனிமை வந்துவிடுமல்லவா? வாக்கு இனிமையாகிவிட்டால் பேச்சுப் போட்டியில் வெல்லலாம் அல்லவா. ஆக, பேச்சுப் போட்டியில் பங்கேற்போர் பட்டியலில்...
மணி : என் பெயர் இருக்கட்டும் ஐயா . நெடுஞ்செழியப் பாண்டியன் போல நான் வெற்றி பெறுவது உறுதி ஐயா..
வள்ளியின்.. : ஆம் மணி. அவன் வில்போரில் வென்றான்.. நீ சொல்போரில் வெற்றி பெறுவாய். என் நல்வாழ்த்துகள்.
மணி : நன்றி ஐயா, சென்றுவருகிறேன். (வணங்கி விடை பெறுகிறான்)