15. விரிசிகை மாலைசூட்டு

 

இதன்கண், உதயணன் வளமலைச்சாரலில் தன் சுற்றத்துடன் உண்டாடிம கிழ்ந்திருக்கும் பொழுது, ஒருநாள் ஒரு பூம்பொழிலில். ஒரு. துறவியின் மகள் விரிசிகை என்பாள்  அவனைக்காண்டலும், அவள் நறிய மலர்களைக் கொணர்ந்து அவற்றை மாலையாகத் தொடுத்துத் தரும்படி வேன்டலும்.,  அவன் மாலை தொடுத்து அளித்தலும், அவற்றை அவள்  நன்கு சூடிக்கொள்ளாமை கண்டு அவளைத் தன்பால் அழைத்துத் தன் மடிமீதுஇருத்தி அவள்அழகிற்குப் பொருந்த அம்மாலைகளைச் சூட்டுதலும், துறவோர் பள்ளி. நறுமலர், விரிசிகையின்  அழகு முதலியவற்றின் வருணனையும் பிறவும் கூறப்படும்,
 
              வண்டார் சோலை வளமலைச் சாரல்
            உண்டாட்டு அயரும் பொழுதின் ஒருநாள்
            வழைஅமல் முன்றிலொடு வார்மணல் பரப்பிக்
            கழைவளர் கான்யாறு கல்அலைத்து ஒழுகி
        5   ஊகம் உகளும் உயர்பெரும் சினைய
            நாகப் படப்பையொடு நறுமலர் துறுமிச்
            சந்தனப் பலகைச் சதுரக் கூட்டமொடு
            மந்திரச் சாலை மருங்குஅணி பெற்ற
            ஆத்திரை யாளர் சேக்கும் கொட்டிலும்
       10   நெடியவன் மூவகைப் படிவம் பயின்ற
            எழுதுநிலை மாடமும் இடுகுகொடிப் பந்தரும்
            கல்அறை உறையுளொடு பல்லிடம் பயின்றே
 
              துறக்கக் கிழவனும் துன்னிய காலை
            இறக்கல் ஆகா எழில்பொலிவு  எய்தித்
       15    தண்பூந் தணக்கம் தமாலம் தகரம்
            ஒண்பூங் காந்தள் வெண்பூஞ் சுள்ளி
            வீயா நாற்றமொடு அணிவளம் கொடுப்பக்
            கைஅமைத்து இயற்றிய செய்சுனை தோறும்
            வராலும் வாளையும் உராஅய் மறலக்
       20   கழுநீர் ஆம்பல் கருங்கேழ்க் குவளையொடு
            கொழுநகைக் குறும்போது குறிப்பில் பிரியாப்
            புணர்ச்சி மகளிர் போகத்துக் கழுமித்
            துயில்கண் திறந்த தோற்றம் போல
            நறவுவாய் திறந்து நாள்மதுக் கமழ
       25   அறுகால் வண்டினம் ஆர்ப்ப அயலே
 
              அந்தீம் பலவும் அள்இலை வாழையும்
            முதிர்கோள் தெங்கொடு முன்றில் நிவந்து
            மணிக்கண் மஞ்ஞையும் மழலை அன்னமும்
            களிக்குரல் புறவும் கருங்குயில் பெடையும்
       30   பூவையும் கிளியும் யூகமும் மந்தியும்
            மருளி மாவும் வெருளிப் பிணையும்
            அன்னவை பிறவும் கண்ணுறக் குழீஇ
            நலிவோர் இன்மையின் ஒலிசிறந்து உராஅய்
            அரசுஇறை கொண்ட ஆவணம் போலப்
       35   பொலிவொடு புணர்ந்த பொழிலகம் புதைஇப்
 
              பெருந்தகு படிவமொடு பிறப்புஅற முயலும்
            அருந்தவ நோன்மையர் ஆத்திரைக் கொட்டிலில்
            கேள்வி முற்றிக் கிரிசை நுனித்த.
            வேள்விக் கலப்பை விழுப்பொருள் விரதத்துச்
       40   சீரை உடுக்கை வார்வளர் புன்சடை
            ஏதமில் காட்சியோர் மாதவர் உறையும்
            பள்ளி குறுகி ஒள்ளிழை மகளிரொடு
            வான்பொன் கோதை வாசவ தத்தையும்
            காஞ்சன மாலையும் காண்டற்கு அகலப்
       45   பெருந்தண் பிண்டி பிணங்கிய நீழல்
            அரும்படைத் தானை அகன்ற செவ்வியுள்
            வயந்தக குமரனொடு வத்தவன் இருந்துழி
 
              ஏதம் இன்றி இறைக்கடன் கழித்துக்
            காதல் பெருந்தொடர் களைதல் ஆற்றான்
       50   மாதர்த் தேவியொடு மாதவம் புரிந்த
            மன்னவ முனிவன் தன்னமர் ஒருமகள்
            அணித்தகு பேரொளி அரத்தம் அடுத்த
            மணிப்பளிங்கு அன்ன மாசில் வனப்பின்
            உகிர்அணி பெற்ற நுதிமுறை சுருங்கி
       55   நிரலளவு அமைத்த விரலிற்கு ஏற்பச்
            செம்மையில் சிறந்து வெம்மைய ஆகி
            ஊன்பெறப் பிறங்கி ஒழுகுநீர் ஆமைக்
            கூன்புறம் பழித்த கோலப் புறவடிக்
            குவிந்த அடிமையில் கோபத்து அன்ன
       60   பரட்டின் நன்னர்ப் பாய சீறடித்
            திரட்டி அன்ன செல்வக் கணைக்கால்
            செறிந்துவனப்பு எதிர்ந்த தேன்பெய் காம்பின்
            நிறம்கவின் பெற்ற காலமை குறங்கின்
            கைவரை நில்லாக் கடுஞ்சின அரவின்
       65   பைஅழித்து அகன்ற பரந்துஏந்து அல்குல்
            துடிநடு அன்ன துளங்கிய நுசுப்பின்
            கொடிஅடர்ந்து ஒழுகிய கோல மருங்கின்
            புனல்சுழி அலைத்துப் பொருந்திய கொப்பூழ்
            வனப்புவீற்று இருந்த வாக்குஅமை அவ்வயிற்று
 
         70   அஞ்சில் ஆகத்து எஞ்சுதல் இன்றித்
            திணைமுதல் இட்ட செங்கண் முகிழ்முலை
            அணைபுரை மென்மை அமைபடு பணைத்தோள்
            காம்புஅமை சிலம்பின் கடிநாள் காந்தள்
            பூந்துடுப்பு அன்ன முன்கையின் பொலிந்து
       75   கொழுமுகை குவித்த செழுமென் சிறுவிரல்
            கிளிவாய் அன்ன ஒளிவாய் உகிரின்
            விரிந்துநிலா நிறைந்த மேதகு கமுகின்
            எருத்திற் கேற்ற திருத்தகு கழுத்தின்
            கூடுமதி அன்ன சேடணி திருமுகத்து
       80   அகழ்கடல் பிறந்த ஆசறு பேரொளிப்
            பவழக் கடிகை பழித்த செவ்வாய்
 
              முருந்தொளி முருக்கிய திருந்தொளி முறுவல்
            நேர்கொடு சிவந்த வார்கொடி மூக்கின்
            பொருகயல் போலப் புடைசேர்ந்து உலாஅய்ச்
       85   செருவேல் பழிந்த சேஅரி நெடுங்கண்
            கண்ணிற்கு ஏற்ப நுண்ணிதின்  ஒழுகி
            முரிந்தேந்து புருவம் பொருந்திய பூநுதல்
            நாள்வாய் வீழ்ந்த நறுநீர் வள்ளைத்
            தாள்வாட் டன்ன தகையமை காதின்
       90   நீல மாமணி நிமிர்ந்துஇயன்று அன்ன
            கோலம் கொண்ட குறுநெறிக் கூழை
            ஒருசிகை முடித்த உறுப்பமை கோலத்து
            விரிசிகை என்னும் விளங்குஇழைக் குறுமகள்
 
              இருந்துஇனிது ஒழுகும் இயன்மலைப் பள்ளியுள்
       95   அருந்தவர் அல்லதை ஆடவர் அறியாள்
            தவிர்வுஇல் காதலொடு தன்வழிப் படூஉம்
            கவர்கணை நோன்சிலைக் காமன் இவன்எனும்
            மையல் உள்ளமொடு பைய இயலிப்
            பிள்ளைமை கலந்த பேதைப் பெரும்பிணை
      100    வெள்ளை நோக்கமொடு விரும்புபு விதும்பிப்
            பவழப் பாவையும் பந்தும் கிடைஇப்
            புகழப் பட்ட பூமரக் காவினுள்
            நந்தி வட்டமும் நாகத்து அலரும்
            சிந்து வாரமும் சேபா லிகையும்
      105    மணிக்குருக் கத்தியும்  மணிப்பூஞ் சுள்ளியும்
            நாட்சிறு சேடமும் நறுஞ்செண் பகமும்
            கோட்குஅமைந்து ஏந்திய கோலப் பன்மலர்
            அம்பூங் குடங்கை அகவயின் அடக்கிக்
            கொம்பேர் மருங்குல் கோமகன் குறுகித்
      110    திருந்துவாய் திறந்து தேனென மிழற்றிப்
            பெருந்தண் மலரில் பிணையல் தொடுத்தென்
            பாவையும் யானும் பண்புளிச் சூடுகம்
            ஈமின் ஐயவென்று இரந்தனள் நீட்ட
 
              நூலொடு புணர்ந்த வாலியன் மார்பின்
      115    தவத்தியல் பள்ளி சார்ந்தனள் உறையும்
            இயற்கைத் திருமகள் இவளென எண்ணி
            இணைமலர் நெடுங்கண் இமைத்தலும் வாடிய
            துணைமலர்க் கோதைத் தோற்றமும் கண்டே
            முனிவர் மகளெனத் தெளிவுமுந் துறீஇ
      120    ஐய மின்றிஆணைஒட்டிய
            தெய்வத் திகிரி கைவலத்து உயரிய
            நிலப்பெரு மன்னர் மகளிர்க்கு அமைந்த
            இலக்கணக் கூட்டம் இயல்படத் தெரியா
 
              அரும்படை வழக்கின் அன்றியும் முனியாது
      125    நரம்புபொரத் தழும்பிய திரந்துவிரல் அங்கையில்
            புரிநூன் மீக்கோள் பூம்புறத்று ஏற்றதன்
            தெரிநூல் வாங்கி இருநூற் கொளீஇப்
            பவழமும் வெள்ளியும். பசும்பொன் அடரும்
            திகழ்கதிர் முத்தமும் திருமணிக் காசும்
      130    உறழ்படக் கோத்த ஒளியின போல
            வண்ணம் வாடாது வாசம் கலந்த
            தண்நறும் பன்மலர் தானத்து இரீஇ
            வாள்தொழில் தடக்கையின் வத்தவர் பெருமகன்
            சூட்டுநலம் புனைந்து சுடர்நுதற்கு ஈய
 
        135   ஈயக் கொண்டுதன் எழில்முடிக்கு ஏற்பச்
           சூடுதல் தேற்றாள் சுற்றுபு திரியும்
           ஆடமைத் தோளி அலமரல் நோக்கி
 
             மடவரன் மாதரை வாஎன அருளித்
           தடவரை மார்பன் தாள்முதல் உறீஇ
      140   உச்சிக்கு ஏற்ப ஒப்பனை கொளீஇப்
           பக்கச் சின்மலர் பத்தியில் கட்டுபு
           நீல நாகம் பைவிரித் தன்ன
           கோலச் சிகழிகை தான்முதல் சேர்த்தி
           அஞ்செங் கத்திகை அணிபெற அடைச்சிப்
      145   பைங்கேழ்த் தாமம் பக்கம் வளைஇ
           இருள்அறு மதியின் திருமுகம் சுடர
           அமைபுரி தோளியை அன்பின் அளைஇப்
           புனைமலர்ப் பிணையல் சூட்டினன் புகன்றுஎன்.