16. ஊடல் உணர்த்தியது

 

இதன்கண், உதயணன் விரிசிகைக்கு மாலை சூட்டியதனைக் கண்ணுற்ற வாசவதத்தை ஊடுதலும், ஊடிய அவள் நிலைமையும், அவள் அவ்வூடலாலே உதயணன்பால் செல்லாது ஒரு புதுமலர்ச் சோலையுள் புகுதலும், அவளைப் பின்தொடர்ந்து  உதயணன் முதலியோர் செல்லுதலும், உதயணன் அவளைத்  தழுவிக் கொண்டு பாராட்டிப் பணிமொழி கூறுதலும், வாசவதத்தை உதயணனைச் சினத்தலும், அவ்அமயத்தே அவ்விடத்து ஒரு கருங்குரங்கு வருதலும் அதனைக் கண்டு வாசவ  தத்தை அஞ்சி உதயணனைத் தழுவிக் கோடலும், அக்காட்டகத்தே உதயணன் வாசவதத்தையோடு விளையாடி மகிழ்ந்திருத்தலும், பிறவும் கூறப்படும்.  
 
              புனைமலர்ப் பிணையல் புரவலன் சூட்டி
            இனமடல் பெண்ணை ஈர்ந்தோடு திருத்திச்
            செல்க நங்கை மெல்ல நடந்தென
            அடுத்த காதலொடு அண்ணல் விடுப்ப
 
          5   வேண்டிடத்து ஆடும் விருப்புறு நீக்கம்
            யாண்டுகழிந் தன்ன ஆர்வம் ஊர்தரத்
            தழையும் கண்ணியும் விழைவன ஏந்திப்
            பொன்பூங் கிண்கிணி புறவடிப் பிறழ
            நற்பூங் கொம்பர் நடைபெற் றாங்குக்
       10    கவவுறு காதலில் கண்ணுற வரூஉம்
            உவவுஉறு மதிமுகத்து ஒளிவளை முன்கைக்
            கண்ணார் கனங்குழை கதும்எனக் கண்டே
 
              மண்ணார் மார்வன் மாதரைச் சூட்டிய
            காமர்ப் பிணையல் கதுப்பணி கனற்றத்
       15    தாமரை அன்னதன் தகைமுகம் மழுங்கா
            ஓடரி சிதரிய ஒள்ளரி மழைக்கண்
            ஊடெரி உமிழும் ஒளியே போலச்
            சிவப்புஉள் ளுறுத்துச் செயிர்ப்பு முந்துறீஇ
            நயப்புள் ளுறுத்த வேட்கை நாணி
 
         20    உருத்துஅரி வெம்பனி ஊழ்ஊழ் சிதரி
            விருப்புமறைத்து அடக்கி வேக நோக்கமொடு
            பனிப்பிறை அழித்த படுமைத்து ஆகிய
            அணித்தகு சிறுநுதல் அழன்றுவியர் இழிய
            உருவ வானத்து ஒளிபெறக் குலாஅய
       25    திருவில் அன்ன சென்றுஏந்து புருவம்
            முரிவொடு புரிந்த முறைமையில் துளங்க
            இன்பம் பொதிந்த ஏந்தணி வனமுலை
            குங்குமக் கொடியொடு குலாஅய்க் கிடந்த
            பூந்தாது தொழுக்கஞ் சாந்தொடு திமிர்ந்து
       30   தளிர்ப்பூங் கண்ணியுந் தழையும் வீசியிட்
            ஒளிப்பூந் தாமம் உள்பரிந்து சிதறி
 
              முழுநீர்ப் பொய்கையுள் பொழுதொடு விரிந்த
            செழுமலர்த் தாமரைச் செவ்விப்பைந் தாது
            வைகல் ஊதா வந்தக் கடைத்தும்
       35   எவ்வம் தீராது நெய்தற்கு அவாவும்
            வண்டே அனையர் மைந்தர் என்பது
            பண்டே உரைத்த பழமொழி மெய்யாக்
            கண்டேன் ஒழிகினிக் காமக் கலப்பெனப்
            பிறப்பிடைக் கொண்டும் சிறப்பொடு பெருகி
       40   நெஞ்சிற் பின்னி நீங்கல் செல்லா
            அன்பிற் கொண்ட ஆர்வ வேகமொடு
            நச்சுஉயிர்ப்பு அளைஇ நண்ணல் செல்லாக்
 
 

            கச்சத் தானைக் காவலன் மடமகள்
            பெருமகன் மார்பில் பிரியாது உறையுமோர்
       45   திருமகள் உளள்எனச் செவியில் கேட்பினும்
            கதும்எனப் பொறாஅள் ஆதலின் கண்கூடு
            அதுஅவள் கண்டுஅகத்து அறாஅ அழற்சியில்
            தற்புடை சார்ந்த தவமுது மகளையும்
            கைப்புடை நின்ற காஞ்சனை தன்னையும்
       50   அன்பிடை அறாஅ எந்தை அணிநகர்
            உய்த்தணிர் கொடுமின்என்று ஊழடி ஒதுங்கிச்
            சிதர்மலர் அணிந்து செந்தளிர் ஒழுகிய
            புதுமலர்ச் சோலையுள் புலந்தவள் அகல

 
              அகலும் மாதரை அன்பின் கெழீஇக்
       55   கலையுணர் கணவனொடு காஞ்சனை பிற்படக்
            கண்ணில் காட்டிக் காம வெகுளி
            நண்ணின் மற்றிது நயந்துவழி ஓடி
            மாசறக் கழீஇ மனத்திடை யாநோய்
            ஆரா வாய்முத்து ஆர்த்தின் அல்லது
       60   தீராது உயிர்க்கெனத் தெளிவுமுந் துறீஇ
            ஊராண் குறிப்பினோடு ஒருவயின் ஒதுங்கும்
            தன்அமர் மகளொடு தாய்முன் இயங்க
 
              நறவிளை தேறல் உறுபிணி போலப்
            பிறிதின் தீராப் பெற்றி நோக்கிக்
       65   குறிப்புவயின் வாராள் ஆயினுங் கூடிப்
            பொறிப்பூண் ஆகத்துப் புல்லுவனன் ஒடுக்கி
            அருமைக் காலத்து அகலா நின்ற
            திருமகள் பரவும் ஒருமகன் போல
            உரிமைத் தேவி உள்ளகம் நெகிழும்
       70   வழிமொழிக் கட்டளை வழிவழி அளைஇ
            முடியணி திருத்தியும் முலைமுதல் வருடியும்
            அடிமிசைக் கிண்கிணி அடைதுகள் அகற்றியும்
            கதுப்புஅணி புனைந்தும் கதிர்வளை ஏற்றியும்
            மதுக்களி கொண்ட மதர்அரி நெடுங்கண்
       75   கடைத்துளி துடைத்தும் கடிப்புப்பெயர்த்து அணிந்தும்
            புதுத்தளிர் கொடுத்தும் பூம்புறம் நீவி்யும்
 
              செயிரிடை இட்டிது சிறக்குவது ஆயின்
            உயிரிடை இட்ட உறுகண் தருமெனத்
            தன்னுயிர்க் கணவன் உள்நெகிழ்ந்து உரைக்க
       80   அம்மொழி கேளாது அசைந்த மாதரை
            அருவி அரற்றுஇசை அணிமுழவு ஆகக்
            கருவிரல் மந்தி பாடக் கடுவன்
            குரவை அயரும் குன்றச் சாரல்
            துகில்இணைப் பொலிந்த பகல்அணைப் பள்ளியுள்
       85   முகிழ்ந்தேந்து இளமுலை முத்தொடு முழீஇத்
            திகழ்ந்தேந்து அகலத்துச் செஞ்சாந்து சிதையப்
            பூண்வடுப் பொறிப்பப் புல்லுவயின் வாராள்
 
              நாணொடு மிடைந்த நடுக்குறு மழலையள்
            காம வேகம் உள்ளம் கனற்றத்
       90   தாமரைத் தடக்கையின் தாமம் பிணைஇ
            ஆத்த அன்பின் அரும்பெறல் காதலிக்கு
            ஈத்ததும் அமையாய் பூத்த கொம்பின்
            அவாவுறு நெஞ்சமொடு கவான்முதல் இரீஇத்
            தெரிமலர்க் கோதை திகழச் சூட்டி
       95   அரிமலர்க் கண்ணிநின் அகத்தனள் ஆக
            அருளின்நீ விழைந்த மருளின் நோக்கின்
            மாதரை யாமுங் காதலெம் பெரும
            பொம்மென் முலையொடு பொற்பூண் நெருங்க
            விம்ம முறும்அவள் வேண்டா முயக்கெனப்
      100    பண்நெகிழ் பாடலின் பழத்திடைத் தேன்போல்
            உண்நெகிழ்ந்து கலவா ஊடல் செவ்வியுள்
 
              தாழ்வரை அடுக்கத்துத் தளிர்சேர் தேமாத்
            தூழுறு திங்கனி உண்ணா இருத்தலின்
            இவறினை நீயெனத் தவறுமுந் துறீஇ
      105    இனப்பெருந் தலைமகன் ஆணையின் ஆட்டித்
            தனக்குஅரண் காணுது தடவரை தத்திப்
            பெருமகன் கோயில் திருமுன் பாய்ந்தெனக்கு
            அரண்நீ அருளென்று அடைவது போன்றோர்
            கருமுக முசுக்கலை கதுமெனத் தோன்ற
 
        110    இன்னதென்று உணரா நன்நுதல் நடுங்கி
            அழல்கதிர் பாப்பி உழல்சேர் வட்டமொடு
            நிழலவிர் கதிர்மதி நிரந்துநின் றாங்குத்
            திலகத் திருமுகம் செல்வன் திருத்தி
            ஒழுகுகொடி மருங்குல் ஒன்றா யொட்டி
      115    மெழுகுசெய் பாவையின் மெல்லியல் அசைந்து
            மன்னவன் மார்பில் மின்னென ஒடுங்கி
            அச்ச முயக்கம் நச்சுவனள் விரும்பி
            அமிழ்துபடு போகத்து அன்புவலைப் படுத்த
            மாதரை மணந்த தார்கெழு வேந்தன்
 
        120    வழித்தொழில் கருமம் மனத்தின் எண்ணான்
            விழுத்தகு மாதரொடு விளையாட்டு விரும்பிக்
            கழிக்குவன் மாதோ கானத்து இனிஎன்.