தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0111-காப்பியக் கட்டமைப்பு

 • 2.5 காப்பியக் கட்டமைப்பு

  காப்பியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றித் தண்டியலங்காரம் கூறுகிறது. அவ்வழியில் காப்பியக் கட்டமைப்பை இரு வகையாகப் பகுக்கலாம்; ஒன்று புறநிலைக் கட்டமைப்பு (External Structure); மற்றது அகநிலைக் கட்டமைப்பு (Internal Structure). பரிச்சேதம், இலம்பகம், படலம், காதை, காண்டம், சருக்கம் போன்ற பாகுபாடுகளைப் புறநிலைக் கட்டமைப்பாகக் குறிப்பிடலாம்.

  2.5.1 சிலப்பதிகாரத்தில் புறநிலைக் கட்டமைப்பு

  சிலப்பதிகாரப் புறநிலைக் கட்டமைப்பில் பெரும் பிரிவாகக் காண்டமும் சிறுபிரிவாகக் காதையும் அமைகின்றன. இவை பெரும்பாலும் நிலைமண்டில ஆசிரியப் பாவால் அமைவன. இவை பொருள் தொடர்நிலையாகவும் (Continuous Narration) சில போது தொடராத் தொடர்நிலையாகவும் (Discontinuous Narration) அமைகின்றன. மங்கல வாழ்த்துப் பாடலும் மனையறம்படுத்த காதையும் தொடர்நிலை. அடுத்துவரும் அரங்கேற்றுகாதை தொடராத் தொடர்நிலை. சில காதைகள் கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி என இசைப்பாட்டாக அமைவன. காதை என்ற தலைப்புப் பெறுவன அனைத்தும் உரை இலக்கிய (Narrative Poetry) வகையைச் சார்ந்தன. காப்பியப் பெயர், காண்டப் பெயர், காதைத் தலைப்பு இவை அனைத்தும், அவ்வப் பகுதியின் உட்பொருளுக்குப் பொருத்தமுற அமைவதோடு சிற்சில இடங்களில் குறியீட்டுப் பொருளையும் உணர்த்தி நிற்கின்றன. காடுகாண்காதை என்ற மதுரைக்காண்ட முதல் காதையே குறியீட்டுப் பொருளில் கண்ணகி வாழ்வு சுடுகாடாக - அவலமாக மாறப்போவதை விளக்கி நிற்கிறது. இதே போன்று குன்றக்குரவை என்ற வஞ்சிக்காண்டத் தொடக்கக் காதைத் தலைப்பு கண்ணகி கடவுளாகப் போவதைக் குறியீடாகக் காட்டுகிறது.

  2.5.2 சிலப்பதிகாரத்தில் அகநிலைக் கட்டமைப்பு

  காப்பிய அகநிலைக் கட்டமைப்புகளில் வருணனைக் கூறுகள், நிகழ்ச்சி விளக்கக் கூறுகள் குறிப்பிடத்தக்கன. வருணனைக் கூறுகளாக மலை, கடல், நாடு, வளநகர், சூரியன், சந்திரன் ஆகிய இருசுடர்த் தோற்றம் முதலானவற்றைத் தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது. இவ்வருணனைக் கூறுகள் பல சிலம்பில் உயர்வு நவிற்சி இன்றி இயல்பாக அமைகின்றன. இந்திரவிழவூரெடுத்த காதை - வளநகர் வருணனை; நாடுகாண் காதை - நாட்டு வருணனை; காட்சிக்காதை - மலை வருணனை; அந்திமாலைச் சிறப்புச்செய் காதை, வேனில்காதை - இருசுடர்த் தோற்றம் பற்றிய பொழுது வருணனைகள்; கடலாடு காதை - கடல் வருணனை. இவ்வருணனைக் கூறுகள் அனைத்தும் காப்பியக் கதை நிகழ்வுகளோடு இணைந்து செல்வதே சிலம்பின் தனிச் சிறப்பாகும். வருணனைக்காகவே ஒரு படலம் அமைத்துச் செய்யும் செயற்கைத் தன்மையைச் சிலம்பில் காண முடியாது.

  அரசியல் நிகழ்வுகளாகத் தண்டியலங்காரம் சுட்டும் மந்திரம், செலவு, தூது, இகல், வெற்றி முதலான பற்றிய விவரிப்புகள் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், வாழ்த்து, வரந்தருகாதைகளில் சிறப்புப் பெறுகின்றன. (மந்திரம் = ஆலோசனை; செலவு = பயணம்; இகல் = பகைமை, போர்) கோவல-கண்ணகியர் திருமணம், மணிமேகலை பிறப்பு, மாதவி-கோவலன் பாடிய கானல்வரி முதலியன இல்வாழ்வியல் நிகழ்வுகளாகச் சிலம்பில் சித்திரிக்கப் பெறுகின்றன.

  காப்பியம் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பயனையும் கூறவேண்டும் என்பது தண்டியலங்கார இலக்கணம். திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் மட்டுமே பேசப்படுவது போலச் சிலம்பிலும் இம்மூன்று மட்டுமே பேசப்படுகின்றன. வடமொழி மரபான வீடுபேறு இங்கு இடம் பெறவில்லை. இது ஒன்றே சிலம்பு தமிழ் அறம், தமிழர் மரபு பற்றிப் பேசுவது என்பதைத் தெளிவுபடுத்தும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:17:41(இந்திய நேரம்)