தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0111-சமூகச் சிந்தனை

  • 4.4 சமூகச் சிந்தனை

    சீவக சிந்தாமணி தமிழ் மரபைச் சாராத காவியம் என்று பலர் ஒதுக்குகின்றனர். அதற்குக் கதை அமைப்பும் கதைக் களங்களுமே காரணம். ஆனால் அங்குப் பேசப்படுகின்ற சமூகம், சமூக உணர்வு முதலானவை தமிழ்ச் சமூக அமைப்பைப் பின்பற்றியனவே. தமிழர் தம் அகப்பாடல்கள் மரபுகள், போர் மரபுகள் முதலானவை இங்கு இடம்பெறுதல் குறிப்பிடத்தக்கது. சமூகத்திலுள்ள பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் திருத்தக்க தேவர் எடுத்துரைக்கிறார்.

    4.4.1 சமூகம்

    சமூகத்தில் திருமண உறவு என்பது மிகவும் முக்கியமானது. திருமணத்தில் எத்தனையோ வகையான நடைமுறைகள், சடங்குகள் முதலானவை நிகழ்கின்றன. பெரிய செல்வந்தர்கள் திருமணம் மிகவும் பொருட்செலவில் சிறப்பாக நடைபெறுவதை இன்று அறிகிறோம்.

    சிந்தாமணியில் பல மணமுறைகளைக் காணுகிறோம். இதில், பலர் வெறுப்படைவதும் உண்டு. ஆனால், எண் குணத்தை அடைந்தான் என்பதையே இத்திருமணங்கள் தத்துவ ரீதியாகப் பேசுகின்றன. இத்திருமணங்களில் சோதிடக் கணிப்பு சிறப்பிடம் பெறுகிறது. கோவிந்தை மணம், ஆயர்குல மரபுப்படி ‘பசுவும் தொழுவும் போல்’ இணைந்திருப்பீர் என்ற மகளிர் வாழ்த்துடன் நடக்கிறது. 2000 பசுக்களும் ஏழு பொற்பாவையும் சீதனமாக வழங்கப்படுகின்றன.

    காந்தருவதத்தை மணம் வணிகர் குல மரபிற்கு ஏற்ப, பால்குடங்கள், அரிசி, பயறு, உப்பு வண்டிகள், கனி, கிழங்கு முதலான பொருட்கள் திருமணத்திற்கு வந்து குவிகின்றன. பெருவணிகன் மகள் திருமணம் என்பதால் தீ வலம் வர வேதமுறைப்படி நடக்கிறது.

    குணமாலைக்கு எழுநூறு பணிப்பெண்கள், அணிகலன்கள், ஒருகோடி செம்பொன், ஐந்து மூதூர் பரிசாக வழங்கி மணம் நடைபெறுகிறது.

    திருமணத்தில் நல்ல நாள் குறித்தல், காப்புக் கட்டுதல், யானை மேல் புனித நீர் கொணர்ந்து மணமக்களை நீராட்டுதல், மணநாளை அனைவருக்கும் முரசு அறைந்து அறிவித்தல், பொருட்கொடை அளித்தல் எனப் பல சடங்குகள் நிகழ்வதைச் சிறப்பாகக் காணலாம்.

    குழந்தையின் பிறப்புச் சடங்கும் சிந்தாமணியில் சிறப்பாக நடைபெறுவதைக் காணுகிறபோது அக்காலச் சமூகத்தையே - சமூக நடைமுறையையே பார்க்கிறோம். சீவகனுக்குக் குழந்தை பிறந்தபோது அரசமுறைப்படி, வரி ஒழிப்பு, சிறைப்பட்டோரை விடுதலை செய்தல், பொருட்கொடை அளித்தல், ஆடை அணிகலன், பண்டங்கள் முதலான வழங்குதல் முதலான சடங்குகள் 7 நாள் வரை நிகழ்கின்றன. புலவர்கள் பெருமங்கலம் பாடுதல், முறைப்படி குழந்தைக்கு முன்னோர்களின் பெயர்களைச் சூட்டுதல் முதலானவை நடைபெறுவதாகச் சிந்தாமணி குறிப்பிடும் செய்தி இன்றும் நடைமுறையில் இருப்பதைக் காண்கிறோம் அன்றோ?

    இவையன்றி, சீவக சிந்தாமணி விருச்சி கேட்டல், சகுனம் பார்த்தல், கனவில் நம்பிக்கை முதலான சமூக நம்பிக்கைகள் பற்றியும் விருந்தோம்பல் முறை பற்றியும் சிறப்பாகப் பேசுகிறது. உணவு உண்ட பிறகு எவ்வாறு வாய் கழுவ வேண்டும் என்பதைக்கூட, ‘சீவகன் மும்முறை வாய்பூசினான் (கழுவினான்)’ என்கிறபோது, காப்பிய ஆசிரியர், சமூக வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்துப் பதிவு செய்திருக்கிறார் என்று தெரிகிறது.

    4.4.2 சமயம்

    சமயம் இல்லாமல், காப்பியம் இல்லை. (‘Without Religion, there is no epic’) என்பார் ஜான் கிளார்க். இந்த வகையில் தமிழ்க் காப்பியங்கள் அனைத்திலுமே சமயச் சிந்தனைகள் உண்டு. இன்னும் சொல்லப் போனால் சமயத்தை பரப்பும் நோக்கத்திற்காகவே பல தமிழ்க் காப்பியங்கள் படைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சீவக சிந்தாமணி சமண சமயத்தின் தத்துவங்களையும், சமய வழிபாட்டையும் எடுத்துரைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. என்றாலும் பொதுவான தமிழ்ச் சமூகத்தின் சமய வழிபாடுகளைப் பதிவு செய்யத் தேவர் தவறவில்லை.

    அருகன் வழிபாடு கடவுள் வாழ்த்திலேயே தொடங்குகிறது. அருகனை வழிபடுகிறபோது பிரமன், மால், சிவன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அரி, அயன், அரன் மூவரும் அருகனே என்பது இவர் கருத்து. வினைப்பயன் நீங்கவும், வீடுபேறு பெறவும், வானுலகு அடையவும் அருக வழிபாடு செய்யப்படுகிறது. அருகன் மலர்க்கமல பாதம் ‘ஏத்தார் வீட்டுலகம் நண்ணார்’ என வழிபாட்டின் நோக்கம் சுட்டிக் காட்டப்படுகிறது. அருகன் பாதம் சேர்ந்தால் நன்மை அடையலாம் என்கிறார் காப்பிய ஆசிரியர்.

    சமயச் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது ஊழ்வினை. இது சிந்தாமணியில் சிறப்பாகவே பேசப்படுகிறது. சீவகன் எட்டுப் பெண்களை மணந்து பின் அவர்களைப் பிரிந்து செல்வதற்கு ஊழ்வினையையே காரணம் காட்டுகிறார் ஆசிரியர். ‘வாழ்வுப் பயிருக்கு நோய் செய்வன தீவினையாகிய விலங்கு’ என்றும், ‘வினையது விளைவின் வந்த வீவரும் (நீக்க முடியாது) துன்பம்’ என்றும் வினைக்கோட்பாடு பலவிடங்களில் சுட்டப்படுகிறது. விசயை உற்ற துன்பத்திற்கும்,

    உம்மை நின்றதொர் ஊழ்வினை உண்மையால்
    இம்மை இவ்இடர் உற்றனள்

    (உம்மை = முற்பிறப்பு; இம்மை = இப்பிறப்பு)

    என ஊழ்வினையே காரணம் என்கிறார் தேவர்.

    சமய நம்பிக்கைகளில் குறிப்பிடத்தக்க மற்றொன்று மறுபிறப்புக் கோட்பாடு. இதில் முற்பிறப்பும் அடங்கும். சீவகன் முற்பிறப்பில் அசோதரனாகப் பிறந்தவன்; சீவகன் தேவியர் தேவருலகில் இந்திரராய்ப் பிறந்தனர். நந்தட்டன் தேவனாகப் பிறந்தான் எனச் சமண சமய பிறப்புக் கோட்பாடு அமைகின்றது. இளமை, செல்வம், யாக்கை பற்றிய நிலையாமைக் கோட்பாடும் சிந்தாமணியின் சமயச் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்கது. தேன், ஊன் உண்ணாமை பற்றிப் பேசுகிறது. சிந்தாமணியில் ஓரிடத்தும் கூட ‘ஊன் உணவு’ பற்றிய பேச்சே இல்லை. நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் முதலான சமண அறம் தெளிவுபடுத்தப்படுகிறது. இங்ஙனம் சிந்தாமணி தரும் சமயச் சிந்தனை. சமண சமயச் சார்புடையதாகவே அமைகின்றது.

    4.4.3 அரசியல்

    சிந்தாமணியின் கதைப் பின்னணி அரசியல் சார்ந்தது ஆலின் அரசு சார்ந்த கருத்துகள் சிறப்பிடம் பெறுகின்றன. கட்டியங்காரன் அரசன் சச்சந்தனைக் கொன்று தானே அரசனாக ஆசை கொள்கிறான். அவனுக்கு எழுந்த ஆசை தவறானது என்பதை எடுத்துரைக்கிறான் தருமதத்தன். இங்குப் பல நீதிமுறைகளை, அரசனது இயல்பினை, அரசனுக்குப் பிழை செய்வோர் அடையும் கதியினைத் தொகுத்து உரைக்கிறான். இதோ சில:

    தன்னை ஆக்கிய அரசனைக் கொல்வான் குலமும் திருவும் கெடும். மன்னன் உறங்கினாலும் அவன் ஒளி உலகைக் காக்கும். தேவர்கள் விழித்திருந்தாலும் அவர்களைப் போற்றும் உலகத்தாரைக் காக்க இயலார். எனவே தேவரின் உயர்ந்தவர் மன்னர். நண்பர்களை வஞ்சித்தவர், பிறன்மனை நாடியவர், உயிர்க்கொலை செய்து ஊன் உண்பவர் ஆகியோர் இப்பிறப்பில் குட்டநோயும், மறுபிறப்பில் நரகமும் அடைவர். கணவனை விட்டு வேறு ஒருவனை நாடியவள், மனைவியை நேசிக்காதவன், பெற்றோரைப் பேணி பாதுகாக்கத் தவறியோர் கொடுநோய்க்கு ஆளாவர். நிலவிலுள்ள மறு நிலவு தேயத் தேயும்; அது வளர வளரும். அதுபோல அரசனொடு பொருந்தி, அவனொடு தேய்ந்து ஒழுகும் ஒழுக்கம் இருளை ஓட்டும் மதிபோலப் பழியை நீக்கும்; புகழை ஆக்கும். அரசன் தன் செங்கோன்மை பிறழ்வானாயின் கோள்கள் நிலைகுலையும்; இரவு நேரம் குறைந்து பகல் அதிகரிக்கும்; மழை சுருங்கும்; நிலத்தில் விளைச்சல் குறையும்; பசி மிகும்; மகளிர் கற்பு அழியும்; அறச்சாலைகள் அழியும் என்கிறான்.

    இதே போன்று சீவகனுக்கு, அவன் தாய் விசயை கூறும் அரச நீதியும் இங்குக் குறிப்பிடத்தக்கது. ‘நீதியால் மக்களிடம் வரி பெறல் வேண்டும். பழம்பகையை நெஞ்சில் நிறுத்த வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பது போலப் பகையை பகை கொண்டு முடிக்க வேண்டும். ஒரு ஒற்றனை மற்றொரு ஒற்று கொண்டு ஆய்தல் வேண்டும். கற்ற அமைச்சரைக் கண் எனப் போற்ற வேண்டும். சுற்றத்தினரைத் திறன் ஆய்ந்து போற்றுதல் வேண்டும். பொருள் மிக ஈட்டுதல் வேண்டும். அது இருந்தால் பெரும்படை வந்து சேரும். அப்படைப் பெருக்கால் நாடு கிடைக்கும். பல வெற்றிகளைப் பெறலாம். அதனால் மதிப்பு மிகும். கல்வி அழகும் உண்டாகும். சிங்கம் நரியை வெல்ல வேண்டுமானால் கூடச் சூழ்ச்சித் திறன் வேண்டும். காட்டில் வாழும் காகம் பகற்பொழுதில் பல கூகைகளை வெல்ல முடியும். சிங்கம் இடன் அறியாது சென்றால் நரியின் வலையில் சிக்கி இறக்க நேரிடலாம். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய எண்ணும் மகளிர்போலச் செயல்படாமல் காலம், இடம் அறிந்து செயல்பட வேண்டும்’ (1919-28) என்கிறாள். இவ்வாறு அரசியல் கருத்துகள் பலவற்றைக் கூறுகிறது சீவகசிந்தாமணி.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:19:35(இந்திய நேரம்)