தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எழுவாய்த் தொடரும், விளித்தொடரும்

  • 3.4 எழுவாய்த் தொடரும், விளித்தொடரும்
     

    முதல் வேற்றுமையும் எட்டாம் வேற்றுமையும் கொண்ட தொடர்களை முறையே எழுவாய்த் தொடர் என்றும், விளித்தொடர் என்றும் கூறுவர்.

    • எழுவாய்த் தொடர்

    எட்டு வேற்றுமைகளில் முதல் வேற்றுமை எனப்படுவது எழுவாய் வேற்றுமை, வேற்றுமைகளுக்குரிய ஐ முதலிய உருபுகள் ஏற்காமல், திரிபில்லாத பெயராய் விளங்குவது எழுவாய் வேற்றுமையாகும். இது வினை, வினா, பெயர் ஆகியவற்றைப் பயனிலையாகப் பெற்று எழுவாய்த் தொடராக வரும். பெயர் மட்டும் தனித்து வரும்பொழுது எழுவாய் ஆகாது. பெயர் தனக்குரிய பயனிலையைக் கொண்டு முடியும் பொழுதே அது எழுவாய் என்னும் தகுதி பெறும் என்பது அறிக.

    (எ.டு.)

    பாரதிதாசன் பாடினார்
    பாரதி வாழ்க

    இத்தொடர்களில் ‘பாரதிதாசன்’ ‘பாரதி’ என்னும் எழுவாய்கள் முறையே ‘பாடினார்’, ‘வாழ்க’ என்னும் வினைமுற்றுகளைப் பயனிலையாகப் பெற்று முடிந்தன.

    (எ.டு.)

    காந்தி தலைவர்
    இவர் பெரியார்

    'இத்தொடர்களில் ‘காந்தி’, ‘இவர்’ என்னும் எழுவாய்கள், முறையே ‘தலைவர்’, பெரியார்’ என்னும் பெயர்களைப் பயனிலையாகக் கொண்டு முடிந்தன.

    (எ.டு.)

    அவன் யார்?
    மலர் யாது?

    இத்தொடர்களில் ‘அவன்’, ‘மலர்’ என்னும் எழுவாய்கள், முறையே ‘யார்’, ‘யாது’ என்னும் வினாப்பெயர்களைப் பயனிலையாகக்கொண்டு முடிந்தன.'

    மேலே காட்டிய எழுவாய்ப் பெயர்கள் வேற்றுமை உருபுகளை ஏற்காமலும், தம் பெயரில் எவ்வித் திரிபும் இல்லாமலும் பயனிலைகளைப் பெற்று வந்துள்ளமை காண்க.

    • விளித் தொடர்

    எட்டாம் வேற்றுமை, ‘விளி வேற்றுமை’ எனப்படும். இவ்விளி வேற்றுமையினுடைய உருபுகள், படர்க்கைப் பெயரின் ஈற்றில் மிகுதலும், திரிதலும், கெடுதலும், இயல்பாதலும், ஈற்றயல் எழுத்துத் திரிதலுமாம்.

    இது ஏவல் வினையைக் கொண்டு முடியும். விளியும் ஏவல்வினையும் சேர்ந்த தொடர் விளித் தொடர் எனப்படும்.

    விளி வேற்றுமையின் உருபுகள், தம்மையேற்ற பெயர்ப்பொருளை, முன்னிலையில் அழைக்கப்படும் (விளிக்கப்படும்) பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட விளிக்கப்படும் பொருளே இவ்வுருபுகளின் பொருளாகும்.

    (எ.டு. )

    கம்பனே, கேளாய்
    -
    கம்பன் என்பதன் ஈறு ஏகாரம் பெற்று வந்துள்ளது.
    -
    மிகுதல்

    தம்பீ, கேளாய்

    -

    தம்பி என்பதன் ஈறு ஈகாரமாயிற்று.

    -

    திரிதல்

    செல்வ, கேளாய்

    -

    செல்வன் என்பதன் ஈறு போயிற்று

    -

    கெடுதல்

    அம்ம கேளாய்

    -

    இயல்பு

    முருகா கேளாய்
    -
    முருகன் என்பதன் ஈற்று எழுத்துக் கெட்டு ஈற்றயல் எழுத்து க - கா ஆயிற்று - அயல் திரிதல்
     

    எட்டன் உருபே எய்துபெயர் ஈற்றின்
    திரிபு குன்றல் மிகுதல் இயல்புஅயல்
    திரிபும் ஆம்பொருள் படர்க்கை யோரைத்
    தன்முக மாகத் தான்அழைப் பதுவே       (நன்னூல் : 303)

புதுப்பிக்கபட்ட நாள் : 02-11-2019 12:47:50(இந்திய நேரம்)