தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திணை

  • 6.1 திணை
     

    திணை உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும். மக்கள், தேவர், நரகர் முதலியோர் ஆறறிவு படைத்தவர் ஆதலின் அவர் உயர்திணை ஆவர். இவர்களைத் தவிர்த்த உயிர் உள்ளவையும் இல்லாதவையும் அஃறிணையாகும்.

    மக்கள் தேவர் நரகர் உயர்திணை
    மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை
                                     (நன்னூல் :261)

    சொற்றொடர்களில் ஒரு திணைக்கு உரிய பெயரைப் பயன்படுத்துகிற போது அத்திணைக்கு உரிய வினையைக் கொண்டுதான் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்காவிட்டால் அது திணை வழுவாகும்.

    (எ.டு.)   அப்பா வந்தது.

    இச்சொற்றொடரில் ‘அப்பா' என்னும் பெயர் உயர்திணைக்கு உரியது. இச்சொல் எழுவாயாக வந்துள்ளது. ‘வந்தது' என்பது வினைப் பயனிலை. இஃது அஃறிணைச் சொல், அப்பா என்னும் உயர்திணை எழுவாய்க்கு, முடிக்கும் சொல்லாக ‘வந்தது' இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயர்திணை எழுவாய்க்கு அஃறிணையும், அஃறிணை எழுவாய்க்கு உயர்திணையும் பயனிலையாக வருவது வழுவாகும்.

    ஒரு திணைக்கு உரியதாக வரும் பெயருக்கு ஏற்றாற் போல அதன் முடிக்கும் சொல்லாக வரும் வினையும் அத்திணைக்கு உரியதாக அமைவது திணை வழாநிலையாகும். 

    (எ.டு.)

    கண்ணகி பாடினாள்
    மாடு ஓடியது

    முதல் தொடரில் ‘கண்ணகி' என்னும் உயர்திணைப்பெயர், ‘பாடினாள்' என்னும் உயர்திணைக்குரிய வினைமுற்றைக் கொண்டு முடிந்தது. இரண்டாவது தொடரில் ‘மாடு' என்னும் அஃறிணைப் பெயர் ‘ஓடியது' என்னும் அஃறிணை வினைமுற்றைக் கொண்டு முடிந்தது. இவ்விருதொடர்களும் இலக்கண முறைக்கு ஏற்றதாக உள்ளமையால் வழாநிலைத் தொடர்களாகும்.

    6.1.3 திணை வழுவமைதி
     

    உயர்திணைப் பெயரை அஃறிணைப் பெயர் சார்ந்து வரும் பொழுதும், உயர்திணைப் பெயரோடு அஃறிணைப் பெயரும் எழுவாயாக வரும் பொழுதும், முடிக்கும் சொல்லை எத்திணையில் அமைப்பது என்னும் சிக்கல் எழுகிறது. இங்கெல்லாம் சிறப்பு, மிகுதி, இழிவு என்னும் காரணங்களால் ஏதேனும் ஒரு திணையின் முடிபை அத்தொடர்களுக்கு அளிப்பதால் இவை திணை வழுவமைதி ஆகின்றன.

    (எ.டு)

    தம்பி பொன் பெரியது
    தம்பி நாடு பெரியது
    தம்பி வாழ்நாள் பெரியது
    தம்பி மூக்குக் கூரியது
    தம்பி நன்மை பெரியது
    தம்பி நடிப்புப் பெரியது

    என வருதலே திணை வழாநிலையாகும். ஆனால் இதற்கு மாறாக இலக்கியங்களிலும் மக்கள் வழக்கிலும் கீழே குறிப்பிட்டவாறு காணப்படுவதால் வழுவமைதியாயிற்று.

    (எ.டு)

    தம்பி பொன் பெரியவன்
    தம்பி நாடு பெரியவன்
    தம்பி வாழ்நாள் பெரியவன்
    தம்பி மூக்குக் கூரியன்
    தம்பி நன்மை பெரியவன்
    தம்பி நடிப்புப் பெரியவன்

    இந்த ஆறு தொடர்களில் ‘தம்பி’ என்னும் உயர்திணைப் பெயரைத் தொடர்ந்து ‘பொன், நாடு, வாழ்நாள், மூக்கு, நன்மை, நடிப்பு’ என்னும் பொருள் முதலிய ஆறு அஃறிணைப்பெயர்கள் சார்ந்து வந்தமையால், அத்தொடர்கள், அவ்வஃறிணைப் பெயர்களுக்கு உரிய முடிக்கும் சொல் பெறாமல் தம்பி என்னும் உயர்திணைக்கு உரிய முடிக்கும் சொல் பெற்று முடிந்தன. இவ்வாறு வருவது திணை வழுவமைதி ஆகும்.

    இவ்வாறு உயர்திணைக்கு உரிய சொற்களைத் தொடர்ந்து அஃறிணையின் பொருட் பெயர் முதலிய ஆறு பெயர்களும் சார்ந்து வருமானால் உயர்திணை முடிக்கும் சொல்லாகும் என இத்திணை வழுவமைதி உணர்த்துகிறது.

    உயர்திணை தொடர்ந்த பொருள்முதல் ஆறும்
    அதனொடு சார்த்தின் அத்திணை முடிபின

    (நன்னூல் : 377)

    உயர்திணைப் பெயரோடு அஃறிணைப் பெயரும் எழுவாயாக வரும் பொழுது வினைமுடிபை எத்திணையில் அமைப்பது என்னும் சிக்கல் ஏற்படுகிறது.

    (எ.டு.)   முகிலனும் நாயும் விளையாடினர்.

    இந்தத் தொடரில் ‘முகிலன்’ உயர்திணைப் பெயர் ; ‘நாய்’ அஃறிணைப் பெயர். இவ்விரண்டு பெயர்களும் எழுவாயாக வந்துள்ளன. எழுவாய்களின் செயலான ‘விளையாடுதல்’ என்பதை உயர்திணை வினைமுற்றில் (விளையாடினர்) தருவதா? அன்றி அஃறிணை வினைமுற்றில் (விளையாடின) தருவதா? என ஐயம் ஏற்படுகிறது. இந்நிலையில் சிறப்பு என்னும் காரணத்தால், உயர்திணை, அஃறிணை என்னும் இருதிணையில், உயர்திணை சிறப்புடையது ஆதலின், விளையாடினர் என்ற உயர்திணைப் பலர்பால் வினைமுற்று கொடுக்கப்பட்டது.

    சிறப்பின் காரணமாக அன்றி மிகுதி, இழிவு காரணமாகவும் முடிக்கும் சொல்லின் திணை மாறிவரும். 

    (எ.டு.)

    யானை, குதிரை, தேர், காலாள் படை வந்தன - மிகுதி
    முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா - இழிவு

    முதல் தொடரில் காலாள் என உயர்திணை இடம் பெறினும் ஏனைய படைகள் மூன்று அஃறிணையில் இடம் பெறுவதால் மிகுதி கருதி அஃறிணை முடிவு பெற்றது.

    இரண்டாம் தொடரில் மூர்க்கன் என்னும் உயர்திணை வரினும் இழிவு கருதி அஃறிணை முடிவு பெற்றது.

    திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும்
    மிகவினும் இழிபினும் ஒருமுடி பினவே

    (நன்னூல் : 378)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:13:34(இந்திய நேரம்)