Primary tabs
-
4.3 மணிமேகலை
தமிழில் வழங்கும் ஐம்பெருங்காப்பியங்களுள் இது இரண்டாவது. சிலப்பதிகாரத் தலைவன் கோவலனுக்கு மாதவியிடத்துப் பிறந்தவளான மணிமேகலையைக் காவியத் தலைவியாகக் கொண்டமையால், அவள் பெயராலேயே இந்நூலும் அறியப்படுகிறது. மணிமேகலை துறவு என்பது ஆசிரியர் இட்ட பெயர் என்று கூறுவர். இது சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் பாத்திரங்கள் பல இதிலும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தின் கதையென்பதால், சிலப்பதிகார சாரத்தையும் இதனையும் இணைத்து இரட்டைக் காப்பியங்கள் என வழங்குவர்.
இதனை இயற்றியவர் வளம்கெழு கூலவாணிகன் சாத்தன், மதுரைக் கூல வாணிகன் சாத்தன், சீத்தலைச் சாத்தன் என்று பலவாறு கூறப்படுகிறார். அகநானூறு, நற்றிணை, புறநானூறு ஆகிய நூல்களில் சில செய்யுட்களை இயற்றியவரும் கூலவாணிகன் சாத்தன் எனப்படுகிறார். ஆயினும் இவர் மணிமேகலை ஆசிரியரிலிருந்து வேறானவர் என்பர்.
சீத்தலை என்னும் ஊரினரான இவர், மதுரையில் பதினெண் கூலங்களை விற்று வாழ்ந்தார் (கூலம்-தானியம்) என்பது பற்றிக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனப்பட்டார். பிழையான செய்யுட்களைக் கேட்டபோதெல்லாம் எழுத்தாணியால் குத்திக் கொண்டமையால், அவர் தலையில் எப்பொழுதும் சீழ் நிறைந்திருந்தது என்றும், அதனால் அவர் சீத்தலை என்ற அடைமொழி பெற்றார் என்றும் கூறுவர். இது தவறான கருத்தாகும்.
இவர் இளங்கோவடிகளின் நண்பர் என்றும், அவர் படைத்த சிலம்பை முதலில் கேட்டவர் இவரே என்றும் கூறுவர். அவ்வாறே, இவருடைய இக்காவியத்தை இளங்கோவடிகள் கேட்டார் என்பர். இதனை மறுப்பார் உளர்.
மணிமேகலை ‘விழாவறை காதை’ முதல் ‘பவத்திறம் அறுக எனப் பாவைநோற்ற காதை’ முடிய முப்பது காதைகள் கொண்டது. இது சிலப்பதிகாரம் போல் பல செய்யுள் வகைகளைக் கொண்டதன்று. இது முழுவதும் அகவற்பாவாலான காவியமாகும்.
இதற்கும் சிலப்பதிகாரத்திற்கு உள்ளவாறே ஒரு பதிகம் அமைந்துள்ளது. இது, கதை நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறுகிறது. மணிமேகலை துறவு என்ற பெயர் இதில்தான் காணப்படுகிறது.
கோவலன் மதுரை மன்னனால் கொல்லப்பட்ட செய்தி கேட்ட மாதவி, உலக வாழ்வை வெறுத்தாள்; புத்தர் நெறியைத் தழுவினாள். மேலும் அழகும் இளமையும் கொண்ட தன் மகள் மணிமேலையையும் துறவியாக்கினாள். புகாரில் இந்திர விழா வந்தது. புத்தபகவானை வழிபட மலர் பறிக்க மணிமேகலையும் அவள் தோழி சுதமதியும் உவ வனத்திற்குச் (பூங்காவிற்குச்) சென்றபோது சோழ இளவரசன் உதயகுமரன் அவளைப் பின் தொடர்ந்தான். மணிமேகலை ஒரு பளிங்கு அறையுள் புகுந்து தப்புகிறாள்.
இந்திரவிழாக் காண வந்த மணிமேகலா தெய்வம் அவளை வான்வழியே எடுத்துச் செல்கிறது. மணிபல்லவத் தீவில் அவளுக்குப் பழம்பிறப்பை உணர்த்துகிறது. தீவதிலகை என்பவள் அறிவுரைப்படி மணிமேகலை அமுதசுரபி என்னும் அற்புதப் பாத்திரத்தைப் பெற்று மீண்டும் புகார் நகருக்கு வருகிறாள். தன் தாயுடனும், சுதமதியுடனும் அறவண அடிகளைச் சந்திக்கிறாள். அவர் அவளுக்கு ஆபுத்திரன் கதையை எடுத்துரைக்கிறார். பசிப்பிணி நீக்கும் அறத்தைச் செய்யுமாறு அறிவுறுத்துகின்றார். காயசண்டிகை என்பாள் அறிவுரைப்படி ஆதிரையிடம் முதற் பிச்சை பெறுகிறாள்.
ஆதரவு அற்றவர்களுக்கும், காலில்லார், கண்ணில்லார், காது கேளாதார் முதலியோர்க்கும் உணவளிக்கும் அறப்பணியைத் தொடர்கிறாள். உலக அறவி என்ற இடத்திற்கு அவள் சென்றபொழுது, உதயகுமரன் அவளைத் தொடர்கிறான். தன் மந்திர வலிமையால் காயசண்டிகை வடிவத்தை அவள் மேற்கொள்கின்றாள். சிறைச்சாலைக் கைதிகட்கு உணவூட்டுகிறாள். அரசன் இவள் அறிவுரை கேட்டுச் சிறையை அறச்சாலை ஆக்குகிறான்.
காயசண்டிகை வடிவில் இருப்பவள் மணிமேகலையே என்று உணர்ந்த உதயகுமரன் அவளை மீண்டும் காணப் போனபோது, அவள் அவனுக்கு அறிவுரை கூறுகிறாள். அப்போது காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் என்பவன் கைவாளால் உதயகுமரன் இறக்கிறான். மணிமேலை சிறை செய்யப்பட்டு பல துன்பங்கட்கு ஆளாக்கப்படுகிறாள். அரசமாதேவி செய்த தீமைகளையெல்லாம் தன் தவ வலிமையால் வென்று அவளுக்கு அறிவுரை கூறுகின்றாள். எல்லா உயிர்க்கும் அன்பு செய்யுமாறு அவளுக்கு அறிவுறுத்துகின்றாள்.
பின்னர் ஆபுத்திரன் அரசனாக ஆளும் நாகபுரம் செல்கிறாள். அவனுடன் மணிபல்லவத்திற்கு வருகிறாள். ஓர் ஆண் வடிவம் தாங்குகின்றாள். பல சமயவாதிகளிடம் அவரவர் சமயத் தத்துவங்களையும் கேட்டறிகின்றாள். கச்சி மாநகரில் இருந்த அறவண அடிகளைத் தன் தாயுடன் அடைகிறாள்; அவரை வணங்குகின்றாள். அவர் அவளுக்குப் புத்த தருமத்தைப் போதித்தார். இறுதியாகத் தவ நெறியை மேற்கொண்டு, தன் பிறவிப் பிணி நீங்குமாறு முயல்கின்றாள்.
இக்காவியத்தில் ஆதிரை, ஆபுத்திரன், சுதமதி, விசாகை, மருதி முதலானோர் பற்றிய கிளைக்கதைகளும் உண்டு. இவை மூலக்கதையோடு தொடர்புற்றுக் கதைக்குச் சுவையூட்டுகின்றன.