தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.5 தொகுப்புரை

  • 4.5 தொகுப்புரை

    இதுவரை கூறிய செய்திகளை இங்குத் தொகுத்துக் காண்போம்.

    சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம். அதற்கு அடுத்து இடம் பெறுவது மணிமேகலையாகும். கதைத் தொடர்புடைய இவை இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன. இவற்றை யாத்த இளங்கோவடிகளும் சாத்தனாரும் நண்பர்கள் என்பர். ஒருவர் நூலை மற்றவர் கேட்டதாகக் கூறுவர். இவர்கள் வாழ்ந்த காலம் சங்க காலமே என்ற கருத்து நிலவினாலும், இவர்கள் சற்றுப் பின்னால் வாழ்ந்தவர் என்று பலர் கருகின்றனர். இதில் கிளைக்கதைகள் சில இடம் பெற்றுள்ளன.

    சிலப்பதிகாரம் குடிமக்கட்குச் சிறப்புத் தந்த காப்பியம். அது இயல் இசை, நாடகம் என்ற மூன்றையும் சிறப்பித்த முத்தமிழ்க் காப்பியம். தமிழகத்தை முழுமையாகப் பார்க்கும் தமிழ்த் தேசியக் காப்பியமாகவும் இது விளங்கும். சமயப் பொதுமை போற்றுவதாகவும், வரலாற்றுக் காப்பியமாகவும், பத்தினியைப் போற்றும் பெண்மைக் காப்பியமாகவும் தமிழர் பண்பாட்டின் பெட்டகமாகவும் இது விளங்குகின்றது.

    மணிமேகலை மாதவி பெற்ற மகள். அவள் துறவைக் கூறும் மணிமேகலைக் காப்பியம் தமிழின் முதல் சமயக் காப்பியமாகும். மணிமேகலை, சிலப்பதிகாரம் தோன்றிய காலத்ததாகவே கருதப்படுகிறது. மணிமேகலை 30 காதைகள் கொண்டது. இதில் வேறு பலரின் வரலாறுகளும் அடங்கும். அக்காலத்தில் இருந்த சமயங்களின் தத்துவங்களை உணர இந்நூல் உதவுகிறது. புத்தரின் பெருமைகள் இதில் பரவலாகச் சொல்லப்பட்டுள்ளன. யாக்கை, செல்வம், இளமை முதலிய நிலையாமைகளைச் சொல்லி அறத்தை வற்புறுத்துகிறார் சாத்தனார். பசிப்பிணியின் கொடுமையையும், அதனைப் போக்குவார் பெருமையையும் இது கூறுகிறது. மது ஒழித்தலையும், ஊன் உண்டலைத் தவிர்த்தலையும் இது வற்புறுத்துகிறது. சாத்தனார் சிறந்த கற்பனை வளம் கொண்டவர். மணிமேகலை, பழந்தமிழர்களின் பண்பாட்டை அறிவிப்பதில் சிறந்து நிற்கிறது.

    1.

    மணிமேகலைக்கு வழங்கும் இன்னொரு பெயர் யாது?

    2.

    மணிமேகலையின் தோழி பெயர் யாது?

    3.

    மணிமேகலை முதலில் பிச்சை ஏற்றது யாரிடம்?

    4.

    காயசண்டிகையின் கணவன் பெயர் யாது?

    5.

    மணிமேகலை தன் பழம்பிறப்பை உணர்ந்தது எந்த நாட்டில்?

    6.

    மணிமேகலை மலர் பறிக்கச் சென்ற வனத்தின் பெயர் யாது?

    7.

    மணிமேகலைக்குப் புத்த தருமத்தைப் போதித்தவர் யார்?

    8.

    மணிமேகலையைப் பின் தொடர்ந்த அரச குமாரன் யார்?

    9.

    உதயகுமரன் யாருடைய கைவாளால் இறந்துபடுகிறான்?

    10.

    ஆபுத்திரன் வரலாற்றை மணிமேகலைக்குச் சொன்னவர் யார்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 16:56:56(இந்திய நேரம்)