Primary tabs
- 6.2 பொய்கையாழ்வார்
முதலாழ்வார் மூவருள்ளும் முதலில் வைத்துப் போற்றப்படுபவர் பொய்கைஆழ்வார். சங்க காலத்தில் வாழ்ந்து சேரமான் புகழ்பாடிய பொய்கையாரினும், பின்னர்க் களவழி நாற்பது பாடிய பொய்கையாரினும், இப்பொய்கை ஆழ்வார் வேறானவர். இவர் காஞ்சிமாநகரில் உள்ள திருவெஃகா என்ற வைணவத் திருப்பதியின் வடபகுதியில் இருந்த ஒரு பொய்கையில், ஒரு பொற்றாமரை மலரில் திருஅவதாரம் செய்தார் என்கிறது வைணவ மரபு. இவரைத் திருமால் ஏந்திய படைக்கலங்களுள் பாஞ்சசந்நியம் (திருமால் கைச்சங்கின் பெயர்) என்பதன் அமிசம் (ஒருகூறு) என்று வைணவர் கருதி வருகின்றனர். ஒரு பொய்கையில் தோன்றியவராதலால் பொய்கையாழ்வார் எனப்பட்டார்.
பொய்கையார், திருக்கோவலூரில், திருமாலின் திருவருளால் ஏற்பட்ட இருளில் இருந்து விடுதலை பெறுவதற்காக வையம் தகளியா எனத் தொடங்கி இயற்றியருளிய 100 வெண்பாக்களைக் கொண்டது முதல் திருவந்தாதி என்று பெயர் பெற்றது. அந்தாதித்தொடையில் இயற்றப்பட்ட மிகப் பழைய பிரபந்தங்களுள் இதுவும் ஒன்றாகும்.
ஆழ்வார் இறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும், அழிவற்ற மெய்ஞ்ஞானமாகவும், ஞானமுடையார் செய்யும் வேள்வியாகவும், அறமாகவும் கண்டு மகிழ்கின்றார்.
இங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை அவர். இறைவன் தகுதிக்கு ஏற்பப் பெரிய விளக்கேற்ற உள்ளம் கொண்டார். எனவே இம்மண்ணுலகத்தையே தகளியாகக் கொண்டார்; அதனை வளைத்துக் கிடக்கும் பெரிய கடல்நீரையே நெய்யாக வார்த்தார். அக்கடற்பரப்பின் ஒரு விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும் உதயஞாயிற்றையே (சூரியன்) அதிலேற்றும் சுடராக்கி ஞான விளக்கேற்றி வழிபட்டார். அது அகவிருள் அகற்றும் விளக்காதலால், உலக மாயையையே உண்மையெனக் கருதியிருக்கும் ஆன்மாக்களுக்கு வீடுபேறளிக்கும் என்பது அவர் நம்பிக்கையாகும்.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று(பொய்கையார்)
(வையம் = மண்ணுலகம்; தகளி = அகல்; வார் = நீண்ட; வெய்ய = வெம்மையான; சுடர்ஆழி = ஒளிமிக்க சக்கரப்படை; இடர்ஆழி = துன்பமாகிய கடல்)
திருமாலின் மேலாம் தன்மையை (பரத்துவம்) விளக்குவதே ஆழ்வார்களின் நோக்கம். ஆயிரம் தெய்வங்களை மக்கள் வணங்கினாலும், அத்தெய்வங்களுக்குள் முதன்மையானோர் சிவன், திருமால், பிரமன் ஆகிய மூவருமே என்றும், அவருள்ளும் முதன்மையானவர் கடல் நிறம் கொண்ட திருமாலே என்றும் உறுதிபடப் பேசுகிறார், இந்த ஆழ்வார்.
முதல் ஆவார் மூவரே அம் மூவருள்ளும்
முதலாவான் மூரிநீர் வண்ணன் (15)(மூரிநீர் = கடல்)
என்பார் அவர்.
சிவபெருமானே மேலானவர் என்பார்க்கு, அச்சிவபெருமானும் திருமாலேயன்றி வேறாகார் என்கின்றார் அரன் என்பது, நாராயணனுக்கு அமைந்த இன்னொரு பெயர் என்கின்றார். தாம் வணங்கும் திருமாலுக்குப் பெயர் இரண்டு ஆனதுபோல், ஊர்திகளும், நூல்களும், கோயில்களும், செயல்களும், கையிலேந்திய படைக்கருவிகளும், மேனியின் நிறங்களும் இரண்டு இரண்டானவை என்கின்றார்.
ஆழ்வார் காலத்தில் இறைவழிபாடு எவ்வாறு நடந்தது என்பதனை முதல் திருவந்தாதி நன்கு விளக்கியுள்ளது.
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தாம் தொழா நிற்பார் தமர் (43)மலரும், நீரும், நறும்புகையும், ஒளிவிளக்கும் கொண்டு வழிபட்டும் வேள்விகள் செய்தும், மந்திரம் சொல்லியும் பிறவாறும் தொழுதனர் என்பது அவர் தம் பாடல்களால் அறியலாம்.
திருமாலை வணங்குவார் அடையும் பேறுகள் இன்னின்ன என்பதனைப் பொய்கைஆழ்வார் நன்கு எடுத்து உரைத்துள்ளார்.
திருமாலின் அடியவர், எத்தகைய தீவினைகளைச் செய்தவராயினும், அவர்களைத் தண்டிக்க எமன் அஞ்சி விலகிப் போவான் என்கின்றார்.
அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் - நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார்..... (55)(தமர் = அடியார்; நமன் = எமன்)
என்பது ஆழ்வார் கூற்றாகும்.
திருமாலின் அடியவர்களை அடைந்த தீவினைகள், துன்பங்கள், பாவங்கள் ஆகிய அனைத்தும் ஒழிந்து போகும் என்று உறுதியளிக்கின்றார்.
1.ஆழ்வார் என்ற சொல்லின் பொருள் யாது?
2.ஆழ்வார்கள் மொத்தம் எத்துணை பேர்?
3.முதல் ஆழ்வார் மூவரின் பெயர்கள் யாவை?
4.மூன்று ஆழ்வார்களும் சந்தித்த இடம் யாது?
5.பொய்கையாழ்வார் திருக்கோவலூரில் படுத்து உறங்கிய இடம் எது?
6.மண்ணுலகையே தகளியாக்கிக் கடலை நெய்யாக்கி விளக்கேற்றியவர் யார்?
7.அன்பைத் தகளியாக்கி விளக்கு ஏற்றியவர் யார்?
8.மூன்றாம் திருவந்தாதியின் ஆசிரியர் யார்?