Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
4.
தமிழ் நாடக வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுக.
18ஆம் நூற்றாண்டில் வடநாட்டில் இருந்து வந்த மராத்தி, பார்சி நாடகக் கம்பெனிகளால் தமிழில் நாடகக் கலையானது மலர்ச்சி பெற்றது. முதன் முதலில் மேடையில் சமூக நாடகங்கள் நடிக்கப் பெற்றன. பாட்டு, புராணக்கதை, சாதி, விடுதலை என்ற பல்வேறு அம்சங்களால் சிறப்புப் பெற்ற நாடகங்கள் 20ஆம் நூற்றாண்டில் தோன்றின. என்றாலும் நாடக நடிகர்கள் மக்கள் மத்தியில் இழிவாகவே மதிக்கப் பெற்றனர். அக்குறையைப் போக்கி, தமிழ் நாடகத்திற்குப் புத்துயிர் அளித்தவர் சங்கரதாஸ் சுவாமிகள்.
ஆங்கில அரசால் ராவ் பகதூர் பட்டம் பெற்ற பம்மல் சம்பந்த முதலியார் சுகுண விலாச சபை என்ற அமெச்சூர் நாடக மன்றம் நிறுவி நடிப்புக் கலையை வளர்த்தார். தொடக்கத்தில் பிறமொழி நாடகங்களைத் தழுவியே நாடகம் படைத்தார். மொத்தம் 94 நாடகங்களைப் படைத்துள்ளார். அவற்றுள் புகழ் பெற்றவை சபாபதி, மனோகரா, இரு நண்பர்கள் முதலியன. சங்கரதாஸ் சுவாமிகட்கு அடுத்தபடியாக நாடகக் கலைக்கு உயர்வும் மதிப்பும் தேடித் தந்தவர் இவரே. கூத்தாடிகளைக் கலைஞர்கள் என்று மக்கள் மதித்தது இவர் செய்த புதுமைப் புரட்சிகளால் தான். இந்நாடகக்கலை சுதந்திரப் போராட்டக் காலத்தில் மேலும் வீறு பெற்றது. மக்களைத் தூண்டும் மகத்தான சக்தியாக மாறியது.