தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-6:4-புதுமைப் பெண்

  • 6.4 புதுமைப் பெண்

    பாரதியார் தம் எதிர்பார்ப்பு, ஏக்கம், கனவு, கற்பனை, குறிக்கோள், வேட்கை ஆகிய அனைத்தையும் சம விகிதத்தில் கலந்து உருவாக்கிய ஒரு கற்பனை ஓவியமே 'புதுமைப் பெண்'. தமது கற்பனையில் உருவான 'புதுமைப் பெண்'ணுக்குப் பல்வேறு சிறப்புப் பெயர்களையும் அடைமொழிகளையும் அணிவித்து மகிழ்ந்துள்ளார்: 'மாதரசு', 'பெண்மைத் தெய்வம்', 'செம்மை மாதர்', 'உதய கன்னி', 'வீரப் பெண்', 'இளைய நங்கை' என்பன இவ்வகையில் சிறப்பாகக் குறிக்கத்தக்கவை. ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டும் எனக் காலங்காலமாகப் பேசப்பட்டு வந்த அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் மரபு வழியான குணங்களை அடியோடு மாற்றி, 'நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்' என்று முற்றிலும் புதுமையான முறையில் பாடியுள்ளார் கவியரசர். மேலும், தாம் கனவு காணும் 'புதுமைப் பெண்'ணின் சொற்களும் செய்கைகளும் எத்தகையனவாய் இருக்கும் என்பதையும் அவர் அழகுறச் சுட்டிக் காட்டியுள்ளார்:
     

    ஞான நல்லறம்வீர சுதந்திரம்
    பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.. .

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்.. .

    இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
    யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்து இங்கே
    திலக வாணுதலார் தங்கள் பாரத தேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம்

    (புதுமைப் பெண், செய்யுள் : 4,7,8)

    (திறம்புவது = மாறுபடுவது, தவறுவது; வாணுதலார் = ஒளி பொருந்திய - நெற்றி உடையவர்கள்)

    'அச்சமும் மடமும் நாணும் முந்துறுத்த
    நிச்சமும் பெண்பாற்கு உரிய'

    (தொல், பொருள், களவியல்.நூற்.9)

    (நிச்சமும் - எப்பொழுதும்)

    என்று தொல்காப்பியம் கூறியது. சங்க இலக்கியம்

    வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல் மனையுறை
    மகளிர்க்கு ஆடவர் உயிர்

    (குறுந்தொகை,135)

    (வாள்நுதல் - ஒளி பொருந்திய அழகிய நெற்றியை உடைய).

    என்று பெண்களுக்கு அவர்களது வீட்டையே உறைவிடமாக்கி - உலகமாக்கிப் பாடியது; 'மனையுறை மகளிர்' என்றே பெண்களைச் சுட்டியது. பாரதியாரோ தம் முன்னோர் மொழிந்த இக்கருத்துகளில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டார். 'விலகி வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதை, வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்' என்று பாடினார். பெண்களை வீட்டிற்கு மட்டுமன்றி, நாட்டிற்கும் உரியவர்களாக - நாட்டிற்காக உழைப்பவர்களாக - உயர்த்திப் பாடியுள்ளார். 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?' என்று இருந்த பத்தாம் பசலித்தனமான போக்கினை அடியோடு மாற்ற விரும்பினார். 'உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும், ஓது பற்பல நூல்வகை கற்கவும், பெண்கள் நாற்றிசை நாடுகளுக்கும் செல்ல வேண்டும்' என்று பாடினார். பெண்களின் எழுச்சிக்கும் உயர்ச்சிக்கும் ஏற்ற வழிவகைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

    பாரதியார் படைத்துள்ள 'புதுமைப் பெண்'ணுக்கு வாழ்வைப் பற்றியும் ஒரு தனிப்பட்ட கருத்து உள்ளது. நற்குடிப் பெண்ணுக்குக் கற்பு என்பது இயல்பான ஒரு பண்பு நலன்; இதிலே அவளுக்குக் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால், பெண்ணின் கற்பு நலத்தைக் காக்கிறேன் என்று சொல்லி, அவளுக்குக் கொடுமைகள் பல செய்வதிலும், அவளது அறிவை மழுங்கச் செய்வதிலும் முனையும் ஆணின் செயலில் அவளுக்குச் சற்றும் உடன்பாடு இல்லை.

    குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம்
    கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந்
    நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்

    (புதுமைப் பெண், 5)

    என நறுக்குத் தெறித்தாற் போல் நயம்பட உரைக்கிறாள் அவள். மேலும், அவள் 'அடிமைச் சுருளைத் தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டும்' எனக் கருதுகிறாள்; 'பேரிருளாம் அறியாமையில் அமிழ்ந்து, அவலம் எய்தி, கவலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ள ஆயத்தமாக இருக்கிறாள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆணைப் பற்றிய அவளது பார்வை - பாவனை - தெள்ளத் தெளிவாகவும் மிகத் துல்லியமாகவும் உள்ளது. எல்லா ஆண்களுமே அவளுக்கு எதிரிகள் அல்லர்; தனக்கு எதிராகக் கொடுமை செய்யும் ஆண்களையே அவள் வெறுக்கிறாள்; சாடுகிறாள்; அவர்களிடம் இருந்து விடுதலை பெற்றிட எண்ணுகிறாள். நல்ல ஆணின் துணையோடு - தோழமையோடு - வாழவேண்டும், அவன் போற்றிடும் வண்ணம் வாழ வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு முனைப்பாக உள்ளது.
     

    ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்
    இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ

    (புதுமைப்பெண். 9)

    என அவளது எண்ணத்தினை எடுத்துக் காட்டியுள்ளார் பாரதியார்.

    6.4.1 புதுமைப் பெண் : பாஞ்சாலி

    பாரதியார் படைத்திருக்கும் பாஞ்சாலி, அவர் கனவு கண்ட புதுமைப் பெண்ணின் வடிவம். எனவே தான், தன் கணவன் தன்னைச் சூதாட்டத்தில் பணையப் பொருளாக வைத்தான் என்பதைக் கேள்விப்பட்டதும் பொங்கி எழுகிறாள். தன்னை அழைத்துச் செல்ல வந்த தேர்ப்பாகனிடம் நியாய நுணுக்கங்களைக் கேள்வி ஆக்குகிறாள். பாண்டவர்கள் தம்மை இழந்த பின்னர் என்னைப் பணையம் வைத்தனரா- அல்லது - முதலில் என்னை இழந்து, பின்னர் தம்மைப் பணையம் வைத்தனரா எனக் கேட்கிறாள். தம்மை முன்னரே இழந்திருந்தால், அவர்களுக்குத் திரௌபதியைப் பணையம் வைக்கும் உரிமை இல்லை என்பதால் இவ் விவரத்தைக் கேட்டு வரும்படி சொல்கிறாள் தேர்ப்பாகனிடம்.

    வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம்
    என்னை முன்னே கூறி இழந்தாரா? தம்மையே
    முன்னம் இழந்துமுடித்து என்னைத் தோற்றாரா?
    என்று ஸபையில்இச் செய்தி தெரிந்துவா!

    (பாஞ்சாலி சபதம், 105)

    என்று சொல்லித் திருப்பி அனுப்புகிறாள். தனது கேள்விக்குப் பதிலளிக்க இயலாமல் திணறும் தேர்ப்பாகனிடம்,

    நாயகர்தாந் தம்மைத்தோற்றபின் - என்னை
         நல்கும் உரிமைஅவர்க்கு இல்லை - புலைத்
    தாயத்தி லேவிலைப் பட்டபின் - என்ன
         சாத்திரத் தால்எனைத் தோற்றிட்டார்?

    (பாஞ்சாலி சபதம், 256)

    (நல்கும் = கொடுக்கும்; புலை = கீழான; தாயத்திலே = பகடை (dice) யிலே

    மூடன் துச்சாதனன் அவள் கூந்தலைப் பற்றிச் சபைக்கு இழுத்துச் செல்கிறான். அங்கும் திரேளபதி கூடியிருந்தோரிடம் நீதி கேட்கிறாள். சாத்திரநூல்கள், 'ஆடவருக்கு ஒப்பில்லை மாதர். ஒருவன் தன் தாரத்தை விற்றிடலாம்; தானம் என வேற்றவர்க்குத் (அயலவருக்குத்) தந்திடலாம்' என்று கூறியிருப்பதால், 'தீங்கு' எனத் தெரிந்தும் 'தடுக்கும் திறம்' இல்லை என வீட்டுமாச்சாரியன் சொல்கிறார். அவமானம், ஆவேசம், இயலாமை அனைத்தும் ஒன்று சேர, வெடிப்புறப் பேசுகிறாள் பாஞ்சாலி:
     

    பேயரசு செய்தால்,பிணந்தின்னும் சாத்திரங்கள்,
    மாயம் உணராத மன்னவனைச் சூதாட
    வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ நேர்மையோ?
    பெண்டிர் தமையுடையீர்; பெண்களுடன் பிறந்தீர்!
    பெண்பாவம் அன்றோ? பெரிய வசை கொள்வீரோ?

    (பாஞ்சாலி சபதம், திரௌபதி சொல்வது 67 )

    என்று தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து ஆவேசமாகக் குரல் எழுப்புகிறாள்.

    இங்ஙனம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடுகின்ற வீரப் பெண்ணாகப் பாஞ்சாலியைப் படைத்துக் காட்டியுள்ளார் பாரதியார். மகாபாரதத்தில் எத்தனையோ பகுதிகள் இருக்கின்றன. ஆயினும், பெண்ணின் எழுச்சியைக் காட்டும் 'சூதுபோர்ச் சருக்கம்' என்னும் பகுதியை எடுத்துக் கொண்டு, 'பாஞ்சாலி சபதம்' என அதற்குப் பெயர் இட்டிருப்பது, பெண்கள் வீறுகொண்டு எழ வேண்டும் என்னும் பாரதியாரின் விருப்பத்தையே வெளிப்படுத்துகிறது. எழுத்தாளர் நா.பார்த்தசாரதி குறிப்பிடுவது போல, "பாரதிக்கு முன்பு மகாபாரதக் கதையைப் பாடிய அத்தனை கவிகளும் பாரதத்தின் எல்லாக் கதாபாத்திரங்கள் மேலும், சிறப்பாகப் பாண்டவர்கள் மேலும் கவனமும் கருணையும் செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் மகாகவி பாரதி பாடிய பாஞ்சாலி சபதத்திலோ கவியின் கவனமும் கருணையும் எல்லாமே பாஞ்சாலியின் மேல் மட்டும் செலுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்" (தமிழகம் தந்த மகாகவி, பக். 306-307).

     

    தன்மதிப்பீடு : வினாக்கள் - 1

    1.

    பாரதியார் சூடிக் கொண்ட புனைபெயர் ஒன்றினைச் சுட்டுக.

    2.

    பெண் விடுதலையைப் பாடுவதற்குப் பாரதியார் பயன்படுத்திக் கொண்ட நாட்டுப்புற இலக்கிய வடிவம் யாது?

    3.

    பாரத மாதா மீது பாரதியார் பாடிய மூன்று பிரபந்தங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

    4.

    பாரதியார் தமது 'ஸ்வதேச கீதங்கள்' நூலினை யாருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்?

    5.

    கற்பு நெறி குறித்துப் பாரதியார் கையாண்டுள்ள புதிய தொடர் யாது?

    6.

    கற்பனைக் கணக்கில் பாரதியார் கையாளும் மக்கள் தொகை எவ்வளவு?

    7.

    புதுமைப் பெண்ணுக்குப் பாரதியார் சூட்டியுள்ள சிறப்புப் பெயர்களுள் நான்கினைச் சுட்டுக.

    8.

    செம்மை மாதரின் குணங்களாகப் பாரதியார் சுட்டுவன யாவை?

    9.

    இளைய நங்கையின் எண்ணமாகப் பாரதியார் கூறுவது யாது?

    10.

    பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்' - யார் கூற்று?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:51:00(இந்திய நேரம்)