தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.3

  • 3.3 இந்துசமயத் தெய்வங்கள் - II

    இந்துசமயத் தெய்வங்களில பராசக்தியைப் பல வடிவங்களில் கண்டு போற்றிய பாரதியார் ஏனைய தெய்வங்களை பாடியிருப்பதை இப்போது காணலாம்

    3.3.1 விநாயகர்

    விநாயகர் சிவபெருமானின் புதல்வர். பாண்டிச்சேரியில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் அங்குள்ள ‘மணக்குள விநாயகர்’ மீது பாடிய பாடலே ‘விநாயகர் நான் மணிமாலை’. இப்பாடல் முறையே வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்ற யாப்பில் அமைந்துள்ளது. அதனால் நான்மணிமாலை என்ற பெயர் பெற்றது. அந்தாதித் தொடையால் ஆனது. (ஒரு பாடலின் இறுதி அடி அல்லது சீர் அடுத்த பாடலுக்குத் தொடக்கமாக வருவது. (அந்தம் = முடிவு, ஆதி = தொடக்கம்) இதில் 40 பாடல்கள் உள்ளன. எனவே நான்மணிமாலை என்று பெயர் பெற்றது.

    விநாயகர் எத்தகையவர்? அவர் சொல்லுக்கு அரியர், சூழ்ச்சிக்கு அரியர், பல உருவாகப் படர்ந்த வான்பொருள், உலகம் காக்கும் சக்தி, ஓம் எனும் பொருளை உள்ளத்தில் நிறுத்திச் சக்தியைக் காப்பவர், எளியவர் (விநாயகர் நான்மணிமாலை - 2) என்றெல்லாம் விநாயகரை அனைத்துமாய்ப் பார்க்கிறார் பாரதியார்.

    விநாயகர் உருவத்திலேயே வைதிகச் சமய கடவுள்களான முருகன், நாராயணன், சிவபெருமான் முதலிய தெய்வங்களை மட்டுமன்றிப் பிறசமயத் தெய்வங்களான அல்லா, யெஹோவா (விநாயகர் நான்மணிமாலை - 8) ஆகியோரையும் காண்பதாய் பாடியிருப்பது, ஒன்றில் பல தெய்வங்களைக் காணும் பாரதியின் பொது நோக்கை, தனித்தன்மையைக் காட்டுகிறது. சக்தியிடம் எல்லாத் தெய்வங்களையும் பார்த்தது போல் விநாயகரிடமும் சிறு தெய்வம், பெருந்தெய்வம் முதலிய அனைவரையும் பார்க்கும் பண்பு பாரதியிடம் உள்ளது. இதை

    பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ!
    ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும்
    தேவா! தேவா! சிவனே! கண்ணா!
    வேலா! சாத்தா! விநாயகா! மாடா!
    இருளா! சூரியா! இந்துவே! சக்தியே
    வாணி! காளி! மாமக ளேயோ!

    (விநாயகர் நான்மணிமாலை - 20)

    என்னும் பாடல் விளக்குகிறது.

    கடவுள் வடிவங்கள் தத்துவங்களே. கடவுள் உறவுமுறை மனிதனின் பாவனைகளே அன்றி வேறல்ல. சிவம் - சக்தி, அம்மை - அப்பன், இலிங்க அமைப்பு எல்லாமே ஒன்றின் பல, பலவின் ஒன்று. உலக இயக்கமே ஆண்மை - பெண்மை அடிப்படையிலேயே விளங்குகின்றது. வழிகள் (சமயம்) பலவாயினும் அவை சேருமிடம் (இறைவன்) ஒன்றே என்ற உணர்வுடையவர் பாரதி என்பதை,

    இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்
    தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய்
    உள்ளொளி யாகி யுலகெலாம் திகழும்
    பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ!

    (விநாயகர் நான்மணிமாலை - 20)

    என்ற பாடல் தெரிவிக்கிறது.

    விநாயகர் நான்மணிமாலை பாடலின் இறுதியில் வெற்றிக்கும் வீரத்திற்கும் வாழ்த்துக் கூறிப் பக்திக்கும், உண்மைக்கும், ஊக்கத்திற்கும் வரவேற்பு கூறுகிறார் பாரதி. மனிதரிடம் உள்ள நல்ல குணங்களே தேவர்கள். யுகங்கள் நான்கு. அவை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பன. பாரதி வாழ்ந்த யுகம் கலியுகம். கலியுகத்தின் தன்மையாக மறம் ஓங்கும், அறம் நீங்கும், கேடு விளையும், நீதி தூங்கும் என்று சான்றோர் கூறியுள்ளனர். கலியுகத்திற்கு அடுத்து வரும் யுகம் கிருதயுகம். யாருக்கும் எக்காலத்தும் துன்பம் வருவதை விரும்பாத பாரதி, இனி வரும் யுகமாகிய கிருதயுகத்தில் எல்லோரும் நன்மை பெற்றுத் தீமை இல்லாமல் வாழ்வதற்கு விநாயகரை வேண்டுகிறார்.

    எல்லாக் கவிஞர்களும் தாம் வாழ்ந்த - வாழும் கால நிலையை மட்டும் பாடினார்கள். பாரதியோ அவர்களையும் மிஞ்சி ஒளிமயமான எதிர்கால யுகத்திற்காக இப்போதே வேண்டுகிறார். யாரிடம் வேண்டுகிறார் ? கற்பக விநாயகரிடம். கற்பகமரம் கேட்டவர்க்குக் கேட்டதைக் கொடுக்கும் தன்மை உடையது. இல்லை என்ற சொல்லுக்கு அங்கு இடமில்லை. ஆகவே, பாரதியார் தாம் கேட்கும் வேண்டுதல்கள் எல்லாம் திண்ணமாய்க் கிடைக்கும் என நம்புகிறார். நம்பிக்கை தானே வாழ்வின் அடிப்படை? எனவே, அந்த நல்ல வாழ்வை அடைய அன்பாகிய தவம் மேற்கொள்ள வேண்டும்.

    வையத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
    இன்புற்று வாழ்தல் இயல்பு

    (விநா-37)

    அதன் மூலம் அனைவரும் இன்புற்று வாழலாம் என்பதை அவர் பாடல்கள் நினைவூட்டுகின்றன.

    3.3.2 முருகன்

    அன்னைப் பராசக்தியின் குழந்தை முருகன். விநாயகரின் தம்பி. முருகன் குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம். பாரதியார் முருகன் மீது முருகா! முருகா!, வேலவன் பாட்டு, முருகன் தூது, முருகன் பாட்டு முதலிய பாடல்கள் பாடியுள்ளார். காந்தியடிகள் 6.4.1919ஆம் நாளை சத்யாக்ரக நாளாகக் கொண்டாட வேண்டுமென்று கூறியிருந்தார். திரு.வி.கலியாண சுந்தரனார் விரும்பியதன் பொருட்டு ‘முருகா’ என்று தொடங்கும் பாடலைப் பாரதி அன்று பாடினார். முருகனின் வேலும் மயிலும் தம்மைப் பாதுகாப்பதாக அவர் நம்பியதை இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

    முருகனை அறிவுத் திருவுருவாக எண்ணிச் ‘சுருதிப் பொருளே வருக’ என்று அழைக்கிறார். முருகனை வேதம் உணர்த்திய குரு, தமிழ்ப் பாவலருக்கு அருள்பவன் என்றெல்லாம் பாடும் பாரதி, அவனை வணங்கினால் பராசக்தி வேண்டிய வரம் தருவாள் என்று முருகனிடம் ஆற்றுப்படுத்துகிறார் (முருகன் பாட்டு - 2). மேலும், முருகனை நினைந்து உள்ளம் உருகப் பாடும் பாரதி,

    அறிவா கியகோ யிலிலே
    அருளா கியதாய் மடிமேல்

    (முருகன் பாட்டு 1-5)

    என்று அறிவைக் கோயிலாகவும் அருளைத் தாயாகவும் உருவகப் படுத்திப் பாடியிருப்பது பக்திச் சுவையுடன் இலக்கியச் சுவையும் கலந்து விளங்குவதைக் காட்டுகிறது.

    3.3.3 கண்ணன்

    வசுதேவனுக்கும் தேவகிக்கும் பிறந்த கண்ணன் ஆயர் பாடியில் நந்த கோபனுக்கும் யசோதைக்கும் மகனாக வளர்ந்தார். பாரதியாரின் முப்பெரும் பாடல்களில் ஒன்று கண்ணன் பாட்டு. அது நீங்கலாகப் பாரதியார் கண்ணன் மீது பாடிய சில பாடல்களும் பக்திப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அவை கண்ணன் பிறப்பு, கண்ணன் வரவு, கண்ணன் துதி, கோவிந்தன் பாட்டு, கண்ணம்மா-1, கண்ணம்மா-2, கண்ணம்மா-3 என்பனவாகும். இப்பாடல்களில் பக்தியுடன், கற்பனையும் கலந்து காணப்படுகின்றது.

    கண்ணனிடம் மிகுந்த பக்தி கொண்டவர் பாரதியார். அவர் கண்ணனுடன் இரண்டறக் கலக்க விரும்பியதைக் ‘கண்ணன் வரவு’ என்ற பாடல் வெளிப்படுத்துகிறது. கண்ணன் தம் அறிவில் ஒளிர வேண்டும், உயிரின் அமுதாய்ப் பொழிய வேண்டும், கருவாய்த் தன்னுள் வளர வேண்டும். தம் உயிரிலே கலக்க வேண்டும், இதயத்தில் அமர வேண்டும் என்றெல்லாம் பாரதி விரும்புகிறார். கலியுகத்தின் இறுதியில் அசுரர்கள் தலைகளைச் சிதறச் செய்யப் படையோடு கண்ணன் எழ வேண்டும் என்று பாடுவது பகவத்கீதையில் கண்ணன்

    "தர்மம் நீங்கி அதர்மம் ஓங்கும் போது தர்மத்தை நிலை நாட்ட அவதரிப்பேன்" என்று பகவத்கீதையில் கூறியதை எதிரொலிப்பது போல் உள்ளது. மேலும்,

    தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா!

    (கண்ணன் வரவு -3)

    என்ற பாடல் அடி சிவபெருமானையும் கண்ணனையும் ஒன்றாகப் பாரதி பார்ப்பதைக் காட்டுகிறது. பாரதியாருக்குத் தெய்வபக்தி என்றால் காளி வழிபாடுதான் என்பதல்ல. காளி, கண்ணன், முருகன் ஆகியோரையும் வழிபட்டார். ஆயினும் உள்பொருள் ஒன்றே என்று அவர் நினைத்தது தெரிகிறது.

    பாரதியாரின் பக்தி கோவிந்தன் பாட்டில் விரிந்து நிற்கிறது. காற்று, வான், பறவை, முகில், மண் போன்ற பலவற்றிலும் கடவுளைக் காணத் துடிக்கும் பாரதி அவருடன் சேரத் துடிக்கிறார். இறைவனும் (பரமாத்மா) உயிரும் (ஜீவாத்மா) வேறுவேறாய் நிற்க இயலாது. நிற்கக் கூடாது. இரண்டும் சேர வேண்டும் என்ற அத்வைதத் தத்துவக் கருத்துக் கொண்டவர் என்பது புலப்படுகிறது.

    கண்ணம்மா

    கண்ணனைப் பாரதியார் கண்ணம்மாவாகப் (பெண்ணாக) பார்த்துக் காதலில் கரைகிறார். இப்பாடல் காதலுக்கு ஓர் இலக்கணமாய் விளங்குகிறது. பெரும்பாலும் தமிழ் இலக்கியத்தில் கடவுளைக் காதலனாகப் பாவித்துப் பாடும் நாயகன் நாயகி - பாவமே காணப்படுகிறது. திருநாவுக்கரசர்,

    முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
          மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

    (தேவாரம் : 6501)

    என்னும் பாடலில் தம்மைப் பெண்ணாகவும் சிவபெருமானை ஆணாகவும் பாவித்துப் பாடுகிறார். இது போல் ஆழ்வார்களும் பாடியிருக்கிறார்கள். ஆனால் பாரதி தம்மை ஆணாகவும் கண்ணனைக் கண்ணம்மா என்ற பெண்ணாகவும் பாவித்து மரபை மாற்றிப் பாடிய நிலையைக் கண்ணம்மாவின் காதல், கண்ணம்மாவின் நினைப்பு ஆகிய பாடல்கள் உணர்த்துகின்றன.

    கண்ணம்மாவைக் கண்ணன் திருமார்பில் இருக்கும் திருமகளாய், சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் பார்வதியாய்ப் பார்க்கிறார்.

    கண்ணன் திருமார்பில் கலந்த கமலைஎன்கோ?
          விண்ணவர் தொழுதிடும் - வீரசிங் காதனத்தே
    நண்ணுச் சிவனுடலை - நாடும் அவள்என்கோ?

    (கண்ணம்மா - 1)

    இவ்வாறு ஒன்றில் பலரை நோக்கும் பாங்கு, மனநிலை பாரதியின் பாடல்களில் காணப்படுகின்றது.

    கண்ணன் அவதாரத்தில் கண்ணன் ஆயர்பாடியில் குழந்தைகளோடு குழந்தையாய் வளர்ந்து வந்த காரணத்தால் பாரதி அவரைத் தந்தையாய், தாயாய், நண்பனாய், சேவகனாய், காதலனாய், தெய்வமாய்க் காண்கிறார். பாரதியின் காலத்திற்கு அந்தச் சொல்லுக்குத் ‘தொண்டன்’ என்று புதுப்பொருள் தருகிறார். இராமபிரான் சக்கரவர்த்தித் திருமகன். ஆகவே, அவரைக் கண்ணனைப்போல் பல உறவு முறைகளில் பாடவில்லை. பாரதியார் இராமனிடம் சாகா வரம் கேட்பதாக ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

    கண்ணம்மாவின் அங்க வர்ணனைப் பாடல் புதுக்கவிதை அமைப்பில் எளிமையாக உள்ளது. புதுக்கவிதைக்கு வித்திட்டவர் பாரதி. சொற்களைக் கையாளும் வித்தைப் பாரதிக்கே உரிய சொத்து என்பதை,

    எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ
    எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப் பூ

    (கண்ணம்மா - அங்கவர்ணனை - பல்லவி)

    என்ற பாடல் அடிகள் உணர்த்துகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 10:31:19(இந்திய நேரம்)