தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1-1:5-பாரதி - தமிழர் வாழ்வு பற்றி

  • 1.5 பாரதி - தமிழர் வாழ்வு பற்றி

    தமிழ்மக்கள் முன்னர் மாண்போடு வாழ்ந்தார்கள்; இப்பொழுது எத்தகைய நிலையில் வாழ்கிறார்கள்? இதனைப் பற்றிப் பாரதி பல பாடல்களில் பாடியுள்ளார். தமிழர்கள் தம் முன்னோர்களைப் போல், மாண்புடையவர்களாக வாழவேண்டும் என்று விரும்பினார் பாரதியார். தமிழர்களுடைய குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும், எத்தகைய ஆற்றல் வாய்ந்தவர்களாக அவர்கள் வாழ வேண்டும் என்பனவற்றையும் கூறுகிறார் பாரதியார்.

    1.5.1 குடும்ப வாழ்க்கை

    தமிழர்கள் கணவன் மனைவியாக வாழும் குடும்ப வாழ்க்கையையே ஓர் அறமாகக் கருதி வாழ்ந்தனர். எனவே குடும்ப வாழ்க்கையை ‘இல்லறம்’ (இல் = வீடு) என்றே அழைத்தனர். அவ்வாறு அறமாகக் கருதி வாழும் வாழ்க்கையில் கணவன் மனைவியாகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர், அன்புடையவராகவும், ஒத்துழைப்பு நல்குபவராகவும், இருக்கவேண்டும். மற்றவர்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் அன்பு, இரக்கம், தியாகம், தொண்டு, பொறுமை ஆகிய நல்ல பண்புகளுடன், திகழவேண்டும். இல்லற வாழ்க்கை மேலும் மேலும் சிறப்பு அடையத் துணை செய்ய வேண்டும் என்பது பாரதியின் கருத்து. இதனை வலியுறுத்தவே,
     

     

    காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, அவன்
         காரியம் யாவினும் கைகொடுத்து
    மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும்
         மாட்சி பெறச் செய்து வாழ்வமடி

          (பல்வகைப்பாடல்கள், பெண்கள் விடுதலைக்கும்மி: 8)

    (கைப்பிடித்த = திருமணம் செய்தே, காரியம = செயல்பாடுகள், கைகொடுத்த = உதவி செய்து, மாதர் = பெண்கள், மாட்சி = மேம்பாடு, )

    என்று குறிப்பிடுகிறார்.

    1.5.2 அறிவு ஆற்றல்

    தொல்காப்பியர், வள்ளுவர், இளங்கோ, கம்பர், ஒளவையார் போன்ற அறிவு ஆற்றல் மிகுந்த சான்றோர்கள் பலர் வாழ்ந்த பெருமைக்கு உரியது தமிழ்நாடு. அந்தச் சான்றோர்களின் வாழ்க்கை முறை, பிறருக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. அத்தகைய சான்றோர்கள் மேலும் உருவாக வேண்டும். அவர்களின் ஆற்றலைப் பிறநாட்டார் பாராட்ட வேண்டும். அதற்கு உரிய மரியாதையைச் செய்ய வேண்டும் என்கிறார் பாரதியார்.

     

    மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
         சொல்வதில்ஓர் மகிமை இல்லை
    திறமான புலமையெனில் வெளிநாட்டார்
         அதை வணக்கம் செய்தல் வேண்டும்

    (தேசியகீதங்கள், தமிழ்: 3)

    தமிழர்கள் தங்கள் பழம்பெருமையைப் பேசுவதில் பெரும் மகிழ்வு கொள்கின்றனர். பெருமையாகக் கருதுகின்றனர். அதிலேயே இன்பங்கண்டு வாழ்கின்றனர். ஆக்கபூர்வமான எந்தச் செயலும் செய்யாமல், பழம்பெருமையைப் பேசுவதிலேயே பொழுதைப் போக்குகின்றனர். அவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களைப் பார்த்தே பாரதியார், இவ்வாறுகூறுகிறார். நமக்குள்ளே நம் பழம் பெருமைகளைப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. இன்றையச் சூழலில் நமக்கு இருக்கும் பெருமை என்ன? உலக மக்களிடம் நமக்கு எந்த இடம் இருக்கிறது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    உலக மக்கள், நம் பழம் பெருமைகளால் நம்மை மதித்ததுபோல், இன்றும் நாம் மதிக்கப்பட வேண்டுமானால், நாம் நம் புலமையை அறிவு ஆற்றலை மேலும் மேலும் வளர்க்க வேண்டும். பிற நாட்டவர் வாழ்த்தி வணங்கிப் பாராட்டும் வகையில் நாம் வாழ வேண்டும் என்று வேண்டுகிறார் பாரதியார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 11:20:13(இந்திய நேரம்)