தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-துறவறம்

  • 1.3 துறவறம்

    சமணத் துறவிகள் இயற்றிய நூலாதலின் துறவறவியல் முதலில் சொல்லப்படுகிறது. வீடுபேறு அடைவதுதான் மனிதப் பிறவியின் உயர்ந்த நோக்கம், அதற்குப் பற்றினை நீக்க வேண்டும். பற்றினை நீக்கத் தவத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்குத் துறந்து செல்வது சிறந்த வழியென்பது சமணர்தம் கோட்பாடு, அதனால் துறத்தல் பெருமை உடைய செயல். அதுபோல் அவர்கள் செய்யும் தவமும் பெருமை உடையது. வலிமை வாய்ந்தது. எந்த அளவுக்கு வலிமை வாய்ந்தது தெரியுமா? விளக்கொளிமுன் கரிய இருள் ஓடுவதுபோல் ஒருவன் தவத்தின் முன் பாவம் நில்லாது ஓடும். அந்த அளவுக்குச் சிறப்பு வாய்ந்தது தவம்.

    1.3.1 துறவிகள் இயல்பு

    துறவிகள் இளமை, அழகு, யாக்கை, செல்வம் ஆகியன நிலைத்து நில்லாதன என்பதனை நன்கு உணர்ந்தவர்கள். அதனால் ‘நான்’ என்னும் அகப்பற்றையும் ‘எனது’ என்னும் புறப்பற்றையும் அறவே நீக்கியவர்கள்.

    முற்றும் துறந்த இவர்கள் மனவலிமை உடையவர்கள். பிறர் தம்மை இகழ்ந்தபோதும் அவர்கள் மீது சினம் கொள்ளாமல் இரக்கம் கொள்வார். ஏன் தெரியுமா? எம்மை இகழ்ந்த தீவினைப்பயனால் அவர்கள் நரகத்தில் சென்று வருந்துவார்களே என்ற நல்ல எண்ணத்தினால் அவர்களுக்காகவும் இரங்கும் கருணையுடையவர்கள். இத்தகைய உயர்ந்த பண்புகளே துறவியர் இயல்பாகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:08:20(இந்திய நேரம்)