தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-தொகுப்புரை

  • 1.8 தொகுப்புரை

    சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் வாழ்க்கைக்குரிய பல அறங்களை எடுத்துரைக்கிறது. இளமையும், செல்வமும் யாக்கையும் நிலைத்தன அல்ல என்பதைப் பல பாடல்கள் எடுத்துரைக்கின்றன. அறம் செய்து வாழ்தலே சிறப்பு என்பதை மனத்தில் பதியுமாறு கூறுகிறது.

    இல்லற இயலில் தனி மனிதனுக்கும், இல்லறத்தார்க்கும் இருக்க வேண்டிய பண்புகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. அரசியலில் ஆட்சியாளருக்கு இருக்க வேண்டிய கல்வி முதலான பண்புகள் வலியுறுத்தப்படுகின்றன. மேன்மக்கள் இயல்பும், பண்பிலார் இயல்பும் பட்டியலிட்டுக் காட்டப்படுகின்றன.

    நட்பின் பல நிலைகளை நயம்பட எடுத்துரைக்கின்றது. இது உயர்ந்தது, இது சிறந்தது, இது கீழானது, இது பயனற்றது என்று வாழ்வியல் மதிப்புகளை மனம் கொள்ளக் கூறுகிறது நாலடியார்.

    சமணத் துறவிகள் இயற்றிய நூல் ஆதலின் துறவுக் கொள்கையையும், வினைகளுக்குப் பயன் பிறவிதோறும் தொடரும் என்ற கொள்கையையும் நூலில் பல இடங்களில் காணலாம்.

    அறக்கோட்பாடுகளைக் கூறும் நூலாக இருந்தாலும் எளிமையான உவமைகளையும் உருவகங்களையும் கொண்டு தான் கூற வந்த கருத்துகளை விளக்கிச் செல்கிறது. எதுகையும் மோனையும் நாலடிப் பாடல்களை இனிமையாகச் சுவை பயக்கும்படி செய்கின்றன. இவற்றால் அற நூலாகிய நாலடியார் அற இலக்கியமாகிப் படிப்போர் உள்ளத்திற்குச் சுவை நல்கி இன்பத்தைத் தருகின்றது என்று கூறலாமல்லவா?

    வாழ்க்கையில் என்றும் நிலைத்திருக்கக் கூடிய உண்மைகளைப் பேசும் திருக்குறளைப் போல் நாலடியாரும் சிறந்து விளங்குகிறது.

    நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

    என்ற பழமொழியும் மேற்கூறியதையே தெளிவாக்குகிறது.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    கல்விச் செல்வத்தின் சிறப்பு யாது?
    2.
    யானை போன்றவரின் நட்பை நீக்க வேண்டும். ஏன்?
    3.
    மூவகை மரங்களில் எவ்வகை மரங்களை மேன் மக்களுக்கு உவமை கூறுகிறது நாலடியார்? ஏன்?
    4.
    சான்றோர் இயல்புகளாக நாலடியார் குறிப்பிடுவன எவை?
புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 12:13:23(இந்திய நேரம்)