தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கலிங்கத்துப்பரணி

  • 1.2 கலிங்கத்துப் பரணி

    பரணி நூல்களில் காலத்தால் முற்பட்டது இந்நூல். முதல் குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்றான். இந்த வெற்றியைச் சிறப்பித்துப் பாடியதே கலிங்கத்துப் பரணி ஆகும். நண்பர்களே இனி வரும் பாடப்பகுதியில் கலிங்கத்துப் பரணி பற்றி மூன்று நிலைகளில் செய்திகளை அறிய இருக்கிறோம்.

    1) கலிங்கத்துப் பரணி - நூலாசிரியர் வரலாறு
    2) கலிங்கத்துப் பரணி - பாட்டுடைத் தலைவன்
    3) கலிங்கத்துப் பரணி - இலக்கியச் சிறப்புகள்

    1.2.1 நூலாசிரியர்

    கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் சயங்கொண்டார் ஆவார் 'பரணிக்கு ஓர் சயங்கொண்டான்' என்று பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இவரைப் பாராட்டி உள்ளார். இவரது இயற்பெயரை அறிய முடியவில்லை. புலவர் பலரும் சொற்போர் நிகழ்த்துவது வழக்கம். இத்தகு சொற்போரில் வென்றதால் இவருக்குச் சயங்கொண்டார் என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பர். இவருடைய ஊர் தீபங் குடி./

    • குலோத்துங்கனும் சயங்கொண்டாரும்

    குலோத்துங்கன் கலிங்கத்துப் போரில் வெற்றி பெற்றான். வெற்றிக்குப் பின்பு சயங்கொண்டாரோடு உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது புலவரை நோக்கி, 'புலவரே! கலிங்கத்தைச் சயங்கொண்டமையால் நானும் சயங்கொண்டான் ஆயினேன்' என்று கூறினான். இதனைக் கேட்ட சயங்கொண்டார் உளம் மகிழ்ந்தார்.

    'அப்படி ஆனால் சயங்கொண்டானைச் சயங்கொண்டான் பாடுவது மிகப் பொருத்தம்' என்று கூறிக் கலிங்கத்துப் பரணியைப் பாடினார் என்பர்.

    • கலிங்கத்துப் பரணியும் பொன் தேங்காயும்

    சயங்கொண்டார் பரணி பாடி முடித்தார். பின்பு குலோத்துங்கன் அவையில் அரங்கேற்றம் செய்யத் தொடங்கினார். அந்தக் காலத்தில் ஒருவர் நூல் செய்தால் பலர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும்; பலரின் ஒப்புதலைப் பெற வேண்டும். இம்மரபினைத் தொல்காப்பிய அரங்கேற்றத்தில் இருந்தே காண்கிறோம்.

    அரங்கேற்றம் செய்யும் காலத்தில் அரசர்கள் புலவர்களுக்குப் பரிசு அளித்துப் பாராட்டுவர். சயங்கொண்டார் பாடலைக் குலோத்துங்கன் சுவைத்தான்; ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன்னால் ஆகிய தேங்காயை உருட்டிக் கவிஞரையும் நூலையும் சிறப்புச் செய்தான்.

    • சயங்கொண்டார் நூல்கள்

    சயங்கொண்டார் புகார் நகரத்து வணிகரைப் புகழ்ந்து 'இசை ஆயிரம்' என்ற நூலைப் பாடி உள்ளார். விழுப்பரையர் மீது 'உலாமடல்' என்ற நூலையும் இயற்றி உள்ளதாகத் தெரிகிறது.

    1.2.2 பாட்டுடைத் தலைவன்

    கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவன் முதல் குலோத்துங்க சோழன். இவன் இராசேந்திர சோழன் மகள் சோழ இளவரசி அம்மங்கைக்கும் சாளுக்கியர் குல இராசராச நரேந்திரனுக்கும் பிறந்தவன். இவன் மாமன் வீரராசேந்திர சோழன் இறந்த பின்பு அவன் மகன் அதிராசேந்திரன் பட்டம் ஏற்றான். இவனும் சில திங்களில் இறந்தான். சோழ நாடு வாரிசு இல்லாமல் குழப்பத்தில் ஆழ்ந்தது. குழப்பத்தை நீக்கச் சாளுக்கியர் குலத்தைச் சேர்ந்த குலோத்துங்கன் பட்டம் ஏற்றான்.

    • பரணி உருவான கதை

    கலிங்கத்துப் பரணி உருவானதற்கான காரணம் பற்றிக் கதை ஒன்று உண்டு. குலோத்துங்கன் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தான். அப்போது தென்னவர், வில்லவர் முதலிய மன்னர்கள் திறை (தோற்ற மன்னர் தன்னை வென்றமன்னர்க்குக் கொடுக்கும் நிதி) செலுத்திப் பணிந்தனர். வட கலிங்க மன்னன் மட்டும் திறை செலுத்தாமல் இருந்தான். இதனை அறிந்த குலோத்துங்கன் சினம் கொண்டான். அவன் சினத்தைக் கண்டு ஏனைய மன்னர்கள் நடுங்கினார்கள். 'வட கலிங்க மன்னனின் அரண்கள் (மதில்கள்) வலிமை உடையனவாம்! அவற்றை அழித்து வாருங்கள்; அவனுடைய யானைகளை வென்று வாருங்கள்' என்று கூறினான். அந்த அளவில் குலோத்துங்கன் தளபதி கருணாகரன் எழுந்து நானே சென்று கலிங்கனை அடக்குவேன் என்று சபதம் இட்டான். பின்னர்க் கலிங்கப் போர் மூண்டது. சோழர்கள் வெற்றி வாகை சூடினர் என்று கதை முடிகிறது.

    • கலிங்கம் வென்ற கருணாகரன்

    குலோத்துங்கனின் படைத்தலைவர்களுள் சிறந்தவன் கலிங்கத்துப் பரணியின் இன்னொரு கதாநாயகன் கருணாகரன் ஆவான். குலோத்துங்கன் ஆணையின்படி கலிங்க நாட்டின் மீது படை எடுத்துச் சென்று அந்நாட்டை அழித்தவன். திருவரங்கன் எனும் இயற்பெயரை உடையவன். 'வேள்' 'தொண்டைமான்' எனும் பட்டங்கள் குலோத்துங்கனால் இவனுக்கு வழங்கப்பட்டன. இவன் பல்லவர் குலத்தைச் சேர்ந்தவன். கலிங்கப் போரினால் குலோத்துங்கனுக்குப் புகழ் தேடித் தந்தான் கருணாகரன்; கருணாகரனுக்குப் பரணியின் வாயிலாகப் புகழ் தேடித் தந்தார் செயங்கொண்டார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 10-08-2017 12:14:21(இந்திய நேரம்)