பள்ளு இலக்கியத்தின் தோற்றம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் 
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பள்ளு இலக்கியத்தின் தோற்றம்

 • 3.1 பள்ளு இலக்கியத்தின் தோற்றம்

  சிற்றிலக்கியங்களுள் பள்ளும், குறவஞ்சியும் தனிச்சிறப்புடையன. தனிச் சிறப்பாவது, எளிய மக்களின் வாழ்வியலைக் காட்டுவது. இதற்கு முன்பு சிற்றிலக்கியங்களில் தெய்வம் அல்லது மன்னன் இடம் பெற்றதை நினைவு கூர்தல் நன்று. சிற்றிலக்கியம் மக்கள் இலக்கியமாக மாறியது பள்ளு, குறவஞ்சி போன்ற இலக்கியங்களில்தாம். அதனால் இவற்றுக்குத் தனிச் சிறப்புண்டு.

  பள்ளு என்றால் என்ன?

  'பள்' என்ற சொல் உகர விகுதி பெற்று பள்ளு என்று ஆகி உள்ளது. பல்லு, கள்ளு, முள்ளு என்ற வழக்காறுகளை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.

  உழவுத் தொழிலுக்குச் சிறந்த இடம் மருதம். இது பயிர்த்தொழில் செய்வதற்குத் தக்கவாறு தண்ணீர் தங்கும் பள்ளமான இடங்களை உடையது. பள்ளங்கள் நிறைந்த இடத்தில் வேலை செய்வோரைப் பள்ளர் என்று குறிப்பிட்டனர். பள்ளர்கள் பாடும் பாடலே பள்ளு என்று கூறுவர்.

  பள்ளு இலக்கியம் பிற்காலத்தில் இலக்கிய வடிவைப் பெற்றாலும் அதன் கூறுகள் பண்டைய இலக்கியங்களிலேயே தென்படுகின்றன. பள்ளு இலக்கியம் முழு வடிவைப் பெறுவதற்குப் பல்வேறு கூறுகள் துணை செய்திருக்க வேண்டும். இவற்றைப் பின்வருமாறு பட்டியல் இடமுடியும்.

  1)

  தொல்காப்பியர் 'புலன்' என்னும் செய்யுள் பற்றிக் கூறும் செய்திகள் பள்ளு இலக்கியத்தின் தோற்றம் பற்றிய செய்திகளோடு ஒத்துள்ளன. புலன் என்பது சேரி மொழிகளால் அதாவது வழக்கு மொழிகளால் புனையப்படுவது. (தொல்.பொருள். 542)

  2)

  தொல்காப்பியர் கூறும் ஏரோர் களவழி எனும் புறத்துறையையும் இங்குக் கூறுதல் வேண்டும். ஏரோர் களவழி என்பது உழவர்களின் நெல்களத்தில் நிகழும் செயல்கள் ஆகும். (தொல்.பொருள். 75)

  3)

  பன்னிருபாட்டியல் கூறும் உழத்திப் பாட்டும் பள்ளு இலக்கியத் தோற்றத்திற்குக் காரணமாகும். உழத்திப் பாட்டு என்பது உழவுப் பெண்களின் பாடல் என்று பொருள்படும்.

  4)

  சிலப்பதிகாரம் சுட்டும் முகவைப் பாட்டு (10:137) (களத்தில் நெல் அடிக்கும்போது பாடும் பாட்டு) ஏர்மங்கலம் (10:135) (முதல் ஏர் பூட்டி ஓட்டும்போது பாடப்படும் மங்கலப்பாட்டு) ஆகியனவும் பள்ளு இலக்கியத் தோற்றத்திற்குக் காரணங்கள்.

  இவ்வாறான கூறுகளே பிற்காலத்தில் இணைந்து பள்ளு இலக்கியமாக உருப்பெற்றன என்று கூறுவார் ந.வீ. செயராமன்.

  • முதற்பள்ளு

  இப்பொழுது கிடைக்கும் பள்ளு இலக்கியங்களில் திருவாரூர் தியாகப் பள்ளு என்பதுதான் முதற்பள்ளு இலக்கியம் என்ற கருத்து உண்டு. முக்கூடற் பள்ளு முதற்பள்ளு என்பாரும் உள்ளனர். 1642-இல் இயற்றப்பட்ட ஞானப் பள்ளே முதற்பள்ளு என்ற கருத்தும் உண்டு.

  சில பள்ளு இலக்கியங்கள் வருமாறு:

  கதிரைப் பள்ளு
  தென்காசிப் பள்ளு
  மோகனப் பள்ளு
  வைசியப் பள்ளு
  வேதாந்தப் பள்ளு
  வையாபுரிப் பள்ளு
  செந்தில் பள்ளு
  சிவ சயிலப் பள்ளு

  இவ்வாறாக ஏராளமான பள்ளு இலக்கியங்கள் தோன்றி உள்ளன. பள்ளு இலக்கிய எண்ணிக்கையை எண்ணி அறிய முடியாது என்பதை

  நெல்லு வகையை எண்ணினாலும்
  பள்ளு வகையை எண்ண முடியா
  து

  என்ற பழமொழி கூறுகின்றது.