தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புலவர்களும் உரையாசிரியர்களும்

  • 3.3 புலவர்களும் உரையாசிரியர்களும்

    ஒட்டக்கூத்தர், அருணகிரிநாதர், காளமேகம் ஆகியோர் தமிழ் இலக்கிய உலகில் மிகச் சிறந்த புலவர்கள். ஒட்டக்கூத்தர் உலா, பரணி போன்ற இலக்கியங்களையும், அருணகிரிநாதர் சந்தப் பாடல்களையும், காளமேகம் பற்பல தனிப் பாடல்களையும் பாடிப் புகழ்கொண்டனர். அவர்களைப் பற்றிச் சில கல்வெட்டுக் குறிப்புகள் கிடைத்துள்ளன.

    3.3.1 இலக்கியப் புலவர்கள்

    புகழ்வாய்ந்த தமிழ் இலக்கியப் புலவர்கள் பற்றிய செய்திகள் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

    • ஒட்டக்கூத்தர்

    ஒட்டக்கூத்தர் கவிச்சக்கரவர்த்தி என்று புகழப்பட்டவர். அவர் ஊர் மலரி என்பதாகும். நன்னிலத்தை அடுத்துள்ள பூந்தோட்டம் என்னும் ஊரை அடுத்துள்ள காவிரிக் கரையில் உள்ள கூத்தனூரில் ‘காணி உடைய மலரி உடையார் கவிச் சக்கரவர்த்திகள் பேரனார் கவிப்பெருமாளான ஓவாத கூத்தனார்’ என்ற கல்வெட்டுக் காணப்படுகிறது. இங்குக் குறிக்கப்பட்ட கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரேவார்.

    • அருணகிரிநாதர்

    அருணகிரிநாதர் தம் பாடலில் பிரபுடதேவமகாராயரையும், சோமநாதன் மடத்தையும் குறிக்கின்றார். திருவண்ணாமலையில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றில் சோமநாத ஜீயர் என்னும் சைவப் பெரியாருக்கு அளித்த கொடை குறிக்கப்பட்டுள்ளது.  அக்கல்வெட்டில் ‘இத்திருக்கோயில் மாடாபத்யக் காணியாட்சியுடைய அம்மையப்பரான சோமநாத ஜீயர்’ என்று காணப்படுகிறது. அவருக்குப் பிரபுடராயர் தன் பெயரால் பிரபுடராயபுரம் என்ற ஊரைத் தானமாக அளித்துள்ளார். திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் என்ற பெயர் பொறித்த கல்வெட்டும் காணப்படுகிறது. இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1370 ஆகும்.

    • காளமேகம்

    விசயநகர மன்னர் விருபாட்சராயர் காலத்தில் (1466 - 1485) தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக நிருவாகம் செய்தவர் திருலைராயர். திருமலைராயரைக் குறிக்கும் கல்வெட்டு திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவிலும், திருவரங்கத்திலும் காணப்படுகிறது. அவர் காலத்தில் எண்ணாயிரம் என்ற ஊரில் கவி காளமேகம் வாழ்ந்தார் என்று கல்வெட்டுப் பாடல் ஒன்று கூறுகிறது.

    3.3.2 இலக்கணப் புலவர்கள்

    இலக்கியத்திலிருந்து தோன்றுவது இலக்கணம். தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவற்றை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பர். அகத்தியர் இயற்றிய அகத்தியம் தொன்மையான தமிழ் இலக்கணம். அதற்குப் பின் அதன் வழிநூலாகத் தொல்காப்பியம் தோன்றியது. பின்னர் ஐந்து இலக்கணங்கட்கும் தனித்தனி நூல்கள் உருவாகின.

    • அகத்தியர்

    தமிழுக்கு முதல் இலக்கண நூல் எழுதியவர் அகத்தியர். அவர் எழுதிய அகத்தியம் இன்று கிடைக்கவில்லை. சில நூற்பாக்களே கிடைத்துள்ளன. அவற்றைப் பண்டைய உரையாசிரியர்கள் சில இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளனர். அகத்தியரைப் பற்றியும், பாண்டியர்கட்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பு பற்றியும் பாண்டியர் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் சில குறிப்புகள் வருகின்றன. ‘அகத்தியனொடு தமிழாய்ந்தும்’, ‘பொருவருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனாகப் பெற்றது’ என்பன தளவாய்புரம், சின்னமனூர்ச் செப்பேட்டு வரிகள்.

    • பவணந்தி முனிவர்

    எழுத்து, சொல் என்ற இரண்டிற்கு இலக்கணம் கூறுவது நன்னூல். அதன் ஆசிரியர் பவணந்தி முனிவர். அவர் கொங்குநாட்டுச் சீனாபுரத்தில் சன்மதி முனிவர் என்பவரின் சீடராகத் தோன்றியவர். நன்னூல் சிறப்புப் பாயிரம் கங்கமன்னன் அமராபரணன் சீயகங்கன் என்னும் குறுநில மன்னன் கேட்க பவணந்தி நன்னூலை இயற்றினார் என்று கூறுகிறது. சீயகங்கன், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (1178 - 1218) வாழ்ந்தவர். சீகாளத்திக் கல்வெட்டில் கங்க குலோத்பவன் சூரநாயகன் திருவேகம்பமுடையான் சீயகங்கன் என்ற கல்வெட்டு உள்ளது. வட ஆர்க்காடு மாவட்டத்தில் ‘பவணந்திபட்டாரகர்’ என்ற பெயர் பொறித்த மூன்று கல்வெட்டுகள் உள்ளன. பவணந்தி, சமண முனிவருள் நந்தி கணத்தைச் சேர்ந்தவர். (கணம் - குழு அல்லது கூட்டம்).

    • குணவீர பண்டிதர்

    குணவீர பண்டிதர் நேமிநாதம், வச்சணந்திமாலை ஆகிய இரு இலக்கண நூல்களை எழுதினார். அவர் வச்சணந்தி முனிவரின் மாணாக்கர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐவர்மலையில் வச்சணந்தி முனிவர் சீடர் ‘குணவீரக் குரவடிகள்’ பெயர் பொறித்த கல்வெட்டு உள்ளது. அக்கல்வெட்டு கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

    • அமிதசாகரர்

    யாப்பு என்னும் தமிழ்க்கவிதை பற்றிய இலக்கண நூல்கள் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்பவை. அவற்றை முதல் குலோத்துங்க சோழன் காலத்தில் (1070 - 1122) இயற்றியவர் அமிதசாகரர் என்பவர். ‘தண்டமிழ் அமித சாகர முனியை, செயங்கொண்ட சோழ மண்டலத்துத் தண்சிறு குன்றக நாட்டகத்து இருத்தி, காரிகை பாடுவித்தவன் கண்டன்மாதவன்’ என்று சோழநாட்டு நீடூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. காரிகைக் குளத்தூர் என்று புலவர் அமிதசாகரர் ஊர்க்குப் பெயர் ஏற்பட்டது.

    3.3.3 உரையாசிரியர்கள்

    ஒரு காலத்துத் தோன்றிய நூலைப் பிற்காலத்து மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் தக்க எடுத்துக்காட்டுகளுடன் உரை எழுதியவர்கள் உரையாசிரியர்கள். இலக்கியங்கட்கும் இலக்கணங்கட்கும் உரை எழுதியவர்கள் பெயர்களைத் தமிழ் இலக்கிய உலகில் விரிவாகக் காணுகிறோம். உரையாசிரியர்கள் உரைகளே தனி நூல்கள் போல் சிறப்புடன் விளங்குகின்றன.

    • சேனாவரையர்

    தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதியவர் சேனாவரையர். ‘வடநூல் கடலை நிலைகண்டு உணர்ந்தவர்’ என்றும், ‘ஆனாமரபின் சேனாவரையர்’ என்றும் புகழப்பட்டவர். ‘புவனேக சுந்தரநல்லூர் அரையன் ஆண்டானான சேனாவரையன்’ எனக் கல்வெட்டில் அவர் பெயரைக் காணுகின்றோம். இக்கல்வெட்டு கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

    • நச்சினார்க்கினியர்

    நச்சினார்க்கினியர், தொல்காப்பியத்தில் உள்ள எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களுக்கும் உரை எழுதியவர். ‘கண்டியதேவரான நச்சினார்க்கினியன்’ என்ற கல்வெட்டுத் தொடரைக் காணுகின்றோம். கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள இக்கல்வெட்டு கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

    • தெய்வச்சிலையார்

    தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய மற்றொரு ஆசிரியர் தெய்வச்சிலையார். அவரும் சேனாவரையர்போல, சொல் அதிகாரத்திற்கு மட்டும் உரை எழுதியுள்ளார். கல்வெட்டுக்களில் ‘தெய்வச்சிலை பட்டன்’, ‘அரையன் தெய்வச்சிலையான் எடுத்தகை அழகியான்’ என்பன போன்ற தொடர்கள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் 13, 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

    • பரிமேலழகர்

    திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியிருப்பினும் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்தது என்பர். காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் என வழங்கும் அருளாளப் பெருமாள் கோயில் கல்வெட்டில் ‘வண்டுவரைப் பெருமாளான பரிமேலழகிய பெருமாள் தாதன்’ என்ற பெயர் காணப்படுகிறது. இக் கல்வெட்டு கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

    • சாமுண்டிதேவர்

    புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலை இயற்றியவர் ஐயன் ஆரிதனார் என்பவர். அதற்கு உரை எழுதியவர் மாகறல் சாமுண்டிதேவர் என்பவர். சீவைகுண்டம் பெருமாள் கோயில் கல்வெட்டில் ‘மாகறல் திருமேற்கோயில் பெருமாளுக்கு இவ்வூர் ஊரங்கிழான் சாமுண்டிதேவன் திருவேகம்பம் உடையான் விளக்கு ஏற்ற ஒரு கழஞ்சு பொன்’ கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 12:15:30(இந்திய நேரம்)