தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சங்க காலச் செய்திகள்

  • 3.5 சங்க காலச் செய்திகள்

    மதுரையிலிருந்து தமிழ் வளர்த்த சங்கம் பற்றியும், சங்ககால இலக்கியங்கள் பற்றியும், மன்னர்கள் பற்றியும், மக்கள் பற்றியும் சில குறிப்புகள் கல்வெட்டுக்களிலும், அவற்றை ஒத்த செப்பேடுகளிலும் காணப்படுகின்றன.

    இராமநாதபுரம் மாவட்டம் எருக்கங்குடிக் கல்வெட்டில் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எட்டி சாத்தன் என்பவன் ‘தமிழ்கெழு கூடல் சங்கப் பலகையில் ஏறி வீற்றிருந்த புலவர்’ வழிவந்தவன் என்று புகழப்படுகின்றான். தளவாய்புரச் செப்பேட்டில் ‘தென் மதுராபுரம் செய்து அங்கதனில் அருந்தமிழ் நற்சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்தும்’ என்றும், வேள்விக்குடிச் செப்பேட்டில் ‘மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்றும் கூறப்படுகின்றன. பாண்டியர்கள் தமிழ்ச்சங்கம் நிறுவியதுடன் மகாபாரதத்தையும் மொழிபெயர்த்துள்ளனர் என்பதை இதன்மூலம் அறிகின்றோம்.
     

    3.5.1 இலக்கியங்கள்

    திருச்சி மாவட்டம் திருவெள்ளறைக் கல்வெட்டில் ‘கண்ணன் செய் பட்டினப்பாலை’ எனக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை பாடிய நிகழ்ச்சி குறிக்கப்படுகிறது. திருவண்ணாமலைக் கல்வெட்டொன்றில் ‘நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பு’ என்ற தொடர் குறிக்கப்படுகிறது. செங்கம் ரிசபேசுவரர் கோயில் கல்வெட்டில் ‘பண்டே மலைகடாம் பாண்டுண்ட மால்வரை’ என்ற தொடர் குறிக்கப்படுகிறது. இவ்விரு தொடர்களிலும் பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் பற்றியும், அதன் பாட்டுடைத் தலைவன் நன்னன் சேய் நன்னன் பற்றியும் குறிப்புகள் வருகின்றன.

    திருச்சி மாவட்டப் புகலூர் அருகில் உள்ள ஆறுநாட்டார் மலை தமிழ்க் கல்வெட்டில் செல்வக்கடுங்கோ வாழியாதன், பாலைபாடிய பெருங்கடுங்கோ, மருதம்பாடிய இளங்கடுங்கோ ஆகிய மூவரின் பெயர்கள் வரிசையாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மூவரும் பதிற்றுப்பத்தினுடைய 7, 8, 9ஆம் பத்துக்குரிய மன்னர்கள் ஆவர்.
     

    ‘மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்ய
    கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
    பெருங்கடுங்கோன் மகன் இளங்
    கடுங்கோ இளங்கோ ஆக அறுத்த கல்’
    என்பது கல்வெட்டு.
     
    3.5.2 பாரி மகளிர்

    திருக்கோவிலூர் கீழூர் வீரட்டானேசுவரர் கோயில் கல்வெட்டில் பாரியின் பெண்களை மலையமானுக்கு அளித்தபின் கபிலர் தீப்பாய்ந்து இறந்த விபரம் கூறப்படுகிறது. அக்கல்வெட்டு உள்ள கல் ‘கபிலக்கல்’ என்று அழைக்கப்பட்டுள்ளது.
     

    ‘முத்தமிழ் நான்மைத்
    தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன்
    மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப்
    பெண்ணை மலையர்க் குதவிப் பெண்ணை
    அலைபுனல் அழுவத்து அந்தரிட் சஞ்செல
    மினல்புகும் விசும்பின் வீடுபேறு எண்ணிக்
    கனல்புகும் கபிலக்கல்’
    என்பது அக்கல்வெட்டாகும்.
     
    3.5.3 மன்னர்கள்

    சங்ககாலத்திலுள்ள மன்னர்களும் பாண்டிய மன்னர்களைப் பற்றியச் செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
     

    • சங்ககாலப் பாண்டியர்

    பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பான பாண்டிய அரசர்கள். இவர்கள் இருவர் பெயரும் கல்வெட்டுகளிலும், பண்டைய எழுத்துப் பொறிப்புக்களிலும் காணப்படுகின்றன.
     

    • வழுதியும் செழியனும்

    வழுதி பெருவழுதி என எழுதப்பட்ட சங்ககாலக் காசு ஒன்று கிடைத்துள்ளது. மாங்குளம் பழந்தமிழ்க் கல்வெட்டில் நெடுஞ்செழியன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. வேள்விக்குடிச் செப்பேட்டில் ‘பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியாதிராசன்’ என்றும், தளவாய்புரச் செப்பேட்டில் ‘ஆலங்கானத்து அமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்திடவும்’ என்றும் இவ்விரு அரசர்களும் குறிக்கப்பட்டுள்ளனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 12:47:46(இந்திய நேரம்)