தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-6.0 பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை

    மாணவர்களே! சிறுபாணாற்றுப்படையின் முதல் ஐந்து பாடங்களில் பத்துப்பாட்டுப் பற்றிய பொதுச் செய்திகள், சிறுபாணாற்றுப்படை பற்றிய அறிமுகச் செய்திகள், பாணனின் வறிய நிலைமை, பரிசு பெற்ற பாணன் பரிசில் பெற விழையும் பாணனுக்கு வழிகாட்டும் திறம் ஆகிய செய்திகளைக் கற்று உணர்ந்தீர்கள். இப்பாடத்தின்கண், சிறுபாணாற்றுப்படையின் இலக்கியத் திறத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். இப்பாடத்தில் சிறுபாணாற்றுப்படையில் உவமை நயம், வருணனைத் திறம், தமிழர் பண்பாட்டில் தலைசிறந்ததாகிய விருந்தோம்பல் உள்ளிட்ட செய்திகள் விளக்கப்படுகின்றன.

    படைப்பின் சிறப்பு

    இலக்கியத்தைக் காலக் கண்ணாடி என்பர். ஏனெனில் இலக்கியங்கள் தம் காலத்துச் சமுதாய நிகழ்வுகளைச் சுற்றி அமைவதே காரணம். புலவன் தன் சமகாலத்துச் செய்திகளை இலக்கியங்களில் பதிவு செய்வான்; இப்பதிவுகளைத் தன் அன்றாட வாழ்க்கை அனுபவத்தினின்றும், தான் கண்ட, கேட்ட செய்திகள், பொருள்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் அமைப்பான்.

    தான் கண்டும் கேட்டும் மகிழ்ந்தும் உணர்ந்த அல்லது அறிந்த செய்திகளை, உள்ளது உள்ளவாறே புலவன் படைத்தளிப்பான் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படியே அளித்தாலும் அவனது படைப்பு இலக்கிய நயம் மிக்கவையாக அமையாது. ஆகையால் தான் கூற விரும்பும் செய்திகள் உண்மைத் தன்மை உடையனவாக இருந்தாலும் அவற்றில் உவமை, கற்பனை உள்ளிட்ட இன்னும் பிறவற்றைக் கலந்து நயம் கூட்டுவான். அப்பொழுதுதான் அவனது படைப்புகள் சுவை மிகுந்தனவாய் இருக்கும். இத்தகைய ஆற்றல் வாயிலாக, படைப்பாளனே காலத்தால் அழியாதவனாய் இருப்பான்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:35:45(இந்திய நேரம்)