தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அகத்திணை ஒழுக்கம்-பொதுப்பார்வை

  • 1.6
    அகத்திணை ஒழுக்கம் - பொதுப்பார்வை

    அகத்திணை ஒழுக்கம் பற்றிய பொதுவான சில செய்திகள் கீழே தொகுத்து வழங்கப்படுகின்றன.

    • ஏழு திணை

    அகப்பொருள் இலக்கண நூல்கள் உணர்த்தும் அகத்திணை ஒழுக்கம் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், கைக்கிளை, பெருந்திணை என ஏழு வகைப்படும். இவற்றுள் முதல் ஐந்தும் தலைவன் - தலைவி ஆகிய இருவரின் ஒத்த அன்பின் வழிப்பட்டவை ; உயர்வுடையவை. கைக்கிளை ஒருபக்கக் காதல் ஆதலால் ஒத்த அன்பு தோன்றுவதில்லை. பெருந்திணையில் பொருத்தம் இன்மை புலப்படும்.

    • பாலது ஆணை

    எத்தனையோ பேரைப் பார்த்தாலும் ஒருவரைப் பார்க்கும் போது மட்டுமே காதல் உணர்வு தோன்றுகிறது. இது பால் அல்லது தெய்வம் அல்லது விதியின் ஆணையால் நிகழ்வது என அகப்பொருள் கூறுகிறது. (பால் = ஊழ், கடவுள்)

    • களவும் கற்பும்

    அகத்திணை பற்றிய வாழ்வியல் கூறுகளைக் களவு, கற்பு என இருபெரும் பிரிவுகளில் வழங்குவர். களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியா வண்ணம் தம் காதலை மறைத்து இயங்குவது. கற்பு என்பது பிறர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் இல்லற வாழ்க்கை. களவு கற்பொழுக்கமாக மாறும்; அதற்குக் காதலர்களின் விருப்பம் மட்டுமன்றித் துணைவர்களின் உதவியும் தேவைப்படும்.

    • அறத்தொடு நிற்றல்

    களவு ஒழுக்கத்தைக் கற்பு அறமாக ஆக்கும் அருஞ்செயல் ‘அறத்தொடு நிற்றல்’ வழி நிகழும். அக ஒழுக்கத்தின் இன்றியமையாத கூறு அது! அதற்குத் தோழி முதலான மாந்தர்கள் துணை நிற்பர். தலைவன் - தலைவி திருமணத்தை நோக்கமாகக் கொண்டு அவர்களின் களவுக் காதலைப் பெற்றோர்க்கு வெளிப்படுத்துவது ‘அறத்தொடு நிற்றல்’ ஆகும்.

    • கந்தர்வமும் களவும்

    இத்தகு அகத்திணைக் களவொழுக்கத்தை வடநூல் மரபில் சொல்லப்படும் கந்தர்வத்தோடு ஒப்பிடுவர். கந்தர்வம் கொடுப்பாரும் கேட்பாரும் இன்றித் தலைவனும் தலைவியும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடுவது. எனினும் வேறுபாடு உண்டு; கந்தர்வம் கற்பு (மணவாழ்வு) இன்றியும் அமையும்; தமிழ் வழிக் களவுக்குக் கற்பு இன்றியமையாதது. களவு கற்பாவதே முழுமை.

    • முப்பொருள்

    அக ஒழுக்கத்தைப் பாடும் பாடல்களில் தலைவன் - தலைவி காதல் உணர்வுகளையும் பேச்சுகளையும், அவை நிகழும் இடம், காலம், பின்னணி ஆகியவற்றையும் மூன்று பொருள்கள் கொண்டு புலவர்கள் வெளிப்படுத்துவர். அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன.

    • முதற் பொருள்

    முதற்பொருள் என்பது நிலமும் பொழுதும் ஆகும். இது ஐந்து வகை நிலங்களையும் (குறிஞ்சி, முல்லை முதலியன) காலப் பகுதிகளையும் குறிப்பிடுவது. வேனில் முதலிய பருவங்களும், (பெரும்பொழுது) காலை மாலை முதலிய ஒரு நாளின் பகுதிகளும் (சிறுபொழுது) இதில் அடங்கும்.

    • கருப்பொருள்

    ஐவகை நிலப்பகுதிகள் ஒவ்வொன்றிலும் வாழும் மக்கள் அவர்களது பழக்கங்கள், அங்குள்ள பறவை, விலங்கு, மரம், மக்கள் செய்யும் தொழில், அவர்கள் வணங்கும் தெய்வம் முதலியவற்றைக் கருப்பொருள் என்று குறிப்பிடுவார்கள். அகப்பொருள் பாடல்களில் இவை பின்புலமாக அமையும்.

    • உரிப்பொருள்

    தலைவனும் தலைவியும் கூடுதல், பிரிதல், எதிர்பார்த்துக் காத்திருத்தல், காலம் நீடிக்கும்போது வருந்துதல், தலைவனிடம் தலைவி ஊடல் கொள்ளுதல் ஆகியவை உரிப்பொருள் எனப்படும். உரிப்பொருளாகிய வாழ்க்கை ஒழுக்கமே மூன்று பொருள்களிலும் முதன்மை பெறும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 03-11-2017 17:46:02(இந்திய நேரம்)