தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வரைவு கடாதல்

  • 6.2
    வரைவு கடாதல் (திருமணம் செய்து கொள்ள வேண்டுதல்)

    களவு வாழ்க்கையைத் தொடர வழியின்றி - காதல் உறவு நிலைக்க வழிதேடும் தலைவியும் தோழியும் வரைவு (திருமணத்தின்) மீது விருப்பம் கொள்வர். அவ்விருப்பத்தைத் தலைவனிடமும் புலப்படுத்தி வலியுறுத்துவர். அவனை நேரடியாகவோ, குறிப்பாகவோ மணம் செய்து கொள்ளுமாறு கேட்பர். இதுவே வரைவு கடாதல் எனப்படும்.

    தலைவனை மணம் செய்து கொள்ளுமாறு வேண்டும் வரைவு கடாதல் நான்கு வகைப்பாடுகளை உடையது. அவையாவன:

    1. பொய்த்தல்
    2. மறுத்தல்
    3. கழறல்
    4. மெய்த்தல்
    • பொய்த்தல்

    தலைவன் தலைவியை மணந்து கொள்ளும்படி செய்ய நினைத்த தோழி தலைவனிடம் பொய்யான சில செய்திகளைத் தானே புனைந்து கூறுவாள். இது பொய்த்தல் எனப்படும்.

    • மறுத்தல்

    தலைவன் பகற்குறி அல்லது இரவுக்குறியில் தலைவியைச் சந்திக்க வருவதைத் தோழி வெளிப்படையாகவோ குறிப்பாகவோ மறுத்துப் பேசுதல் மறுத்தல் எனப்படும்.

    • கழறல்

    கழறல் - சொல்லுதல்; நேரடியாகச் சொல்லுதல், ‘நீ தலைவியை மணந்து கொள்ளாமல் தொடர்ந்து களவு முறையிலேயே இருத்தல் உன் நாட்டுக்கு ஏற்றதன்று; உயர் பண்பும் அன்று’ என்று தோழி தலைவனிடம் நேரடியாகக் கூறுதல் கழறல் எனப்படும்.

    • மெய்த்தல்

    மெய் - உண்மை; மெய்த்தல் - உண்மையானவற்றைக் கூறுதல். தோழி தலைவனுக்கு உண்மைத் தன்மையை (உண்மையிலேயே தலைவிக்கு உள்ள சூழலைக்) கூறுதல் மெய்த்தல் எனப்படும்.

    தலைவனிடம் திருமணத்தை வலியுறுத்தித் தோழி பேசும் வரைவு கடாதல் மேற்சொன்ன நான்கு வகைப்பாடுகளை உடையது. அவ்வகைப்பாடுகளின் அடிப்படையில் அது பல்வேறு விரிவுச் செய்திகளையும் உடையது.

    வினவிய செவிலிக்கு மறைத்தமை தலைவர்க்குத் தோழி விளம்பல் முதலாகக் கவின் அழிவு உரைத்தல் ஈறாகச் சொல்லப்பட்ட இருபதும் வரைவு கடாதலின் விரிவுச் செய்திகள் ஆகும். இவ்விருபது விரிவுச் செய்திகளும் தோழி தலைவனிடம் கூறுவதாகவே அமைந்துள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இனி அவ்விரிவுச் செய்திகளை மேற்கண்ட வகைப்பாடுகளின் அடிப்படையில் பிரித்துக் காண்போம்.

    • பொய்த்தலுக்கு உரியவை
    1. தலைவியின் களவு ஒழுக்கம் பற்றிச் செவிலி வினவியதாகவும், ஆனால், தான் அதை மறைத்துப் பேசியதாகவும் தோழி கூறுதல்.
    2. ஊரார் தலைவியைத் தூற்றும் பழிச்சொல் (அலர்) மிகுந்துவிட்டது எனல்.
    3. தாய், களவு ஒழுக்கத்தை அறிந்து கொண்டாள் எனல்.
    4. தாய், வெறியாட்டு நிகழ்த்தும் வேலனைக் கொண்டு உண்மையறிய முயன்றாள் எனல்.
    5. அயலார், தலைவியைப் பெண் கேட்டு வந்தனர் எனல்.
    • மறுத்தலுக்கு உரியவை
    1. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்த தலைவனை வேறு ஒரு நேரத்தில் வருக என்று திருப்பி அனுப்புதல்.
    2. பகலில் வரும் தலைவனை இரவில் வா எனல்.
    3. இரவில் வரும் தலைவனைப் பகலில் வா எனல்.
    4. தலைவனைப் பகலிலும் இரவிலும் வா எனல்.
    5. தலைவனைப் பகலிலும் இரவிலும் வாராதே எனல்.

    • கழறலுக்கு உரியவை

    கழறல் - இடித்துக் கூறுதல். தலைவனின் நாடு, ஊர், குலம், மரபு, புகழ், வாய்மை, நல்வினை முதலானவற்றின் பெருமைகளைக் கூறி, நீ தலைவியை மணந்து கொள்ளாமல் இருப்பது முறையன்று என நேரடியாகக் கூறுதல்.

    • மெய்த்தலுக்கு உரியவை
    1. தலைவனிடம் ‘நீ வரைவு கூறி எம் நகர்க்கு வா; அவ்வாறு வந்தால் எம் உறவினர் எதிர்கொண்டு வருவர்’ எனல்.
    2. தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கு உரிய காலம் (பருவம்) வந்துவிட்டது எனல்.
    3. தலைவன் வரும் வழியில் விலங்குகளால் ஏற்படக் கூடிய அச்சத்தைச் சுட்டிக் காட்டி வரைவு வற்புறுத்துதல்.
    4. பிரிவைப் பொறுத்துக் கொள்ள முடியாத தலைவியின் துன்பத்தைப் போக்கும் விதத்தில் திருமணம் செய்துகொள் என வற்புறுத்துதல்.
    5. குறியிடத்தில் சந்திப்பதற்கு இடையூறாகக் காவல் மிகுந்துள்ளது என்று கூறுதல்.
    6. தலைவிக்குக் காமவேட்கை அதிகமானது என்று கூறுதல்.
    7. தலைவிக்குக் கனவினால் வந்த துன்பத்தைக் கூறுதல்.
    8. தலைவியின் அழகு, தலைவனின் பிரிவினால் கெட்டது எனக் கூறுதல்.
    தன் மதிப்பீடு : வினாக்கள்-I
    1.
    வரைதல் வேட்கை என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

    2.
    வரைதல் வேட்கையில் அச்சத்திற்குரிய விரிவுச் செய்திகள் யாவை?

    3.
    வரைவு கடாதல் என்றால் என்ன? அதன் வகைகள் எத்தனை?

    4.
    பின் வருவனவற்றிற்கு விளக்கம் தருக.(1) உவர்த்தல் (2) ஆற்றாமை (3) பொய்த்தல் (4) கழறல்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-11-2017 18:04:53(இந்திய நேரம்)