தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒருவழித் தணத்தல்

  • 6.3
    ஒருவழித் தணத்தல்

    தணத்தல் - பிரிந்து இருத்தல். தலைவியின் களவு ஒழுக்கம் ஊரார்க்குத் தெரிந்து பலரும் அது பற்றி இழித்தும், பழித்தும் பேசும் அலர் ஏற்படும். அதனால் ‘தலைவியை உடன் மணந்து கொள்க பருவமும் வந்துவிட்டது’ என்று தோழி வரைவு கடாதல் மூலம் வற்புறுத்துவாள். பலர் தூற்றும் அலர் மறைய நான் எனது ஊருக்கு ஒரு முறை சென்று சில காலம் தங்கித் திரும்புகிறேன் என்று கூறித் தலைவன் பிரிந்து செல்வான். அவன் பகற்குறியிலும், இரவுக் குறியிலும் வருவதைத் தவிர்ப்பான். அதுவே ஒருவழித் தணத்தல் எனப்படும்.

    ஒரு வழித்தணத்தல் ஏழு வகைப்படும். அவையாவன:

    1. செலவு அறிவுறுத்தல்
    2. செலவு உடன்படாமை
    3. செலவு உடன்படுத்தல்
    4. செலவு உடன்படுதல்
    5. சென்றுழிக் கலங்கல்
    6. தேற்றி ஆற்றுவித்தல்
    7. வந்துழி நொந்துரை
    • செலவு அறிவுறுத்தல்
    • தற்காலிகப் பிரிவாகச் சில காலம் குறியிடங்களில் சந்திப்பதைத் தவிர்த்துத் தன் ஊருக்கு சென்று வர இருப்பதைத் தலைவன் தோழியிடம் கூறுதலும், தோழி தலைவியிடம் கூறுதலும் செலவு அறிவுறுத்தல் ஆகும்.

      • செலவு உடன்படாமை

      தலைவன் ஒருவழித் தணத்தலாகத் தன் ஊருக்குச் செல்வதைத் தோழி உடன்படாமல் தடுத்தல் செலவு உடன்படாமை எனப்படும்.

      • செலவு உடன்படுத்தல்

      தற்போது உள்ள சூழலில் ஒருவழித்தணத்தலாகத் தான் பிரிந்து செல்ல வேண்டியது இன்றியமையாதது என்று கூறித் தலைவன் தோழியை உடன்படச் செய்வது செலவு உடன்படுத்தல் எனப்படும்.

      • செலவு உடன்படுதல்

      ஒருவழித் தணத்தலாகத் தான் பிரிந்து செல்ல வேண்டியது இன்றியமையாதது என்று தலைவன் உணர்த்த, அதை உணர்ந்த தோழி அப்பிரிவுக்கு உடன்படுவது செலவு உடன்படுதல் எனப்படும்.

      • சென்றுழிக் கலங்கல்

      தலைவன் ஒருவழித் தணத்தலாகப் பிரிந்து சென்றபோது அப்பிரிவைத் தாங்க இயலாத தலைவி மனம்கலங்கிப் பேசுதல் சென்றுழிக் கலங்கல் எனப்படும்.

      • தேற்றி ஆற்றுவித்தல்

      மனம் கலங்கிய தலைவிக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் அறிவுரைச் சொற்களைக் கூறி, தோழி தலைவியின் துயர் நீக்குதல் தேற்றி ஆற்றுவித்தல் எனப்படும்.

      • வந்துழி நொந்துரை

      ஒருவழித் தணத்தலாகிய தற்காலிகப் பிரிவு முடிந்து, திரும்பி வந்த தலைவனிடம் தோழி வருந்திப் பேசுதலும், அவ்வாறே தலைவிக்கும் தோழிக்கும் தன் பிரிவால் ஏற்பட்ட துன்பம் பற்றித் தலைவன் வருந்திப் பேசுதலும் வந்துழி நொந்துரை எனப்படும்.

    தலைவன் தன் ஊருக்குச் சென்று தங்குதல் ஒரு வழித் தணத்தல் ஆகும் என்றும் அது ஏழு வகைப்படும் என்றும் கண்டோம். அதுவே 12 வகைப்பட்ட விரிவுச் செய்திகளையும் உடையது. அவற்றை மேற்கண்ட ஏழு வகைப்பாடுகளின் கீழ்ப் பிரித்துக் காண்போம்.

    • செலவு அறிவுறுத்தலுக்கு உரியவை
    1. தலைவன் தன் ஊருக்குச் செல்வதைத் தோழியிடம் கூறுதல்.
    2. தலைவன் ஒருவழித் தணத்தலாகப் பிரிவு மேற்கொண்டதைத் தோழி தலைவிக்குச் சொல்லுதல்.
    • செலவு உடன்படாமைக்கு உரியது
    1. தலைவன் ஒருவழித்தணத்தலாகப் பிரிந்து தன் ஊருக்குச் செல்வதைத் தோழி தடுத்தல்.
    • செலவு உடன்படுத்தலுக்கு உரியது
    1. தலைவன் தனது பிரிவு இன்றியமையாதது என்று வேண்டிக் கூறித் தோழியை உடன்படுத்துதல்.
    • செலவு உடன்படுதலுக்கு உரியது
    1. தலைவனின் வேண்டுகோளை ஏற்ற தோழி அவ்வாறே ஒருவழித் தணத்தல் மேற்கொள்ள இசைந்து அனுப்பி வைத்தல்.
    • சென்றுழிக் கலங்கலுக்கு உரியவை
    1. தலைவன் பிரிவை எண்ணிய தலைவி தன் நெஞ்சிடம் வருந்திப் பேசுதல்.
    2. பிரிந்த தலைவன் உடன் திரும்பாமல் காலம் நீட்டித்தபோது, அதனால் மிகுந்த காமம் காரணமாகத் தலைவி பேசுதல்.
    • தேற்றி ஆற்றுவித்தலுக்கு உரியவை
    1. காமம் மிக்க துயரால் வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தல்.
    2. பிரிவு முடிந்து தலைவன் திரும்பிவர அதனைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.
    • வந்துழி நொந்துரைக்கு உரியவை
    1. திரும்பி வந்த தலைவனிடம் தோழி வருத்தம் புலப்படுத்திப் பேசுதல்.
    2. தலைவிக்குத் தன் பிரிவு தந்த துயருக்காகத் தலைவன் வருந்தித் தோழியிடம் பேசுதல்.
    3. தலைவியின் பெரிய துயரை ஆற்றுவித்து அரிய உயிரைக் காத்திருந்த (காவல் செய்த) தன்மை இது எனத் தோழி தலைவனிடம் கூறுதல்.
புதுப்பிக்கபட்ட நாள் : 04-11-2017 17:57:52(இந்திய நேரம்)