Primary tabs
-
5.2 நால்வகைப்பாவும் அடிவரையறையும்
தொல்காப்பியர் தமது செய்யுளியலில் ஆறுவகைப் பாக்களைக் கூறுகின்றார். அவை 1.வெண்பா 2. அகவற்பா 3.கலிப்பா 4.வஞ்சிப்பா 5. பரிபாடல் 6. மருட்பா.
இவற்றுள் பரிபாடல் என்னும் இசைப்பாவைப் பாடுபவர் நாளடைவில் அருகிவிட்டனர். அருகியமைக்கான காரணம், இசையும் நாடகமும் காமத்தைத் தூண்டுவன என்று அவற்றைப் பேணாமல் புறந்தள்ளியவர்கள் அரியணை ஏறியமை ஆகலாம். புரப்பார் இல்லாமையால் இசைப்பாவாகிய பரிபாடலைப் பாடுவோர் இலராயினர். மருட்பா என்பது வெண்பாவும் ஆசிரியப்பாவும் எனக் கலந்து பாடப்பெறும் கலவைப்பாடல் ஆகும். எனவே இன்று பாவகைகளில் சிறப்பின இவை எஞ்சிய நான்கே.
கவிஞர்கள் தாம் சொல்லவந்த கருத்து, சொல்லும் திறன் அமைக்க வேண்டிய நெறி ஆகியவற்றை மனத்தில் கொண்டே தமது கவிதைகளைப் படைக்கின்றனர். அவர்கள் தம் கவிதைகளைச் ‘செவிநுகர் கனி’களாக்கக் கற்பனைகளையும் ஆளவேண்டியுள்ளது. ஆகலின், பாடலின் அடியெல்லைகள் வேறுபடுகின்றன. எனினும், இன்ன இன்ன பாவினை இன்ன இன்ன அடிவரையில் பாடுதல் வேண்டும் என்றும் விதித்தனர். விதித்தவை சிற்றெல்லை எனப்பட்டன. ‘சிற்றெல்லை’ எனவே, ‘எடுத்த மொழிஇனம் செப்பலும் உரித்தே’ என்றபடிக்கொப்பப் ‘பேரெல்லை’ என்பதொன்றும் உண்டு என்பதும் பெறப்படுகின்றது. இது, அருத்தாபத்தி. இனிப் பாக்களின் சிற்றெல்லை, பேரெல்லை ஆகிய இரண்டைப் பற்றிப் படிப்போம்.
5.2.1 சிற்றெல்லை, பேரெல்லை - வேண்டுமா?
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையேஎன்று பாடிவைத்தால், இது, நேரிசை ஆசிரியப்பா என்று வரையறுக்க முடியாது. மேலும், கலிப்பாவின் வஞ்சிப்பாவின் சுரிதகம் போலும் என்று எண்ண வேண்டியும் வரும்.
கொடியவாலன குருநிறத்தன குறுந்தாளை
..... ..... .....
..... ..... .....
பயில்படுவினை பத்தியலாற் செப்பினோன்
புனையெனத்
திருவுறு திருந்தடி திசைதொழ
வெருவுறு நாற்கதி வீடுநனி யெளிதேஎனவரும் இவ்வஞ்சிப்பாவின் சுரிதகத்தொடு மேல்சொன்ன ‘ஒருவன் ..... ..... முறையே’ என்ற அடிகளை வைத்துப்பாருங்கள். மருட்கை பிறக்கும். மற்றும் மருட்பாவின் பின்னிரண்டு அடிகளாகவும் தோன்றும்.
திருநுதல் வேரரும்பும் தேங்கோதை வாடும்
இருநிலம் சேவடியும் தோயும்-அரிபரந்த
போகிதழ் உண்கணும் இமைக்கும்
ஆகும் மற்றிவள் அகலிடத் தணங்கேஇம்மருட்பாவின் இறுதி இரண்டடிகளைப் பாருங்கள். தடுமாற்றத்திற்கான தடயம் தெரியும்.
நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகமும் முகிழ்த்தன முறையேஎன்றவாறு முதலில் (தலைப்பில்) ஓரடியைச் சேர்த்துவிட்டால், தெளிவாக இந்தப்பாடல் நேரிசை ஆசிரியப்பா என இனம் பிரித்து அறியலாம். இனிய மாணாக்கர்களே! இதனால், சிற்றெல்லையும் கொள்ளவேண்டியமையை உணர்வீர்கள்.
நாரா யணனை நராயணன்என் றேகம்பன்
ஓராமல் சொன்ன உறுதியால் - நேராக
வார்என்றால் வர்என்பேன் வாள் என்றால் வள் என்பேன்
நார்என்றால் நர்என்பேன் நான்’இது காளமேகப் புலவரின் பாட்டு. இதனைக் கம்பர் மேற்கொண்ட குறுக்கல் விகாரத்தை (நாராயணன்->நராயணன்) ஏளனம் செய்து காளமேகம் பாடியதாகக் கருதுவதைவிடத் தமிழிலக்கிய உலகம் கவிஞர்களுக்குக் கொடுத்துள்ள சலுகையாகக் கருதலாம். தொல்காப்பியர் கூறும் செய்யுள் விகாரங்கள் உள்ளிட்டுச் செய்யுட்கென அமைக்கும் நூற்பாக் கருத்துகள் எல்லாமும் கவிஞர்களுக்கு வழங்கிய சலுகை தாமே? ‘பாண!’ என முன்னிலை ஒருமையில் தொடங்கிப் ‘பெறுகுவிர்’ என முன்னிலைப் பன்மையில் முடிக்கலாம் என உரிமை தருகின்றாரே தொல்காப்பியர். என்னே
சலுகை.முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி
பன்மையொடு முடியினும் வரைநிலை இன்றே:
ஆற்றுப்படை மருங்கில் போற்றல் வேண்டும்இவற்றையெல்லாம் உட்கொண்டவர்கள்போல யாப்பிலக்கண நூலாரும் செய்யுள் யாக்கும் புலவனது கற்பனைக்கும் அவனது உள்ளத்து உணர்வுக்கும் தடையிருத்தலாகாது எனக் கருதி இவ்வளவு அடிகளில்தான் பாடவேண்டுமென எல்லையை வைக்கவில்லை.
5.2.2 நால்வகைப் பாக்களுக்கான சிற்றெல்லை
வெண்பா முதலான நான்குவகைப் பாக்களுக்கான சிற்றெல்லையை அஃதாவது, குறைந்த அடி எவ்வளவு என்பதை இனிப் பார்க்கலாம்.
- வெண்பா சிற்றெல்லை
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானொ டூர்ந்தான் இடைஇது வெண்பா. இரண்டு அடிகளை உடையதாய் வந்துள்ளது. ஆதலால் குறள் வெண்பா எனப் பெறுவது. எனவே, வெண்பாவின் சிற்றெல்லை இரண்டடி. இரண்டடியின் குறைந்து பாடல் அமைவதில்லை. ஆத்திசூடி போன்றவற்றில் ஓரடியும் பாடலடியாக வந்துள்ளதே என நீங்கள் வினவலாம். அதற்கு விடை, அவை நூற்பா யாப்பு வகையின என்பதே ஆகும்.
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை
இது குறள் வெண்பாவின் இனமான குறள் வெண் செந்துறை.
வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
பண்டையள் அல்லள் படி.இது சந்தம் குறைந்த குறள் வெண்பா. யாப்பிலக்கணத்தார் இதனைக் குறட்டாழிசை என்பர். இதுவும் குறள் வெண்பாவின் இனம்.
ஆக, வெண்பாவின் சிற்றெல்லை இரண்டடியே.
- ஆசிரியப்பாவின் சிற்றெல்லை
முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
மலையன் ஒள்வேல் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந் தனளேஇது நேரிசை ஆசிரியப்பா. மூன்றடியால் வந்துள்ளது. இதனை விடக் குறைந்த அடியால் வந்தால், என்ன பா என்றோ, இன்ன பாவில் இவ்வகைப்பா என்றோ பிரித்தறிய முடியாது. இவையெல்லாம் ஒருசேர அறிய குறைந்த அளவு மூன்றடிகளாவது வேண்டும். எனவே, ஆசிரியப் பாவின் சிற்றெல்லை மூன்றடி.
- கலிப்பாவின் சிற்றெல்லை
கலிப்பா குறைந்தது நான்கடிகளை உடையதாய் வரும். நான்கடிகளினும் குறைந்து கலிப்பா வாராது.
செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினஆழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லல்ஓங்கு எழில்யானை மருமம்பாய்ந்(து) ஒளித்ததேஇது தரவு கொச்சகக் கலிப்பா; நான்கடியால் வந்துள்ளது. கலிப்பாவின் சிற்றெல்லை நான்கடி.
அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவும் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவும் தவிர்ந்து ஏனைய கலிப்பாக்களுக்குத் தரவு மூன்றடியே சிறுமை என்பது ஒழிபியலில் காணப்படுவதாம். தரவு கொச்சகக் கலிப்பாவுக்குத் தரவு நான்கடிச் சிறுமை என்பது கொண்டு, ‘செல்வப் போர்க் கதக்கண்ணன்’ என்னும் தொடக்கத்த பாடல் சான்றாகத் தரப்பட்டது.
- வஞ்சிப்பாவின் சிற்றெல்லை
வஞ்சிப்பா கலிப்பாவைப்போலத் துணை உறுப்புகளை உடையது. துணை உறுப்புகள் தனிச்சொல்லும் சுரிதகமும் ஆம். வஞ்சிப்பா ஒன்றைக் காண்போம்.
‘செங்கண்மேதி கரும்புழக்கி
அங்கண்நீலத் தலர்அருந்திப்
பொழிற்காஞ்சி நிழல்துயிலும்
செழுநீர்
நல்வயல் கழனி யூரன்
புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே’-இப்பாடல் குறளடி வஞ்சிப்பா. குறளடி என்னும் இருசீர்களால் ஆகிய மூன்று அடிகளைக் கொண்டுள்ளது. ‘செழுநீர்’ என்ற தனிச்சொல்லையும் அதாவது துணை உறுப்பையும் சுரிதகம் என்னும் துணை உறுப்பையும் நீக்கி, எஞ்சியதையே வஞ்சிப்பா எனக் கொண்டு அடிகளைக் கணக்கிட வேண்டும்.
பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி
வேந்தன்புகழ் பரவாதவர் வினைவெல்லார்
அதனால்.
அறிவன தடியிணைப் பரவிப்
பெறுகுவர் யாவரும் பிறவியில் நெறியேஇது சிந்தடி வஞ்சிப்பா. முச்சீரடியான் (சிந்தடியான்) இயன்ற அடிகள் இரண்டைக் கொண்டுள்ளது. இதனை நோக்க வஞ்சிப்பாவின் சிற்றெல்லை இரண்டடி என்றாகின்றது.
வஞ்சிப்பா மூன்றடிச் சிறுமையை உடையது என்பவர் அமிதசாகரர். இவர் ‘வெள்ளைக்கு இரண்டு அடி; வஞ்சிக்கு மூன்றடி... இழிபு’ என்றே குறிப்பிட்டுள்ளார்.
வஞ்சிப்பா இரண்டடிச் சிறுமையை உடையது என்பவர் மயேச்சுரர். மயேச்சுரரின் கருத்தை ஏற்க விரும்பிய உரையாசிரியராகிய குணசாகரர், நான்கு பாக்களுக்குரிய அடியின் சிறுமையும் பெருமையும் சொல்ல வந்த காரிகைக் சூத்திரம், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற முறைமையில் நிறுத்திச் சொல்லாமல் வெண்பா, வஞ்சிப்பா, அகவற்பா, கலிப்பா என்று முறைமாற்றிச் சொல்வதைக் காண்கின்றார். கண்டு, இங்ஙனம் முறைமாற்றித் தலை தடுமாற்றமாக உரைத்தது ஒரு கருத்தைச் சொல்வதற்காகத்தான் என்று கொண்டு ‘மயேச்சுரர் முதலாகிய ஒரு சார் ஆசிரியர் வஞ்சிப்பா இரண்டடியானும் வரப்பெறும் என்றார்’ என்று சொல்லித் தழுவிக் (ஏற்றுக்) கொள்கின்றார்.
மூல நூலாசிரியரின் கருத்துப்படி வஞ்சிப்பாவின் அடிச்சிற்றெல்லை மூன்று என்றே கொள்வோம்.
5.2.3. நால்வகைப் பாக்களுக்கான பேரெல்லைஇரண்டடிச் சிற்றெல்லையது வெண்பா; மூன்றடிச் சிற்றெல்லையை உடையன ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும்; நான்கடிச் சிற்றெல்லையை உடையது கலிப்பா என்று வரையறுத்துக் கூறியவாறு இந்நான்கு வகைப்பாடல்களையும் எவ்வளவு அடிப்பெருமையில் பாடலாம் என்ற வரையறை இல்லை. அதாவது, கீழ் எல்லை சொல்ல முடிகின்றது மீ எல்லையாகிய மேல் எல்லையைக் கூற முடியவில்லை. நால்வகைப் பாவிற்கும் உரிய அடிகளின் மேல் எல்லை, பாடுவோரின் உள்ளத்தின் எல்லை என்றுதான் அமையவேண்டும்.
குறள்இரு சீரடி; சிந்துமுச் சீரடி; நாலொருசீர்
அறைதரு காலை அளவொடு நேரடி; ஐயொருசீர்
நிறைதரு பாதம் நெடிலடி யாம்;நெடு மென்பணைத்தோள்
கறைகெழு வேற்கண்நல் லாய்! மிக்க பாதம் கழிநெடிலே’,எனவும்,
வெள்ளைக்கு இரண்டடி; வஞ்சிக்கு மூன்றடி; மூன்று
அகவற்கு
எள்ளப் படாக்கலிக்கு ஈரிரண் டாகும், இழிபு;
உரைப்போர்
உள்ளக் கருத்தின் அளவே பெருமை;ஒண்
போதுஅலைத்த
கள்ளக் கரும்நெடும் கண்சுரி மென்குழல் காரிகையேஎனவும் வரும் இவ்விரண்டு காரிகைச் சூத்திரங்கள் தந்த செய்திகளே மேல் நாம் பார்த்தன எல்லாமும்.