தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கானல் - புதினம்

  • 4.2 கானல் - புதினம்

    1983-இல் கானல் என்ற நாவலின் முதற்பதிப்பு 1986-இல் தமிழகத்தில் வெளிவந்தது. இரண்டாம் பதிப்பு 1993-இல் கொழும்புவில் வெளிவந்தது. கானல் என்ற புதினத்தின் கதைக்கரு, கதாபாத்திரங்கள், கதைப்பின்னல், கதைச்சுருக்கம், சமுதாயச் சிந்தனைகள் ஆகியவற்றோடு இந்நாவலில் கையாளும் உத்திமுறைகளைப் பற்றியும் இங்கு விரிவாகக் காணலாம்.

    பரம்பரை பரம்பரையாக சைவ மதத்தையே தழுவி வந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் இடைக்காலத்தில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றினர். அதன் மூலம் தங்கள் அவல வாழ்வை விடுவிக்க முற்பட்டனர். இதன் மூலம் ஏற்பட்ட பலாபலன்களைச் சித்தரிப்பது தான் இந்த நாவலின் கதைக்கருவாகும். “இந்நாவல் எனது இலக்கிய நோக்குக்கு அமைய சாதாரண வாசகனாலும், கருப்பொருளையும் ஏனையவற்றையும் மகிழ்வோடு புரிந்து அனுபவிக்கக் கூடிய விதத்திலேயே பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதனை நான் இங்கு துணிந்து கூறுவேன்” என்று இந்நாவலின் முன்னுரையில் டானியல் குறிப்பிட்டுள்ளார்.

    இது இவரது ஐந்தாவது புதினம். காலமெல்லாம் எந்த மக்களின் ஆட்சி அதிகாரத்திற்காகத் தன் பேனாவையும், ஆன்மாவையும் அர்ப்பணித்தாரோ, அந்தப் பஞ்சம மக்களுக்காக, தோழர் டானியல் அவர்கள் தன்னுடைய படைப்பில் தான் பிறந்த, வாழ்ந்த கிராமத்தையும் அங்கு வாழ்ந்த மக்களையும், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களையும் கதைமாந்தர்களாகக் கொண்டு இந்த நாவலைப் படைத்துள்ளார்.

    4.2.1 கதைச்சுருக்கம்

    நன்னியன் ஒரு பண்ணை வேலையாள், வேதக்கோயில் அடியார், சுப்பு என்கிற இளையமோன், சிமியோன் என்னும் வைரவன், பொடியன் ஆகிய மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் நன்னியனிடம் வந்து, “ஒரு வேதக்கோயில் கட்டுவதற்கு” யோசனை கேட்கிறார்கள். நன்னியன் ஒப்பவில்லை. ‘பத்து வருசத்துக்கு முன்பு உங்கடை ஊருக்கை ஒரு வேதக் கோயிலைக் கட்டி நீங்கள் பட்ட பாடுகளை மறந்து விட்டீர்களா? பண்ணையார் உங்க வீடுகளுக்குத் தீ வைத்து, உங்களைத் தங்கள் நிலங்களிலும் இறங்க விடவில்லை!’ என ஆட்சேபிக்கிறான்.

    நன்னியனின் நில முதலாளி தம்பாப்பிள்ளைக்கும் இச்செய்தி எட்டுகிறது. அதைப் பற்றி முதலாளி கேட்கிறார்; இல்லை என்று நன்னியன் மறுக்கிறான். நன்னியனின் மகள் சின்னி, பண்ணையார் தம்பாப்பிள்ளையின் தங்கை வீட்டு வேலைக்காரி. தங்கையின் மகன் அவளைப் பாலியல் பலாத்காரம் செய்ததால், “அவளை இனி அங்கு அனுப்பமாட்டேன்” என நன்னியனும் அவனது இரு மகன்களும் மறுக்கிறார்கள்.

    • நன்னியன் குடும்பம்

    நன்னியன் - செல்லி தம்பதிகளுக்கு சின்னி என்ற பெண்ணும், இளையவன் என்ற மகனும் உண்டு. நன்னியனுக்கு இன்னொரு மூத்த மகனும் இருந்தான். மூத்த தாரத்து மகன்; அவனுடைய மனைவி பொன்னி; இவர்களுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களில் யாருமே சின்னியைப் பண்ணைக்காரியின் வீட்டுக்கு அனுப்ப ஒப்புக்கொள்ளவில்லை.

    • தகராறும் கொலைகளும்

    தன் தங்கையின் வீட்டுக்குச் சின்னியை அனுப்பும்படி தம்பாப்பிள்ளை வந்து அழைக்க, நன்னியன் மறுக்கிறார், அதனால் கோபம் அடைந்த, பண்ணையார் நன்னியனை அடிக்கிறான். நன்னியனின் மூத்த மகன் பாளைக்கத்தியுடன் ஓடிவர தம்பாப்பிள்ளை ஓடி மறைகிறார். பின்பு ஆளனுப்பி, நன்னியனை மரத்தில் கட்டி வைத்து, கர்ணனும் அவரும் அடிக்கிறார்கள். இதனைக் கேட்ட மூத்தவனும் இளையவனும் தம்பாப்பிள்ளை வீட்டில், கர்ணனை வெட்டி வீழ்த்துகிறார்கள்; இதனால் கொதிப்படைந்து பண்ணைக்காரர்கள் பண்ணை விவசாயிகளின் வீடுகளைக் கொளுத்தி, நன்னியனின் மனைவி செல்லியையும் துப்பாக்கியால் சுடுகிறார்கள். செல்லி செத்து விழுகிறாள். குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

    • விசாரணையும் தீர்ப்பும்

    மணியக்காரருக்குத் தகவல் போகிறது. விசாரணையில் “நன்னியனின் மகன்கள் இருவரும் கர்ணனை வெட்டிக் கொன்றார்கள்” என்று முடிவாகிறது. செல்லியைச் சுட்டவனை யாரும் பார்க்கவில்லை. கோயில் பாதிரியாரே நன்னியனையும் அவனது இரு மகன்களையும் போலீஸில் ஒப்படைக்கிறார்.

    • மதமாற்றம்

    நன்னியன் - மூத்தவன் - இளையவன் மூவரும் சிறையில் இருக்கும் போதே சின்னி, வேத மதத்தில் சேர்ந்து திரேசி என்ற புதுப்பெயர் பெறுகிறாள். அவளுக்குத் திருமணமும் முடிகிறது. அவள் ஆசிர்வாதப்பர் கோயில் மூப்பர் மகன் சிமியோனை, திருமணம் செய்து கொள்கிறாள். அத்துடன் விவசாயக் கூலிகள் அனைவரும் மதம் மாறவும் சம்மதித்து, இலவச உழைப்பு மூலம் புதுக்கோயிலையும் கட்டி முடிக்கிறார்கள். ஊர்க்காரப் பெரிய மனிதர்கள் இரவில் கோயிலை இடிக்க முயலவும், அதற்கும் காவல் இருக்கிறார்கள். ஒரு தடவை திரேசி தன்னந்தனியாகக் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் போது, நான்கைந்து பேர் அவள் தாவணியையும் சட்டையையும் கிழித்து அவமானப்படுத்தினர். உடனே, தாழ்த்தப்பட்டவர்கள் மெழுகு வர்த்தியுடன் ஊருக்குள் ஊர்வலம் செல்கிறார்கள். ஒட்டு மொத்தமாக எல்லோரும் கிறிஸ்தவர்களாகவும் மதம் மாறுகிறார்கள்.

    • கைதும் விடுதலையும்

    இதற்கிடையே தம்பாப்பிள்ளை தன் மனைவி வெள்ளச்சியைக் கொன்று, ‘இயற்கையான சாவு’ என்று மணியக்காரருடனும் மருத்துவருடனும் சேர்ந்து கொலையை மறைக்க முயலுகிறார்கள். தாழ்த்தப்பட்ட ஒருவனால் உண்மை வெளிப்பட்டு, அவர் கைதாகிறார். ஏற்கனவே தூக்குத்தண்டனை பெற்ற தந்தை - மகன்களில், இளையவன் மட்டும் விடுதலையாகி வருகிறான்; தூக்குத்தண்டனையும் குறைக்கப்பட்டு, நன்னியனும் பெரியவனும் கூட நன்னடத்தை, விடுமுறை என்ற நடைமுறைச் சலுகைகளால் கூடிய விரைவில் விடுதலை ஆவார்கள் என எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. இளையவனும் கிறிஸ்தவனானான்.

    • கலப்புத் திருமணம்

    கிறிஸ்தவனாக மதம் மாறிய தம்பன் என்ற மேட்டுக்குடியான் புதிதாக யாக்கோபு என்ற பெயரைச் சூட்டிக் கொண்டவன் பூக்கண்டரின் மூத்த மகளை விரும்பினான். பூக்கண்டரின் மனைவிக்கும் இதில் விருப்பம் தான். அவள் பெயர் சரஸ்வதி. அவளும் மதம்மாறி லூர்தம்மா என்று புதுப்பெயர் பெறுகிறாள். சாதிவிட்டு சாதி நடக்கும் இந்தத் திருமணத்தினால் ஊரே குழப்பத்திற்குள்ளானது. பூக்கண்டரின் மனைவி மக்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள். பெரிய கலட்டியின் மாதா கோயில் இப்பொழுது புதுப்பொலிவு பெற்றுவிட்டது. காலை - மாலை எந்த வேளையிலும் பலர் வந்து போகத் தொடங்கினர். இப்படி பல சாதியினரும் அங்கம் வகிக்கும் பெரும் கோயிலாக மாதா கோயில் இரண்டு வருடத்தில் மாறிவிட்டது.

    • சாதி வேற்றுமை

    பூக்கண்டரின் மகன் பெரிய கலட்டி கேணியில் குளித்ததற்காக, உபதேசியார் அடித்ததையும், குருவானவர் குளிப்பதற்குச் சின்னக்கலட்டி தண்ணீர் தராமல் மேல் சாதிக்காரரான பூக்கண்டர் வீட்டுக்கிணற்றிலிருந்து தண்ணீர் தந்ததையும் இணைத்து, இங்கேயே இன்னும் சாதி வேற்றுமை மாயவில்லை என்கிறார் பூக்கண்டர். அவர் மருமகன் யாக்கோபு, எங்களை ஊர்களில், கோவிலுக்குள், எல்லாச் சாதியையும் சேர்ந்து அமர அனுமதிப்பதில்லை என்கிறான். இந்த ஊரைச் சேர்ந்த (தாழ்ந்த சாதி) கிறிஸ்தவர்கள் இடதுபுறமாகவும், வெளியூரைச் சேர்ந்த (உயர்ந்த சாதி) கிறிஸ்தவர்கள் வலதுபுறமாகவும் அமரும்படி எல்லாம் வல்ல கர்த்தரின் பெயரால்” கேட்டுக்கொள்கிறார் பாதிரியார்.

    இந்துக்களாக இருந்த பொழுது எத்தகைய சாதி வேறுபாடுகள் இருந்தனவோ, அதே போல்தான் கிறித்தவ மதம் மாறிய பின்னரும் சாதி வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை இக்கதை கூறுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:28:46(இந்திய நேரம்)