தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாவலில் கையாளும் உத்திகள்

  • 4.5 நாவலில் கையாளும் உத்திகள்

    நாவலில் கையாளும் உத்திகளால் நாவல் தனிசிறப்பைப் பெறுகிறது. உத்தி நுணுக்கங்களே நாவலை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. உத்தி மூலம் ஆசிரியரின் மொழித்திறனும் எழுத்தாற்றலும் வெளிப்படுவதோடு அல்லாமல் கலைப்படைப்பும் சிறப்புறுகின்றது. நாவலின் தலைப்பு, எழுத்து நடை, வர்ணனை, சொல்லாட்சி, உவமைகள் ஆகியவற்றில் உத்தி நுணுக்கங்களை இங்குக் காணலாம்.

    • நாவலின் தலைப்பு

     

    நாவலின் தலைப்பான கானல் என்பது, கதைக்கருவை உருவக முறையில் குறிப்பாகப் புலப்படுத்துகிறது. மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் வறுமையை நீக்க முயலும் முயற்சியானது கானல் நீராகவே உள்ளது என்பதை இந்த நாவலின் தலைப்பு மையப்படுத்துகிறது.

    4.5.1 மொழிநடை

    ஒரு நாவலுக்குச் சிறப்பு சேர்ப்பனவற்றுள் ஒன்று, ஆசிரியர் கையாளும் நடையே ஆகும். நாவல் இலக்கிய உலகில் டானியலின் நடை, தனித்தன்மை வாய்ந்தது. இந்நாவலில் யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள மக்களின் பேச்சுவழக்குச் சொற்களைக் காணமுடிகிறது.

    பூக்கண்டரின் மைத்துனன் மாதாகோயில் கட்டுவதற்கு இடம் தருவதற்கு இசைவு தெரிவிக்கிறார். அதை விரும்பாத விதானையார் பூக்கண்டரிடம் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதற்குப் பூக்கண்டார்,

    “விதானையார், நான் மச்சானுக்கு எழுதித்தான் மச்சான் ஓமெண்டு முற்றுச் சொன்னவர். நான் அந்த முற்றை ஞானமுத்து சுவாமிக்குச் சொல்லிப் போட்டன். இனி நான் மாறமாட்டன். உங்கடை இந்த வில்லங்கங்களிலிருந்து நளவன், பள்ளன், பறையன், வண்ணான், அம்பட்டன் இதாலை விடுபடுவாங்கள் எண்டால் அவங்கள் கோயில் கட்டட்டன். உங்களுக்கு என்ன இடைஞ்சல்? ஏன் விதானையார், இளவாலையிலை, பண்டத்தரிப்பிலை; சில்லாலையிலை, அச்சுவேலியிலை.... இப்பிடிப் பல இடங்களிலை வெள்ளாளரும் வேதத்திலை சேருகினம், ஏன் உந்த உப்பிமாலடியிலை, நவாலியிலை, நாவாந்துறையிலை, ஆனைக் கோட்டையிலை இருக்கிற கரையாள் திமிலன், முக்கியன் எண்டு பல சாதியளும் சேர்ந்திருக்கினம். அதுக்கென்ன இவங்கள் சேந்தா? சும்மா வேலைமினக்கெட்டு உதைக்கதைக்க வந்திட்டியார்? எனக்குத் தெரியுது விதானையார்... சொன்னாச் சொன்னது தான்! காணியை நான் மறிக்க மாட்டன்” என்று பதில் கூறுகிறார். நாவலின் சில இடங்களில் படிக்காத பாமரமக்கள் பேசுகின்ற கொச்சைத் தமிழும் இடம் பெற்றுள்ளது.

    4.5.2 வர்ணனை

    நாவலில் இடம் பெறும் வர்ணனைகள் கதையோடு பொருந்தியதாக அமைந்திருக்க வேண்டும். அவ்வகையில் இந்நாவலில் தோட்டக்கரை காளிகோயில் திருவிழாவிற்காகக் காளாஞ்சி கட்டும் நிகழ்ச்சியைப் பின்வருமாறு வர்ணனை செய்துள்ளார் ஆசிரியர்.

    கோவிலுக்கு முன்னால் மூன்று தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. சாமிக்கூத்திலிருந்து தெர்ப்பை, சந்தனம், குங்குமம் திருநீறு, பிரசாதம் ஆகிய அடுக்கப்பட்ட ஏழு வெற்றிலைச் சுருள்களை எடுத்துக் கொண்டு பெருங்குடும்பி ஐயர் வெளியே வந்தார். “காளாஞ்சிக்காரர், எல்லாம் சரியோ?” என்று ஐயர் கேட்ட போது, தம்பாப்பிள்ளை ஒரு முறை எல்லோரையும் சுற்றிப் பார்த்துவிட்டு கை விரல்களை மடக்கி கணக்கெடுத்துக் கொண்டார். கட்டாடி பகுதி வந்திட்டுது ! பரியாரி பகுதி வந்திட்டுது ! தச்சபகுதி வந்திட்டுது ! பள்ள பகுதி வந்திட்டுது ! தச்சபகுதி வந்திட்டுது ! எங்கடை பகுதியும் சரி! நளவப்பகுதிக்கை இருந்துதான் நன்னியனைக் காணேல்லை என்று தம்பாப்பிள்ளை முணுமுணுத்துக் கொண்டார். சந்து இருளுக்குள் நின்ற நன்னியன். நான் இஞ்சை நிக்கிறனாக்கும் என்று சொல்லிக் கொண்டே சற்று வெளிச்சம் பட வந்து நின்றான். மேலே குறிப்பிட்ட வர்ணனையில் முதல் கொடியேற்றத் திருவிழாக் காளாஞ்சிக்காரர் தம்பாப்பிள்ளை என்பதும் மற்றவர்களெல்லாம் அந்த ஊரிலுள்ள சாதிப்பிரிவினர் என்பதும் வெளிப்படுகிறது.

    நல்ல நேரம் பார்த்து, நாள் பார்த்து புகையிலை நாற்று நடும் காட்சி பின்வருமாறு வர்ணனை செய்யப்பட்டுள்ளது.

    “கமக்காரன் புறப்பட்டு விட்டான். நாற்றுக் கடகத்துடன் நன்னியன் பின்னால் நடந்தான். படலைக் கேற்றுவரை நகுலனும் வழியனுப்ப வந்து நின்றுவிட்டது. கிழக்குப்பக்க வடக்கு மூலை ! முதல் பாத்தி சிறு வரம்பு மூலையில் நாற்று புதைக்க வேண்டும். பட்டைத் தண்ணியைச் செழிக்க ஊற்றி, அந்த மென் வெளிச்சத்திலும் செழித்த புகையிலைக் கன்றுகளைத் தெரிந்தெடுத்த நன்னியன் மேற்கு வானைப்பார்த்து வெள்ளிக்கணக்கை சரிகண்டு நேரம் சரி கமக்காரன் நன்னியன் நாத்தை ஊண்டப் போறானாக்கும் ! என்றான். உனக்கும் நேரக்கணக்கு விளங்குது ! நேரம் சரி ஊண்டு ! என்று கமக்காரன் விடை கொடுத்து விட்டார். பூமியைத் தொட்டு கண்களில் ஏற்றிக்கொண்டு நன்னியன் முதல் நாற்றை ஊன்றிவிட்டான். இவ்வாறு புகையிலை நடும் காட்சி வர்ணனை ஆக்கப்பட்டுள்ளது. மேலும்,

    “செவந்திப் பூவின் நடுவில் இருக்கும் மஞ்சள் நிறத்தின் மினுமினுப்பு; புழுதிநிறமான பெருத்த அள்ளி முடியப்பட்ட கூந்தல்! கபில நிறமான கண்கள் வளவளப்பான மகரந்தச் சொண்டு! எடுப்பான நெஞ்சுக் கும்பிகள்! சுருக்கம் விழுந்த கழுத்து! மார்பை இறுக்கி முடியப்பட்ட சட்டை, அரை மட்டத்திற்குக் கீழாக வயிற்று நெறி தெரியக்கூடியதாக விரிந்து கட்டப்பட்ட பாவாடை. இவ்வாறு தம்பாப்பிள்ளையின் மகள் செவ்வந்தி நாச்சியாரின் தோற்றம் வருணிக்கப்பட்டுள்ளது.

    4.5.3 உவமை

    டானியல் கையாண்டுள்ள உவமைகளில் சிலவற்றை இங்குக் காணலாம். தோட்டத்துக்குச் சென்ற நன்னியன் வழக்கத்திற்கு மாறாகத் தாமதமாகத் தன் குடிலுக்கு வந்தான். வந்தவுடன் தினைக்கஞ்சி குடிக்கப் போகாமல் எதுவும் பேசாமல் குடத்தடிக்குப் போனான். பொச்சுமட்டை அணைப்பில் இருந்த மண்குடத்தை சரித்துப் பிடித்துக் கொண்டே இருந்து விட்டான். நன்னியன் குடத்தடியில் வெகுநேரம் இருந்ததைக் கவனித்த அவன் மனைவி செல்லி

    “இஞ்சை என்ன கல்லுப் பிள்ளையார் போல இருக்கிறாய்...... ....... கஞ்சி ஆறப்போகுது...” என்று குரல் வைத்தாள். இப்படி ஒரு உவமை நன்னியனின் நிலையை விளக்க வருகிறது. எந்த இயக்கமுமில்லாமலிருப்பதைப் பார்த்து, கல்லுப் பிள்ளையார்போல அசைவற்று இருக்கிறாயே என்று குறிப்பிடுகிறார்.

    மகள் சின்னியை நயினாத்தி வீட்டில் மீண்டும் வீட்டு வேலைக்குக் கொண்டுவிட மறுக்கும் செல்லி,

    “நீ சொல்லிற கதை எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்லை. நான் இதுக்குச் சம்மதியன், அவளை இனி ஓரிடமும் விடுகிறேல்லை. எங்கடை வறுமை எங்கேளாடை; பஞ்சம் போனாலும் பஞ்சத்திலே பட்ட வடுப்போகா தெண்டு என்றை ஆத்தை (அம்மா) நெடுகலும் சொல்லுவா” என்று தெரிவிக்கிறாள். இதில் வறுமை போனாலும் வறுமையில் அனுபவித்த துன்பம் நெஞ்சில் வடுவாகப் பதிந்து இருக்கும் என்பதை இந்த உவமை விளக்குகிறது.

    புண் ஆறும்; வடுஆறாது. வள்ளுவரும், தீயினால்பட்ட புண் ஆறும், வடு ஆறாது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதையே தான், தன் மகள் கெடுக்கப்பட்டதை - இழந்த கற்பை மீண்டும் பெறமுடியாது என்பதை இந்த அழகிய உவமை மூலம் விளக்குவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

    தம்பாப்பிள்ளை மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு காவலர்களுக்குத் தெரியாமல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யும் பொழுது, திடீரென்று “வெண்ணெய் திரளும் பொழுது தாழி உடைந்தாற்போல” போலீஸ் வாகனம் வந்தது என்று ஓர் உவமை மூலம் ஆசிரியர் அந்தக் காட்சியைக் குறிப்பிடுகிறார். இதுபோன்று சில உவமைகளே இந்த நாவலில் இடம் பெற்றுள்ளன.

    • உருவகம்

    ஆசிரியர் உவமைகளைக் கையாண்டிருப்பது போல உருவகங்களையும் எடுத்தாண்டுள்ளார். பூக்கண்டர் “இந்த இரணியனுக்கு இப்படி ஒரு தெய்வப்பிறவி பொஞ்சாதியாக வந்தாளே! என்று பல தடவை வாய்திறந்து சொல்வதுண்டு. தீய குணம் படைத்த தம்பாப்பிள்ளைக்கு நல்லகுணம் படைத்த வெள்ளச்சியம்மாள் மனைவியாக வந்து மாட்டிக் கொண்டதையும், தம்பாப்பிள்ளையை இரணியனாகவும் உருவகித்துள்ளார். இதே போன்று ஒருசில உருவகங்கள் இந்த நாவலில் இடம் பெற்றுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:29:14(இந்திய நேரம்)